Saturday, June 5, 2010

இந்தியாவும் இனநெருக்கடியும்:

மகிந்தவின் இந்திய விஜயமும்
டில்லியின் தடுமாற்றங்களும்..
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவிருக்கின்றது. பலத்த எதிர்பார்ப்புக்களை இந்த விஜயம் ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இனநெருக்கடித் தீர்வுக்கு இந்தியா எவ்வாறான பங்களிப்பைச் செய்யப்போகின்றது என்ற கேள்வி ஒரு புறம் எழுப்பப்பட மறுபுறத்தில், பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் சீபா எனப்படும் வர்த்தக உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திடுமா என்ற கேள்வி மறுபுறத்தில் எழுப்பப்படுகின்றது. 
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தையொட்டியதாக இராஜதந்திர நகர்வு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்டிருக்கின்றது. இனநெருக்கடித் தீர்வுக்காக கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை இந்தியாவிடம் கையளிக்கவுள்ள கூட்டமைப்பு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கைக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் எனத் தெரிகின்றது. புதுடில்லி ஊடக தனக்கு அழுத்தங்கள் வருவதை விரும்பாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்னுடைய விஜயத்துக்கு முன்னதாக கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார். 
13 வது திருத்தத்தின் அடிப்படையில் இன நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும், 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி இன்று எந்த வகையிலும் தயாராகவில்லை. 13 வது திருத்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று பிரிக்கப்பட்டுவிட்டன. இதனைவிட அதிகாரப் பரவலாக்கலில் தமிழர்கள் முக்கியமாக கேட்கும் பொலிஸ் அதிகாரங்கள் ஒரு போதும் வழங்கப்படப்போவதில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே திட்டவட்டமாகக் கூறிவிட்டார். 
இதனைவிட காணி அதிகாரத்தை வழங்குவதற்கும் ஆட்சியாளர்கள் தயாராகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் 13 வது திருத்தத்தில் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது மூன்று விடயங்கள்தான். ஒன்று - இணைப்பு, இரண்டு பொலிஸ் அதிகாரம். மூன்று - காணி அதிகாரம் இந்த மூன்றும் இல்லாத ஒரு தீர்வு என்பது நிச்சயமாக தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வாக இருக்கப்போவதில்லை. ஆனால், மகிந்த 13 பிளஸ் என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டாலும் 13 வது திருத்தத்தைக் கூட முழுமையாக வழங்குவதற்குத் தயாராகவில்லை. இந்த நிலையில் 13 வது திருத்தம் என இந்தியா கூறிக்கொள்வது இணைப்பும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் இல்லாத மாகாணபைத் திட்டத்தைத்தானா?
கொழும்பின் மீது அழுத்தம் எதனையும் கொடுக்கக்கூடியளவுக்கு தம்மிடம் எந்தப் பிடியும் இன்று இல்லை என்பது இந்தியாவுக்குத் தெரியும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இந்தியாவைப் புறக்கணிக்கும் வகையிலேயே தன்னுடைய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவது என்பதுதான் அதில் அதி முன்னுரிமை கொடுக்கப்பட்ட விடயமாகும். அதனால்தான் நாட்டின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் எவரும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்கின்றார்கள். 
மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் முதலாவது தடவையாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது தன்னுடைய முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கே சென்றிருந்தார். ஆனால், ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்துக்கு வெற்றிபெற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியா அல்ல. அவர் ரஷ்யாவுக்கே முதலில் சென்றார். இந்தியாவுக்கு இதன் மூலம் தெளிவான ஒரு செய்தி இராஜதந்திர மொழியில் சொல்லப்பட்டது. அத்துடன் மகிந்த ராஜபக்ஷ எங்கே நிற்கின்றார் என்பதையும் இந்த விஜயம் தெளிவாகக் காட்டியது. 
