Wednesday, June 9, 2010

ஐபா

பழபழப்பு மினுமினுப்பு இல்லாத நிலையில்
தோல்வியடைந்த இந்திய திரைப்பட விழா
தமிழ்த் திரைப்படத்துறையினருடைய கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கொழும்பில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா பெரும் தோல்வியுடன் முடிவடைந்திருக்கின்றது. பாரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பங்குகொள்ளக் கூடாது என தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் விடுத்தியிருந்த கோரிக்கையையடுத்து முன்னணி நட்சத்திரங்கள் இதனைப் பகிஷ்கரித்தார்கள். 
இந்தப் பின்னணியில் பெரும் பணச் செலவில் இதனை ஒரு சவாலாக எடுத்து முன்னெடுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இறுதியில் உள்ளுர் கலைஞர்களைக் கூட விழாவுக்குக் கொண்டுவர முடியாத நிலையில் இந்த விழா தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. பழபழப்பையும், மினுமினுப்பையும் எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழா தோல்வியில் முடிவடைந்திருப்பது மகிந்த ராஜபக்ஷ அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது. 
சர்வதேச இந்திய திரைப்பட விழா வருடாந்தம் வௌ;வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் நடத்தப்படுகின்றது. இதனை நடத்துவதற்கு அரசுகள் முன்வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஒன்று - இந்த விழாவின் மூலமாக உல்லாசப் பயணிகளைப் பெருமளவுக்குக் கவர்ந்திழுக்க முடியும். இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பெருமளவில் இதற்குப் படையெடுப்பார்கள் என்பதால் உல்லாசப் பயணிகள் இதனால் பெருமளவுக்குக் கவரப்படுவார்கள். 
இரண்டு - குறிப்பிட்ட நாட்டின் நற்பெயர் அல்லது கீர்த்தி இதன் மூலமாகப் பிரபலப்படுத்தப்படும். இந்த இரண்டு காரணங்களினாலும்தான் உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இந்த விழாவை நடத்துவதற்கு முன்வருகின்றன. இந்த முறை கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கும் அதேவேளையில், அடுத்த வருடம் இது கனடாவில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 
இந்தவிழா கொழும்பில் நடைபெறும் எனவும், இதில் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பெருமளவுக்குக் கலந்துகொள்வர்கள் எனவும் அறிவிக்கப்பட்ட போதே தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்கள் உஷாரடைந்தார்கள். குறிப்பாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு மகிந்த அரசாங்கத்தின் நோக்கங்களைப் புரிந்துகெண்டு அதன் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்குத் திட்டமிட்டுச் செயற்பட்டது. 
இந்த விழாவைக் கொழும்பில் நடத்துவதற்கு மகிந்த அரசாங்கம் தீர்மானித்தமமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக போர் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டு நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டது எனக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்துள்ளது. இந்த விழாவைக் கோலாகலமாக நடத்துவதன் மூலமாக பெருமளவு உல்லாசப் பயணிகளைக் கொண்டுவர முடியும் எனவும் இலங்கை அரசாங்கம் கணக்குப் போட்டது. 
அத்துடன் இலங்கை தொடர்பான நற்பெயரை சர்வதேச ரீதியாக இது பெருமளவுக்கு பாதுகாக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டடிருந்தது. சர்வதேச ரீதியாக போர்க் குற்றச்சாட்டுக்கள் உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் அரசாங்கம், இவ்வாறான ஒரு கோலாகலமான விழாவை நடத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்ப முடியும் எனவும் எதிர்பார்த்தது.  
இந்தப் பின்னணியில் இதனை ஒரு பிரமாண்டமான விழாவாக ஏற்பாடு செய்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை இலங்கையின் மீது குவிப்பதுதான் மகிந்த அரசாங்கத்தின் திட்டமாக இருந்துள்ளது. இதன் மூலம் இலங்கை தொடர்பாக இந்தியாவிலும் இலங்கை தொடர்பாகக் காணப்படக்கூடிய அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதுதான் அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது.  
இந்த விழாவுக்கான விளம்பரத் தூதுவராக இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரமும் திரையுலகப் பிதாமகருமான அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இதற்குப் பெரும் கவர்ச்சியை ஏற்படுத்த முடியும் என அரசாங்கம் கருதியது. இதனைவிட அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், மருமகளும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வரியா ராய் போன்றோரும் இதில் பங்குகொள்வதற்கு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தமை மகிந்தவுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. 
இதனைவிட தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமலஹாசன்,  விஜய், சூர்யா, அஜித், விக்கிரம்  உட்பட பல முன்னணி நடிகர்களும், திரைப்பட இயக்குநர்களும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் உருவாகிய தேசிய உணர்வைப் புரிந்துகொண்ட  இவர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே தமக்கான அழைப்பக்களை நிராகரித்ததுடன், இதில் பங்குகொள்ளப்போவதில்லை எனவும் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர்.
