பாதுகாப்பு வலயம் காரணமாக வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்வர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம். இதில் குறிப்பிட்ட தொகையானவர்களே முகாம்களில் உள்ளனர். ஏனையவர்கள் குடாநாட்டிலேயே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் உள்ளனர். இதனைவிட பெருந்தொகையானவர்கள் அகதிகளாக தமிழகத்துச் சென்றுவிட்டனர். மேலும் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.
இவர்கள் அனைவருமே தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான அனுமதி எப்போது கிடைக்கும் என்பதைத்தான் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்த நிலையில் வலி வடக்கு மக்களின் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்குகான பிரச்சாரங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில் - அதாவது கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வலி வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் போது பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தார். புலாலி விமானத் தளத்துக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ள முடியும் எனவும் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் போது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்த போது அது தொடர்பில் எந்தவிதமான அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. அதாவது வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பாதுகாப்பு வலயம் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்ற கேள்வி எழுபபப்பட்டது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
இது தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாக கண்டியில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக இருந்தது. ஜனாதிபதியின் கருத்து இதுதான்:
"உயர் பாதுகாப்பு வலயங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவையல்ல. நடைமுறை ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் அவற்றை அகற்ற முடியாது. வடபகுதியில் மட்டுமன்றி தென்பகுதியிலும் கட்டுநாயக்காவில் கூட இவ்வாறான பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் கூட இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனத்திற்கொண்டு மே மாதத்துக்கு முன்னதாக உயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ளவிருக்கின்றோம்."
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கபப்போகின்றது என்பதை ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இப்போது மே மாதம் வந்துவிட்ட போதிலும் இது தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளோ திட்டங்களோ எதுவும் செயற்படுத்தப்படவில்லை. ஆக, உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக வழங்கப்படும் வாக்குறுதிகள் கூட, தேர்தல்கால வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன.
தேர்தலும் மீள்குடியேற்றமும்
இந்த நிலையில் மீள்குடியேற்றத்தின் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியஅ ம்சங்கள் எவை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டோம். குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.
"மீள்குடியேற்றம் என்பது போருக்குப் பின்னரான காலகட்டத்தில் போரினால் சீர்குலைந்துபோயுள்ள சமூகத்தை மீளக்கட்டடியமைப்பதற்கான ஒரு செயற்பாடாகவே இருக்க வேண்டும்" எனக் குறிப்பிடும் பேராசிரியர், இவ்வாறான மீள்கட்டமைப்புக்கான சூழ்நிலை முடிலில் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் முதலில் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
"மீள்குடியேற்ற என்பது மிகவும் இலகுவானதொன்றல்ல. இதற்கு முதலில் போக்குவரத்து வசதிகள், வீடமைப்பு என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இங்கு போர் நடைபெறாத இடங்களில் கூட வீடு:கள் இல்லாத ஒரு நிலை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது ஒரு அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. இந்த அரசியல் நாடகம் எவ்வாறு அரங்கேறுகின்றது என்றால் தேர்தல்கள் வரும் போது மீள் குடியேற்றம் தொடர்பாக உறுதியளிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாகப் பேசுவமதற்கே அரச தரப்பினர் முன்வருவதில்லை. மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது இது தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் எதுவுமே நடைபெறுவதில்லை. இது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வழமையாகவே உள்ளது" என அவர் குறிப்பிடுகின்றார்.
தென்பகுதியில் குறிப்பாக விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம் எனக் குறிப்பிடும் அவர், ஆனால் அங்கிருந்து இந்தளவுக்குப் பெருந்தொகையான மக்கள் வெளியேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு சிறு தொகையான மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பினும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த இடத்தில் கூட இனவாதம் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இப்போது போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இந்தளவு பெருந்தொகையான நிலரப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடர்ந்தும் பேண வேண்டிய தேவை என்ன உள்ளது எனக் கேள்வி எழுப்பும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி, இது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் வலியுறுத்துகின்றார். இருந்தபோதிலும் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தைத் தொடர்ந்தும் பேணும் திட்டத்துடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது. ஆக, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் இப்போதைக்குத் தீரப்போவதில்லை.
வன்னியிலிருந்து திரும்பியோர்
உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொண்டு வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் நிலை எவ்வாறானதாக உள்ளது என்பதையிட்டு இனிப் பார்ப்போம்.
யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான இடப்பெயர்வுகளை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள் என்பதைக் கடந்த வாரங்களில் பார்த்தோம். இதில் முக்கியமானது உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு. இரண்டாவது போர் காரணமாக அல்லது பாதுகாப்பு அச்சம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு. இதனைவிட யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இருந்து தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ள முடியாது என்பதால் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளனர்.
இதில் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த வாரங்களில் பார்த்தோம். குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி சென்று பின்னர் அங்கிருந்தும் இடம்பெயர்ந்து தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பவர்களின் நிலை தொடர்பாகவும், தமது வழமையான வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதில் அவர்களுக்குள்ள தடைகள் என்ன என்பது தொடர்பாகவும் இப்போது பார்ப்போம்.
போரினால் ஏற்பட்ட இடபர்பெயர்வுகளைப் பொறுத்தவரையில் 1995 நவம்பரில் குடாநாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வு மிகவும் முக்கியமானது. இலங்கைப் படைகள் யாழ்ப்பாண நகரப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது பல இலட்சக்கணக்கான மக்கள் தென்மராட்சிப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். பின்னர் தென்மராட்சியில் படை நடவடிக்கை இடம்பெற்ற போது பெருந்தொகையானவர்கள் அங்கிருந்து வெளியேறி வன்னிக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு வன்னிக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஏற்கனவே திரும்பியிருந்தார்கள். மற்றவர்கள் சில வெளிநாடுகளுக்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தார்கள்;. இதனைவிட வன்னியிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்தவர்கள்தான் வன்னில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போது அனைத்தையும் இழந்தவர்களாக இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருக்கின்றார்கள்.
அரசு வழங்கும் உதவி
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் விடுவிக்கப்பட்டவர்களில் சுமார் 75,000 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
குடாநாட்டில் உள்ள மூன்று முகாம்களில் சிலர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
இவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகளை யாழ்ப்பாண செயலகத்தின் மூலமாகவே முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்பாடுகளுக்குப் பெருமளவுக்கு உதவுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் எனக்குறிப்பிடும் போது மூன்று வகையான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று - சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், இரண்டு - தேசிய ரீதியான அரச சார்பற்ற நிறுவனங்கள். மூன்று உள்ளுர் அர சார்பற்ற நிறுவனங்கள்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு குடாநாட்டுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உடனடியாக 5,000 ரூபா பணத்தை வழங்குகின்றது. இதன் பின்னர் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 20,000 ரூபா வைப்பில் இடப்படுகின்றது. அதாவது எந்தனை உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக இருந்தாலும், அவர்களுக்கு அரசாங்கத்துக்கு வழங்கப்படுவது 25,000 ரூபா மட்டும்தான். அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்கள் பல வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு வந்து மறுவாழ்வை ஆரம்பிப்பதற்கு இந்தக் கொடுப்பனவு எந்தளவுக்குப் போதுமானது?
இதனைவிட மீள்குடியேற்றம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படுகின்றது. இது உலக உணவுத் திட்டத்தினால் ; வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதுடன், குறிப்பிட்ட காலத்துக்கு என்றே வழங்கப்படும் இத்தொகை வெகுவிரைவில் நிறுத்தப்பட்டுவிடக் கூடிய ஆபத்துக்களும் இருப்பதாகக் கூறுகின்றார்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வவுனியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75,000 பேரினதும் வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது.
- அடுத்த வாரத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது.
No comments:
Post a Comment