மகிந்தவின் இந்த சமிஞ்ஞை இந்தியாவுக்கு சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருந்தாலும் இந்தியா அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசு எனக் கூறிக்கொண்டாலும் கொழும்பைக் கட்டுப்படுத்தக்கூடியளவுக்கு அதனிடம் எந்தப் பிடியும் இருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் மக்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும், தமது பிரசின்னத்தை அதிகரிப்பதற்கும் இந்தியா முற்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் விசா அலுவலகம் ஒன்றை அமைத்த இந்தியா இப்போது யாழ்ப்பாணத்திலும், அம்பாந்தோட்டையலும் உதவித் தூதரகங்களை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கின்றது.
இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் தாம் இப்போதும் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய உள்நாட்டு அரசியல் தேவை புதுடில்லிக்கு இருக்கின்றது. இலங்கை விகாரத்தில் மத்திய அரசின் செயற்பாடுகள் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மகிந்த டில்லி செல்லவிருக்கும் நிலையில் கருணாநிதி இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு தமிழகத்தில் கொந்தளிப்பான ஒரு நிலை காணப்படுகின்றது என்பதை மட்டுமே இந்தியா இப்போதைக்குப் பயன்படுத்த முடியும்!
இலங்கை மீதான இந்தியாவின் பிடி தளர்ந்துவரும் அதேவேளையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை அண்மைக்காலத்தில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்தியாவா சீனாவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையிலிருந்த மகிந்த ராஜபக்ஷ சீனாவின் பக்கமே சாய்ந்திருக்கின்றார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவுடனான உறவுகளுக்கு முதன்மை இடத்தைக் கொடுக்கும் அதேவேளையில், பிராந்தியத்தில் உருவாகக்கூடிய நிலைமைகளைப் பொறுத்தவரையில் நடுநிலை கடைப்பிடிக்கப்படும் என்பதுதான் உத்தியோகபூர்வமான கொள்கையாக உள்ளது. 
1962 ஆம் ஆண்டில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட்டது. அப்போது நடுநிலை வகிக்கும் உபாயத்தையே இலங்கை கையாண்டது. இருந்தபோதிலும் 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், கிழக்குப் பாகிஸ்தானுக்கும் (பின்னர் பங்களாதேஷ் ஆகியது) இடையில் போர் இடம்பெற்ற போது இலங்கை நடுநிலையுடன் செயற்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷை உருவாக்கும் வகையில் இந்தியா தனது இராணுவத்தைப் பயன்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானிய போர் விமானங்கள் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு செல்வதற்கான வசதிகளை இலங்கை வழங்கியது. இலங்கை மீது இந்தியாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய முதலாவது சம்பவமாக இதுவே இருந்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் 1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் முற்பகுதியிலும் இந்தியாவுக்கு விரேதமான செயற்பாடுகளில் இலங்கை சம்பந்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியது. ஆசியாவில் சோவியத் யூனியனின் நெருக்கமான நட்பு நாடாக இந்தியா இருந்த அந்தக் கெடுபிடிப்போர் காலப்பகுதியில் அதற்கு விரோதமான அணியுடன் இலங்கை கைகோர்த்துக்கொண்டிருந்தமை இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆசியாவில் வல்லரசுகளின் சமபலத்தைப் பாதிப்பதாக இலங்கையின் செயற்பாடுகள் இருப்பதாக அப்போது இந்தியா குற்றஞ்சாட்டியது.
கெடுபிடிப்போர்க் காலப்பகுதியில் தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வல்லரசுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டன. உதாரணமாக பாகிஸ்தான் அமெரிக்காவின் கையாள் போலச் செயற்பட்ட அதேவேளையில் இந்தியா சோவித் தலைமையிலான அணியுடன் இணைந்தது. ஆப்பாகனிஸ்தானும் சோவியத் சார்பானதாக இருக்க இலங்கை அணிசாராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டாலும் அமெரிக்கா சார்பானதாகவே செயற்பட்டது. 
