Saturday, June 12, 2010

யாழ்ப்பாணம்: மீள் குடியேற்றம் என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம்-06

'முகாம்களிலிருந்து விடுதலையே தவிர.. மீள்குடியேற்றம் என்று எதுவுமே இல்லை'
மீள்குடியேற்றம் என்ற பெயரில் வவுனியா மெனிக் பாம் முகாமிவிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75,000 பேரினதும் வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது. வுன்னிப் போரின்போது இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாம்களில் அடைக்கப்பட்ட சுமார் 3,00,000 பேரில் சுமார் 2,20,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 75,000 பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சுமார் 80,000 பேர் முகாம்களிலேயே தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். 
மீள்குடியேற்றம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட 75,000 பேருடைய நிலை எவ்வாறாக இருக்கின்றது என்பது எமது யாழ்ப்பாண விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.  யுhழ்ப்பாணத்திலுள்ள அரசம ற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பாகப் பேசி தகவல்களை அறிந்துகொள்ள முயன்றோம்.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் அமைப்பான அரசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராக உள்ள சி.வி.கே.சிவஞானத்தை யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். யாழ்ப்பாணத்தில் செயற்படும் 24 அரச சார்பற்ற அமைப்புக்கள் இந்த இணையத்தில் அங்கத்துவர்களாக உள்ளனர். இதில் உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சிவஞானம் தெரிவிக்கின்றார். 
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்த சிவஞானம், அரசாங்க அதிபரின் திட்டங்களுக்கு அமைவாக அவருடன் இணைந்ததாகவே இந்தச் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார். 
1,75,000 அகதிகள்
யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேட்டபோது, யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்கள், அதாவது உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேர் இருப்பதாகத் தெரிவித்த சிவஞானம், வன்னியிலிருந்து சமீப மாதங்களில் இடம்பெயர்ந்து வந்த சுமார் 75,000 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் சுமார் 1,75,000 பேர் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்களுடைய மீள்குடியேற்றப்பணிகள் எவ்வாறுள்ளது, அதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் இந்த மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதற்கு எந்தளவுக்கு உதவுவதாக இருக்கின்றது என அவரிடம் கேட்ட போது அதற்கு அவர் நீண்ட விளக்கம் ஒன்றைத் தந்தார்:
'மீள்குடியேற்றம் என்று சொல்லிக்கொண்டாலும் கூட, முகாம்களில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்களே தவிர மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறமுடியாது. பெரிய அளவில் இவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு யு.என்.எச்.சீ.ஆர். அமைப்பினால் குடியிருப்புக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பத்தில் ஐயாயிரமும், பின்னர் 20,000 மும் கொடுக்கப்பட்டது. உணவுப் பொருட்களைப் பொறுத்தவரையில் உலக உணவுத் திட்டம் தான் இவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குகின்றது. 
வன்னியிலிருந்து வந்தவர்களை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மீள்குடியேற்றப்பட்டவர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இவர்களில் பலருக்கு இன்னும் இருப்பதற்கான இடவசதி இல்லை. வீட்டு வசதி இல்லை. இதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவை எதுவும் இல்லாமல்தான் அனைவரும் உள்ளனர். இதனைவிட இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான தொழில் வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை. இதற்கான திட்டமங்களும் இல்லை.
இவ்விடயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு, ஒழுங்குபடுத்தல் என்பதைத் தவிர நிதிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. முகவர் அமைப்புக்கள், அர சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து வழங்கும் உதவிகளைத் தவிர, அரசாங்க நிதி எனக் குறிப்பிடக்கூடியளவுக்கு இந்தப் பணியில் எதுவும் இல்லை. இந்த மக்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமாயின் இவர்கள் தொடர்ந்தும் வாழக்கூடியவகையில் வீட்டு வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் கொடுக்கும் 25,000 ரூபாவை வைத்துக்கொண்டு இதனைச் செய்துவிட முடியாது. திட்டமிடப்பட்ட முறையில் இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும். 
முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கான வசதிகள் இருக்கின்ற போதிலும், போக்குவரத்து வசதியீனங்களால் அதனைச் செய்ய முடியாதிருக்கின்றது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பக்கூடியளவுக்காவது பெற்றோhர் பொருளாதார வசதிகளைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தொழிலைச் செய்யக்கூடிய வசதி இல்லை. 
இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தொழிலைச் செய்யக்கூடிய நிலைமையை ஏற்படுத்தினால் மட்டும்தான் மீள்குடியேற்றம் அல்லது மீள்வாழ்க்கை என்ற நிலை உருவாகும். உதாரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களில் சிலர் விவசாயம் செய்பவர்கள். இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான நிலம் வழங்கப்பட்டால்தான் அதனை அவர்கள் செய்து தமது குடும்பங்களின் ஜீவனோபாயத்தை சமாளிக்க முடியும். ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது நிலங்களுக்கு இவர்கள் செல்ல முடியாதுள்ளது. இதேபோலத்தான் இடம்பெயர்ந்து வந்த கடற்றொழிலாளர்களின் நிலையும் உள்ளது' என சி.வி.கே.சிவஞானம் விளக்கமளித்தார். 
நிவாரணத்தையே நம்பியுள்ள மக்கள்
யாழ்ப்பாணத்தில் 1,75,000 இடம்பெயர்ந்த மக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.. இவர்கள் அனைவரும் நிவாரணங்களைத்தான் நம்பியுள்ளார்களா? அல்லது சுயமாக தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளும் நிலையில் உள்ளனரா என சிவஞானத்திடம் கேட்டபோது, இவர்கள் பெரும்பாலும் நிவாரணத்தை நம்பியவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டுமே அவர்கள் தமது வாழ்வாதாரங்களைப் பார்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். தற்போது வழங்கப்படும் நிவாரணம், குறிப்பாக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் நிவாரணம் ஆறு மாத காலத்துக்குத்தான் என வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதற்குப் பின்னர் இந்த மக்களுடைய நிலை என்ன என்ற ஒரு கேள்வி உள்ளது. இந்த மக்கள் சுயமாக ஒரு தொழிலைச் செய்யக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தன்னுடைய செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இடம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் மேற்கொள்ளும் உதவிகள் போதுமானவையல்ல. முகாம்களிலிருந்த மக்களைக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் விட்டதற்கு அப்பால் இந்த மக்களின் நலன்களுக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்pலை எனத் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் என்பது ஒரு நீண்ட வேலைத்திட்டம். இடம்பெயர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த இடங்களில் கொண்டு சென்று குடியேற்றுவதற்கான மீள்கட்டமைப்பு அவசியம். அத்துடன் இது தொடர்பில் மக்;கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.  
இதனையடுத்து அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் (ரி.ஆர்.ஓ) தலைவர் பேராசிரியர் என்.சிவநாதன் சந்தித்து அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைள் தொடர்பாகக் கேட்டோம். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் அமரர்; கந்தசாமியால் ஆரம்பிக்கப்பட்டது. கம்பனிச் சட்டத்தின் கீழ் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. 
தாம் வாழ்வாதாரத் திட்டங்கள் பலவற்றை நடைமுறைபக்படுத்துவதாகத் தெரிவிக்கும் சிவநாதன், இடம்பெயர்ந்தவர்கள் முன்பு என்ன தொழில் பார்த்தார்களோ அந்தத் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கான உதவிகளைச் செய்து கொடுப்பதுதான் தமது நோக்கம் எனவும் தெரிவிக்கின்றார்.  "தாரணமாக மரம் அரியும் தொழில் செய்யும் ஒருவருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் அதற்கான இயநற்திரங்களை வாங்கிக்கொடுத்திருக்கின்றோம்.வியாபாரம் செய்தவர்களுக்கும் அதுபோல வியாபாரம் செய்வதற்கான உதவிகளை வழங்கிவருகின்றோம்" என தமது செயற்பாடுகளை அவர் விபரிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பலற்றில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கும் செயற்பாடுகளை அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் கட்டம் கட்டமாக மேற்கொண்டுவருகின்றது. 
நிவாரணம் போதாது
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிலரையும்  யாழ்ப்பாண விஜயத்தின் போது  சந்தித்தோம். மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கத்தினாலும், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கப்படும் உதவிகள் போதுமானதா என்பதை அறிந்துகொள்வதும், மீண்டும் வழமையான வாழ்க்கைக்குச் செல்வதற்கு இந்த உதவிகள்  எந்தளவுக்கு உதவியக இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்வதும்தான் அவர்களுடனான சந்திப்பின் நோக்கமாக இருந்தது. 