இவற்றுக்கு மத்தியிலும் தமது முயற்சியை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டது.  ஆமிதாப்பச்சனை எவ்வாறாவது வரவைக்க வேண்டும் என்பதில் இறுதி நேரம் வரையில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  முக்கிய நடிகைகள், நடிகர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களை வரச்செய்வதற்கான தீவிர முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது.  
இவற்றுக்கு மத்தியில் கொழும்பில் மூன்று தினங்களாக நடைபெற்ற விருது விழா சனிக்கிழமை இடம்பெற்ற இறுதி நிகழ்சிகளுடன் முடிவுக்கு வந்தது.   சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான அமீர்கானின்  3 இடியட்ஸ் திரைப்படமானது பொலிவூட் ஒஸ்கார்ஸ் விருதைத்தட்டிக் கொண்டுள்ளதாயினும் பகிஷ்கரிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்புகளாலும் திரைப்படத்துறையின் பிரபலங்கள் பலர் பங்கேற்காததாலும் விழாவின் பளபளப்பு சற்று மங்கியதாகவே காணப்பட்டது.
அமீர்கானின் 3 இடியட்ஸ்7 படமானது 3 பொறியியல் துறை மாணவர்கள் பற்றிய நகைச்சுவைப் படமாகும். விருது விழாவில் இப்படமானது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதுடன் வழங்கப்பட்ட 27 விருதுகளில் 16 விருதுகளை இப்படம் பெற்றுக்கொண்டது. ஆனால் நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் வைபவத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. 
அத்துடன் பொலிவூட்டின் பிதாமகரும்  இந்த விழாவின்  விளம்பரத் தூதருமான அமிதாப்பச்சனும் விழாவில் பங்கேற்கவில்லை. ஆயினும் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வைபவத்தின்போது வழக்கப்பட்டது.
அதேசமயம் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் மற்றும் பிரபல இந்தி நடிகர் சாருக்கானும் விழாவில் கலந்துகொள்ளாத முக்கியமான பிரபலங்களாகும். விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்துகொள்வாரென தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் பங்கேற்கவில்லை. ஜானதிபதியின் பாரியாரும் மூத்த புதல்வரும் கலந்துகொண்டனர். 
எதிர்பார்க்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காமையால் மகிந்தவும் வைபவத்தைத் தவிர்த்துக்கொண்டுவிட்டார். விருது வழங்கும்  வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளாமை குறித்து அவரின் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னணி இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாததையடுத்து அவர் பங்கேற்காமல் இருந்திருக்கக்கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இதேவேளையில் பெரும் பணச் செலவில் இடம்பெற்ற இந்த விழா தோல்வியில் முடிவடைந்திருப்பது உள்ளுரில் ஒரு புதிய அரசியல் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.  ஆரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலுக்குக் கிடைத்துள்ள  ஒரு சந்தர்ப்பமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இதனைக் கையில் எடுத்துள்ளன. இந்த விழபவை சறப்பாக நடத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க முயன்ற அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதாக இன்றுள்ளது. 
 விருது வழங்கும் வைபவம் பற்றி கடந்த வாரம் எழுப்பப்பட்ட கோஷங்களுடன் ஒப்பிடும் போது இறுதியில் எந்த பலனும் இன்றியே அந் நிகழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வுக்காக 450 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும்   600 மில்லியன் ரூபாவை விடவும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியிருக்கின்றது. 
இவ்வளவு பெருந்தொகை செலவிடப்பட்டிருந்தாலுமே இந்நிகழ்வின் மூலம் நாட்டுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உள்நாட்டு சினிமாத்துறைக்கு எந்தப் பலனும் இன்றியே இந்த விருது வழங்கும் வைபவம் முடிவடைந்திருக்கிறது.நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விழாவில் கலந்துகொள்ளவில்லை. அது மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்ற முன்னணி இந்திய சினிமா நட்சரத்திரங்களும் இதில் கலந்துகொள்ளவில்லை. 
இறுதியில்  இந்த  விருது வழங்கும் வைபவம் மணமகன், மணமகள் இல்லாத திருமண வீடாக நடைபெற்று முடிந்திருக்கிறது. தோல்வியான  விருது வழங்கும் வைவம் ஒன்றே நடைபெற்று முடிந்திருக்கிறது என ஜே.வி.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றது.   
உண்மையில் எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இறுதி வைபவத்தில் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளாமையும்  உள்ளுர் கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் இதனைப் பகிஷ்கரித்தமையும் இது தோல்வியில் முடிவடைந்திருப்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

No comments:

Post a Comment