கூட்டமைப்புடனான பேச்சின் அடுத்த கட்டம்...!?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போதிலும், இதன் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகின்றது. இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னர் பேச்சுக்களைத் தொடர்வது என இணக்கம் காணப்பட்ட போதிலும், மீண்டும் பேச்சுக்கள் இடம்பெறுமா என்பதும், அவ்வாறு பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அது எந்தளவுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதாக அமையும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்லும் வேளையில் இந்திய அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதன் அடிப்படையிலேயே பேச்சுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய விஜயம் இடம்பெற்றிருக்கவில்லை என்றால் கூட்டமைப்புடனான இந்தச் சந்திப்பும் இடம்பெற்றிருக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் கூட்டிக்காட்டுகின்றன. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் பின்னணியில் இலங்கை மீது அதிகளவு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முயற்சித்துவருவது அண்மைக்காலத்தில் வெளிப்படையாகவே தெரிகின்றது.
கொழும்பின் மீது அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழகத்திலுள்ள தமது நேச சக்திகளை இந்திய மத்திய அரசு பயன்படுத்த முற்பட்டிருப்பதை கடந்த வாரத்தில் காணமுடிந்தது. வழமையாக மகிந்த ராஜபக்ஷ டில்லி செல்லும் சந்தர்ப்பங்களில் அமைதியாக இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இம்முறை அவ்வாறு இருக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுட்டிக்காட்டிய கருணாநிதி, இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
தேவேளையில், தமிழகத்தின் காங்கிரஸ், தி.மு.க. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவை டில்லியில் சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பிலும் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பிரதானமாகப் பேசப்பட்டது. இந்தப் பேச்சுக்கள் தமக்குத் திருப்தியளிப்பதாக அமைந்திருக்க வில்லை என அவர்கள் வெளியிட்ட அறிக்கையும் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க இந்தியா முற்பட்டுள்ளமையைத்தான் பிரதிபலிப்பதாக இருந்தது.
இடம்பெயர்ந்த மக்களின் நிலை மிக மிக மோசமாக இருந்த காலப்பகுதியில் கடந்த வருடம் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்ட இந்தக் குழுவினர் முகாம்களின் நிலைமைகள் சிறப்பாக இருக்கின்றது என ராஜபக்ஷவுக்கு நற்சான்று கொடுத்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைத்தான் காங்கிரஸ்- தி.மு.க. குழுவினருடைய தற்போதைய அறிக்கையும் கூட வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
இதனைவிட ராஜபக்ஷவுடன் புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் கூட கொழும்புக்கு அழுத்தங்கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே உள்ளது. தமிழ் அமைச்சர் ஒருவரும் தன்னுடன் இருக்கின்றார் என்பதைக் காட்டுவதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு மகிந்த விரும்புவதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது. தேவானந்தாவை ஜனாதிபதி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றிருப்பது இதுதான் முதன் முறையல்ல. ஆனால், இந்த முறை மட்டும் இவ்வாறு அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இலங்கை தொடர்பிலான டில்லியின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மற்றொரு பிரதிபலிப்பாகும்.
இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சரியான முறையில் புரிந்துகொண்டமையால்தான் புதுடில்லிக்கு விமானம் ஏறுவதற்கு முதல்நாளே கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவசரமாக அழைத்து ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார் என்பது உண்மை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டேன் எனவும், அவர்கள் (கூட்டமைப்பினர்) என்மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள் எனவும் புதுடில்லிக்கு அவரால் கூறக்கூடியதாக இருந்துள்ளது.
கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற அழுத்தம் கடந்த மாதம் பூட்டானில் இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போதே ஆரம்பமாகிவிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் ராஜபக்ஷவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_ம் உடனிருந்தார். பூட்ட்hனிலிருந்து கொழும்பு திரும்பிய உடனடியாகவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் பீரிஸ், அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இருவரும் கொழும்பில் சந்தித்து உத்தியோகப் பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார்கள்.
இதனைவிட இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவும் கூட்டமைப்புடன் பேசுமாறு கொழும்பைக் கேட்டிருந்தததாகத் தெரிகின்றது.
இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி விடுத்திருந்தார். மறுபுறத்தில் சிங்களத் தேசியவாதக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக சமிபகாலமாக மீண்டும் ஆரம்பித்திருக்கும் பிரச்சாரங்களின் பின்னணியும் இதுதான். இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிடுகின்றது என சிங்களத் தேசியவாதக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட குரல் கொடுத்திருக்கின்றது.
இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக என 2005 ஆம் ஆண்டு ஜனாதிகதியினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்குமாறு 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பை ஜனாதிபதி அப்போது அழைத்திருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதென்பது ஜனாதிபதிக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதை சிங்களத் தேசிவாதிகள் ஏற்கமாட்டார்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியும். அதனைவிட கூட்டமைப்புடன் பேசி எந்தவிதமான இணக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.
இந்த நிலையில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் தமக்குத் தேவையான சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத் திணிப்பதே அவரது திட்டமாக இருந்தது.
ஆனால், இப்போது இந்தியாவின் நிர்ப்பந்தம் அவரது அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. போர் முடிவுக்கு வந்துள்ள பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது முக்கியமான ஒன்றுதான். தமிழ்ப் பகுதிகளில் அதிகளவுக்குப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகளுக்கோ அல்லது, இனநெருக்கடிக்கோ நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுவிட முடியாது.
இருந்தபோதிலும் தற்போதைய பேச்சுக்களை ஜனாதிபதி முழுமையான விருப்பத்துடன் நடத்தியிருக்கின்றார் எனக் கருத முடியாது. இந்தப் பேச்சுக்களின் போது ஜனாதிபதி தெரிவித்த சில கருத்துக்கள் அவர் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் இந்தப் பேச்சுக்களைக் கையாள முற்படுகின்றார் என்பiதைத் தெளிவாகக் காட்டியது. முக்கியமாக மக்கள் தனக்கு வழங்கிய ஆணையைக் கருத்திற்கொண்டு அதற்கு உட்பட்டதாகவே பேச்சுக்கள் அமையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது பேச்சுக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்ற ஒரு நிலையை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இதேவேளையில், இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஒரு எல்லையைத் தாண்டி இந்தியா செல்லும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. இந்தியாவைப் பொறுத்தவரையில் இன நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அதன் தேவையல்ல. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதுதான் இந்தியாவின் பிரச்சினை. அதற்கான ஒரு ஆயுதமாக இன நெருக்கடியைப் பயன்படுத்துவதும், அதனைக் காரணம் காட்டி இலங்கையில் தமது பிரசின்னத்தை அதிகரித்துக்கொள்வதும்தான் இந்தியாவின் நோக்கம்.
அதேவேளையில் தமது அழுத்தங்கள் ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால் இலங்கை ஒரேயடியாக சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இலங்கை மட்டும்தான் முழுமையாக சீனாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒன்றாக இன்றுவரையில் உள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளில் இவ்வாறு காய்நகர்த்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதனால் இன நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
No comments:
Post a Comment