நல்லுர் பகுதியில் தமது உறவினர் ஒருவருடன் வசித்துவரும் நடேசன் ஜெயந்தினி என்பவரை முதலில் சந்தித்தோம். அவர் கூறினார்:
"நாங்கள் வன்னியில் பல காலம் இருந்தநாங்கள். முதலில் கிளிநொச்சியில்தமான் இருந்தநாங்கள். போரினால் கணவர் இறந்துவிட்டார். இப்போது நான் அம்மா, மூன்று பிள்ளைகள்தான் இருக்கின்றம். எமக்கு மீள்குடியேற்றத்துக்காக என அரசாங்கம் 25 ஆயிரம் ரூபா தந்தது. அதனைவிட மீள வாழ்க்கையை ஆரம்பிக்க போதிய உதவிகள் இல்லை. அரசாங்கத்திடமிருந்தோ அரச சார்பற்ற அமைப்புக்களிடம் இருந்தோ உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. 
வன்னியில் தொண்டர் ஆசிரியராக நான் பணிபுரிதுள்ளேன். இங்கு வந்தபின்னர் வேலை இல்லை. எங்களுக்கு சொந்த இடம் யாழ்ப்பாணம்தான். வயல் செய்வதற்காக வன்னி சென்று அங்கேயே வாழ்ந்து வந்தோம். அரசாங்கம் தரக்கூடிய நிவாரணங்களைக் கொண்டு தொழில் செய்ய முடியாது. கணவரும் இல்லை என்பதால் பிள்ளைகளைப் பார்க்க - அவர்களைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. நிவாரணம் கூட இரு தடவைதான் தந்தனவை. பிள்ளைகளை படிப்பிக்க முடியாதுள்ளது. முகாமில் தந்த கொப்பிகளை வைத்துக்கொண்டுதான் இப்ப படிக்குதுகள்" என்று அவர் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினார். 
அரச அதிபர் தகவல்
இதேவேளையில், இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடாநாட்டில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். 
மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள், மற்றும் நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் 404 கிராமசேவையாளர்களின் நிர்வாகத்திலுள்ள 901 கிராமங்களில் இப்பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 
உயர் பாதுகாப்பு வலயத்தில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேரும், யாழ். மாவட்டத்துக்குள் இடம்பெயர்ந்த 848 குடும்பஙங்களைச் 2,720 பேரும், நலன்புரி நிலையங்களிலிருந்த 2,949 குடும்பங்களைச் சேர்ந்த 8,691 பேரும், வெளிமாவட்ட நலன்புரி நிலையங்களிலிருந்து 21,938 பேரும் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நிதி உதவி, வீடுகளுக்கான கூரைத் தகடுகள், உலர் உணவுப் பொருட்கள் என்பன வழங்கப்படுகின்றது. 
மீள்குடியேற்றப்பட்ட 24,697 குடும்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தினால் சமயல் உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. 
இதனைவிட தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கும் 1,601 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், இவர்களில் 502 குடும்பங்கள் மீளக்குடிமர்த்தப்பட்டு அவர்களுக்கான முற்பண வதிவிடத் தொகை 5,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய காணிகளைத் துப்பரவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 
இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படும் அதேவேளையில், பின்னர் 20,000 ரூபா வழங்கப்படுகின்றது. இதனைவிட மேலதிகமாக 25,000 ரூபாவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிக்கொர்ட் நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது."
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் மீள்குடியேற்றப்பணியை ஓரளவுக்காவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருப்பதைப் புலப்படுத்தியுள்ளது.  இருந்த போதிலும் தமது வாழ்கையை இழந்து வந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் கொடுக்கும் தொகை போதுமானதல்ல.  அத்துடன், அவர்கள் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் அரசாங்கத்தின் உதவிகளும் நிவாரணத் திட்டங்களும் அமைந்திருப்பது அவசியம்.  அதேபோல உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையையும் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் அணுகுவது அவசியமானதாகும். 
(இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகின்றது.)

No comments:

Post a Comment