Sunday, January 29, 2017

மகிந்த - முதலமைச்சர்கள் தோல்வியடைந்த சந்திப்பு

0 மைத்திரி தலைமையை ஏற்கவேண்டும்: முதலமைச்சர்களின் கோரிக்கை
0 ராஜபக்‌ஷ கேட்ட 'தீர்மானம் எடுக்கக்கூடிய' அதிகாரத்தைக் கொண்ட பதவி
0 அடுத்த மாகாண சபைத் தேர்தலையிட்டு அச்சமடையும் முதலமைச்சர்கள்
0 சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமானதா?


- பாரதி -

கொழும்பு அரசியல் கள நிலவரங்களைப் பொறுத்தவரையில் இந்த வாரத்திலும் செய்திகளில் அதிகளவில் பேசப்படும் நபராக மகிந்த ராஜபக்‌ஷதான் உள்ளார். அவருடன் சம்பந்தப்பட்ட இரு நகர்வுகள் அவரை நோக்கி அனைவரது கவனத்தையும் திருப்பியிருந்தது. மாகாண சபை முதலமைச்சர்களுடன் மகிந்த நடத்திய பேச்சுக்கள் முதலாவது. வெள்ளிக்கிழமை நுகேகொடயில் அவரது கட்சி நடத்திய பேரணி இரண்டாவது விடயம். தலைநகர அரசியலில் மகிந்த தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டு வருகின்றார் என்பதையும், பிரதான அரசியல் நகர்கள் அவரை மையப்படுத்தியதாக இடம்பெற்றுவருவதையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியிருக்கும் தலைமைத்துவப் போட்டியும், கட்சி பிளவுபடலாம் என்ற அச்சமும்தான் ராஜபக்‌ஷவுடன் முதலமைச்சர்கள் நடத்திய அவசரப் பேச்சுக்கு அடிப்படை. கட்சிப் பிளவைத் தடுப்பதற்கான இறுதி முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன்தான் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. மகிந்தவுக்கு மைத்திரி காட்டிய இறுதியான சமாதான சமிஞ்ஞையாக இதனைக் கருதலாம். கட்சி பிளவுபடுவது தம்மையும் பலவீனப்படுத்திவிடும் என்ற அச்சம் இருவருக்குமே இருக்கின்றது. அதனால்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கு முதலமைச்சர்கள் மத்தியஸ்த்தர்களாகச் சென்றிருக்கின்றார்கள். இருவரையும் மீண்டும் ஒட்டவைப்பது சாத்தியமில்லை என்பது இந்தப் பேச்சுக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளும் இப்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசம்தான் உள்ளது. மே மாதம் அளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் இவ்வருட நடுப்பகுதியுடன் முடிவுக்கு வருகின்றது. அவற்றின் தேர்தல்களுடன் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து அவற்றுக்கான தேர்தலையும் நடத்தும் திட்டம் அரசுக்குள்ளது. அவ்வாறான நிலையில் மீண்டும்தாம் முதலமைச்சர்களாக வர வேண்டுமானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு தடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர்கள் சிந்திக்கின்றார்கள். அந்தச் சிந்தனையின் விளைவுதான் இந்த சமரச முயற்சி என்கிறார் விபரமறிந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர் ஒருவர்.

மத்தியஸ்த்தர்களாக
சென்ற முதல்வர்கள்


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு முதலமைச்சர்களில் ஆறு மாகாண முதலமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மகிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்கள். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால ஜெயரட்ண மட்டும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த வேறு நிகழ்வுக்குச் செல்லவேண்டியிருந்தமையால் அவர் வரவில்லை என மகிந்தவிடம் சொல்லப்பட்டது. ஆனால், அவர் மைத்திரியின் தீவிர ஆதரவாளர் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதனால் இந்தச் சந்திப்பை அவர் தவிர்திருக்கலாம் எனவும் நம்ப இடமுள்ளது.   மகிந்த ராஜபக்‌ஷவுடன் அவரது அணியின் முக்கியஸ்த்தர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியை ஒன்றுபடுத்துவதுதான் முதலமைச்சர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. மைத்திரியின் தலைமையை ஏற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டே ராஜபக்‌ஷ செயற்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. இதன்மூலம் கட்சிப் பிளவைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகத் தெரிகின்றது. ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் "தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்கு" தன்னால் ஆதரவளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இந்த அரசில் ஐ.தே.க.வே பிரதான பங்காளியாக இருப்பதால் அதற்குத் தன்னால் ஆதரவளிக்க முடியாது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாத நிலைப்பாட்டை அவர் எடுத்ததால் பேச்சுவார்த்தைகளில் எந்தவித இணக்கத்தையும் எட்டமுடியவில்லை என இரு தரப்புத் தகவல்களும் தெரிவிக்கின்றன.