இக்காலப்பகுதியில் இந்தியா மிகவும் பலமானதாக இருந்தமைக்கு சோவியத் யூனியனின் ஆதரவும் ஒரு காரணம். 1971 ல் அமெரிக்கா தன்னுடைய போர்க் கப்பல் ஒன்றை பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதற்காக அனுப்பியபோது, சோவியத் யூனியன் தன்னுடைய போர்க் கப்பல்கள் சிலவற்றை மட்டுமன்றி, நீர்மூழ்கிகள் பலவற்றையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. 
இவ்வாறு இந்தியா பலமான ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்தியாவை மீறிச் செயற்படுவதற்கு இலங்கை முற்பட்டது. இலங்கையை இதற்காகத் தண்டிப்பது எனத் தீர்மானித்த இந்தியா, தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஆயுதம், பயிற்சி, தளவசதி, பணம் என அனைத்தையும் கொடுத்து கொழும்பை அச்சுறுத்துவதற்கான ஒரு ஆயுதமாக தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட இந்தியா 13 வது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான இலங்கை - இந்திய உடன்படிக்கையை ஏற்படுத்தியது. 
ஆனால், அமெரிக்கா, சோவியத் யூனியன் தொடர்பான தனது கொள்கையை 1980 களின் இறுதிப்பகுதியில் இந்தியா மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. 1991 இல் சோவியத் யூனியன் சிதறிப்போனபின்னர், அமெரிக்கா தனி ஒரு வல்லரசாகியது. சோவியத் ஆதரவுடன் வளர்த்திருந்த தன்னுடைய சக்தி மிக்க நிலையை இந்தியா இழந்தது. இந்தியா தன்னுடைய இராணுவத் தேவைகளுக்கு அமெரிகாவையும் ரஷ்யாவையுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 
இதேவேளையில் உலகின் பலம் பொருந்திய வல்லரசாக இன்று சீனா உருவாகியிருக்கின்றது. பொருளாதார பலம்தான் கேந்திர ரீதியான பலத்தையும் நிர்ணயிப்பதாக அமைந்திருப்பதால் சீனாவால் வேகமாக முன்னேற முடிகின்றது.  இந்தியா தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டதெனக் கருதும் தெற்காசியப் பிராந்தியத்தில் கூட சீனாவின் ஆதிக்கமே மேலாங்கியிருக்கின்றது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மார் மற்றும் திபேத் என்பன  சீனாவின் செல்வாக்கக்கு உட்பட்ட நாடுகளாகவே இருக்கின்றன. 
இந்தியாவைப் பொறுத்தவரையில் அங்கு பாதுகாப்புக்கும் ஸ்திரத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டுக்களின் கிளர்ச்சியையே அவர்களால் ஒடுக்க முடியவிலிலை. அத்துடன் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எதுவும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை எதனையும் செய்வதற்கும் விரும்புவதில்லை. உண்மையில் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் (இலங்கையை விட்டுவிடுவோம்) சீன சார்பு நாடுகளாகவே உள்ளன. இலங்கையும் இதேபோன்ற ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது என்ற சந்தேகம் இந்தியாவுக்குத் தாராளமாக உள்ளது.
1980 களில் இலங்கை மேற்கு நாடுகளுக்குச் சார்பாகச் செல்கின்றது என்பதற்காக இலங்கையைத் தண்டிக்க முற்பட்ட இந்தியாவினால், இப்போது சீனாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கைக்கு எதிராக ஒரு காயைக்கூட நகர்த்த முடியவில்லை. இலங்கைக்கு எதிராக காய்களை நகர்த்துவது இலங்கை சீனாவுடன் மேலும் நெருங்கிச் செல்வதற்குக் காரணமாகிவிடும் என்று டில்லி அஞ்சுவது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. 80 களில் தமிழ்ப்  போராளிகள் என்ற ஆயுதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டே கொழும்பை இந்தியா மண்டியிட வைத்த்து. இப்போது அவ்வாறான ஆயுதங்களும் இந்தியாவிடம் இல்லை. 
இந்த நிலையில் இன நெருக்கடித் தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என யாராவது நம்புவார்களாக இருந்தால்,..............

No comments:

Post a Comment