ராஜபக்‌ஷவைச் சந்தித்த முதலமைச்சர்கள் மத்தியஸ்த்தர்களாகச் சென்றார்களே தவிர, பேச்சுக்களின் ஒரு தரப்பாகச் செல்லவில்லை. அதனால், முக்கியமான விடயங்களில் முடிவெடுக்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை. "இந்தப் பேச்சுக்களின் விபரங்களை கட்சித் தலைமைக்கும், மத்திய குழுவுக்கும் தெரியப்படுத்துவோம். முக்கியமான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் எமக்கு இருக்கவில்லை. கட்சித் தலைமைதான் அதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும்" என பேச்சுக்களின் முடிவில் முதலமைச்சர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் பேச்சுக்குச் செல்லும்போது, சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கக்கூடியவர்களாக முதலமைச்சர்கள் இருக்கவில்லை. பேச்சுக்களின் போது சில சந்தர்ப்பங்களில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த தரப்பினரின்
நிலைப்பாடு இது


மகிந்த தரப்பினர் ஒரு விடயத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார்கள். பேச்சுக்களின் தோல்விக்கு அதுதான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. "ஐ.தே.க.வுக்கும் அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராகச் செயற்படுவதற்காக என்றால் இணைந்து செயற்பட நான் தயார். ஆனால், ஐ.தே.க.வுடன் இணைந்து தேசிய அரசாங்கமாகச் செயற்படுவதற்காக மைத்திரியின் தலைமையை ஏற்க தயாராகவில்லை" என்ற நிலைப்பாட்டில் மகிந்த உறுதியாக இருந்துள்ளார். "ஐ.தே.க.வின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவில்லை" எனவும் அங்கு அவர் அடித்துக்கூறிவிட்டதாகத் தெரிகின்றது. இது மைத்திரி தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியாத - நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்று என்பது மகிந்தவுக்குத் தெரியாததல்ல. ஜனாதிபதிப் பதவிக்கு மைத்திரி வருவதற்கு ஐ.தே.க.வின்  வாக்குகள்தான் பெருமளவுக்கு உதவியிருந்தன. அத்துடன், பாராளுமன்றத்தில் 105 எம்.பி.க்களுடன் பெரும்பான்மையாக இருப்பதும் ஐ.தே.க.தான். அதனால், ஐ.தே.க.வின் உறவை துண்டித்துக்கொள்ள மைத்திரி துணியமாட்டார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் ஐ.தே.க.வுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்திருப்பதை முதலமைச்சர்கள் நியாயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைச் செய்வற்கு இவ்வாறான ஏற்பாடு ஒன்று அவசியம் என்பதை இந்தப் பேச்சுககளின் போது முதலமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். மகிந்த குழு - முதலமைச்சர்கள் சந்திப்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்குத் தடையாக இந்தக்கொள்கை முரண்பாடே காரணமாக இருந்துள்ளது என முதலமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டாலும் இரு தலைவர்களுக்கும் இடையிலான ஆளுமைப் போட்டியின் பிரதிபலிப்புத்தான் இவை.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது தரப்பின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. "கட்சியின் ஒற்றுமை" என்பதைத் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அவர்கள் பெற்றுக்கொள்ள நினைப்பது அதனைத்தான். எந்தவகையிலாவது மகிந்தவை 'உள்ளே' விடுவது தமக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சம் மைத்திரிக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் உள்ளது. மைத்திரிக்கு விசுவாசமாகக் காட்டிக்கொள்ளும் சிலர் "காற்றடிக்கும் பக்கத்துக்குச் சாயக்கூடியவர்களாக"வே உள்ளார்கள். இது மைத்திரிக்கும் நன்றாகத் தெரியும். இந்த நிலையில் மகிந்தவின் நிபந்தனைகள் எதனையும் மைத்திரி ஏற்றுக்கொள்வார் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல.

சுதந்திரக் கட்சிக்குள்
ஒற்றுமை சாத்தியமா?

மகிந்தவைப் பொறுத்தவரையில் பதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக 'பில்ட் அப்' கொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் சென்று இணைவதற்கான திட்டமும் அவரிடம் உள்ளது. அவரை முன்னிலைப்படுத்தியே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைமையை அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருப்பது அதனால்தான். புதிய கட்சியைக் காட்டிப் பயமுறுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதுதான் அவரது முதலாவது தெரிவு. அதனால்தான் முதலமைச்சர்கள் அழைத்த போது அவர் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.

"மூன்றாவது கட்சி"யின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அவரிடம் உள்ளது. ஆனால், கட்சியில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் செல்வது தன்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால்தான் முடிவெடுக்கக்கூடிய முக்கிய பொறுப்பு தனக்குத் தரப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அவரால் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு மைத்திரி ஒருபோதும் தயாராகவில்லை. ஆக, கட்சிக்குள் மீண்டும் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதென்பது இப்போதைக்குச் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை.

ஞாயிறு தினக்குரல்: 2017-01-29

No comments:

Post a Comment