Monday, February 20, 2017

சுதந்திர தினக் கொண்டாட்டமும் கெப்பாப்பிலவுப் போராட்டமும்


0 மேலிடத்து அனுமதி கிடைத்தால் திறந்துவிடலாம் எனும் விமானப்படையினர்
0 விமானப்படைக்கோ, காட்டு இலாகாவுக்கோ தேவையில்லாத காணி
0 தமது நிலம் கிடைக்கும் வரை திரும்பிச் செல்ல மறுக்கும் கெப்பாப்பிலவு மக்கள்
0 இரண்டுவார கால அவகாசத்தைக் கேட்கும் அரசாங்க அதிபர்

- பாரதி -

லங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு காலிமுகத் திடலில் சிங்கக் கொடியைஏற்றி இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கெப்பாப்பிலவு பெரும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது.  தமது காணி தமக்கு வேண்டும் என ஐந்தாவது நாளாகப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த கெப்பாப்பிலவு மக்கள் கொழும்பில் நடைபெறும் சுதந்திர தினத்தைப் பற்றி சிந்தித்துக்கூட இருக்கமாட்டார்கள். தமது சொந்த மண்ணிற்கே செல்ல முடியாத அவர்களுக்கு சுதந்திர தினம் என்ன கேடு? போர் முடிவுக்கு வந்து எட்டுவருடங்கள் சென்றிருக்கும் நிலையிலும், இலங்கைத் தீவானது இரு துருவங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பதற்கு இதனைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

கெப்பாப்புலவு மக்களின் போராட்டம் ஒன்றும் புதிதல்ல. இறுதிப்போரின்போது தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறிய இந்த மக்கள், கடந்த எட்டு வருடமாக தமது சொந்த மண்ணில் குடியிருப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். மீள்குடியேற்றம், படைக் குறைப்பு என்பதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளாகியுள்ள நிலையில்தான் இந்தப் போராட்டதை அவர்கள் ஆரம்பித்தார்கள். ஏமாற்றங்களும் அவமானங்களும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்றுவிட்ட நிலையில் குழுந்தைகளுடன் தமது மண்ணுக்கான போராட்டத்தை கெப்பாப்பிலவு விமானப்படைத் தளத்துக்கு முன்பாக 5 நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்கள்.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிகால சிறிசேன முல்லைத்தீவுக்கு வரும்போது தமது காணிகள் மீள தம்மிடம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின்னர் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நம்பிச் சென்ற போது கடந்த திங்கட்கிழமை அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அப்போது ஆரம்பமான இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இன்றி தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு மாதமல்ல இரு மாதமல்ல தமது காணிகள் தமக்குக் கிடைக்காமல் தமது போராட்டத்தைக் கைவிட்டுவிடப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாகவுள்ளார்கள். அடுத்துவரும் தினங்களில் இவர்களின் போராட்டம் தீவரமடைவதற்கான  சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இப்போது அமைதியாக இடம்பெறும் இந்தப் போராட்டம் அடுத்துவரும் தினங்களில் அதன் வடிவத்தை மாற்றிகொள்லாம் என போராட்டத்துடன் சம்பத்தப்பட்ட ஒருவர் தெரிவிக்கின்றார்.

விமானப் படைக்கு
தளம் அமைக்கவா?

மக்கள் போராட்டம் ஆரம்பமான இரண்டாவது தினம் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேரடியாக சென்றிருந்தார். மக்களுடைய காணி விடுவிக்கப்படமலிருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வதற்காக கெப்பாப்புவலில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளத்துக்கும் அவர் சென்றிருக்கின்றார். இது தொடர்பாக விமானப் படையின் பொறுப்பதிகாரிரிடமும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். கெப்பாப்புலவின் பிரதான வீதியிருந்து அதன் இறுதிப்பகுதி வரையில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட அவர், தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. மக்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதன் காரணம் என்ன என்பதில் கேள்விகளை எழுப்புவதாகவே அவர் தெரிவித்த தகவல்கள் உள்ளன. 

இந்தக் காணிகளை அதன் உரிமையாளர்கள் மீளச்சென்று குடியேறுவதற்கு தடை விதிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று - இது படை முகாம் ஒன்றுக்குத் தேவையான காணியாக இருந்து அந்தப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்லானதாக இருத்தல். அல்லது காட்டுத் திணைககளத்துக்கு உட்பட்ட காணியாக இவை இருக்க வேண்டும். இதிலிருக்கக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்து காட்டுத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்தே ஆனந்தன் அங்கு சென்றிருந்தார். மக்களின் கேள்விகளுக்குத் தெளிவான பதிலைக் கொடுப்பற்காகவே இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார்.  தெளிவான  வரை படமும், விஷயம் தெரிந்தவர்களுடன் அவர் சென்றிருந்தமையால், உண்மை நிலை என்ன என்பதை அவரால் உறுதியாக அறிந்துகொள்ளமுதுமுடிந்தது.

இந்த நிலப்பரப்பின் இறுதியில் பின்னால் விமானப்படையின் ஓடுபாதை வருகின்றது. அந்தப் பகுதிக்குள் இந்த மக்களின் காணி எதுவும் வரவில்லை. அதனை விலத்தித்தான் மக்களின் காணி வருகின்றது. அதேபோல காட்டுத் திணைக்களத்துக்குரிய காணிக்குள்ளும் இந்த மக்களின் காணி வரவில்லை. இந்த 84 குடும்பத்துக்கும் உரிய காணி 13.5 ஏக்கர் ஒரு பகுதியில் உள்ளது. அவ்வளவு காணிக்கும்  84 குடும்பங்களுக்கும் உறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காணி காட்டுத் திணைக்களத்துக்கோ அல்லது விமனப்படைக்கோ தேவையில்லாத நிலப்பரப்பு என்று தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன், அப்படியானால் இந்தக் காணியை அதன் உரிமையாளர்களுக்குக் கொடுப்பதை விமானப்படை எதற்காகத் தடுக்க வவ்டும் எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

மேலிடத்திலிருந்து
உத்தரவு வருமா?

பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய காணிகள் எந்தவகையிலும் விமானப்படைக்கு அவசியமானவையல்ல. அந்த காணியை எடுக்க வேண்டும் என்ற தேவை விமானப்படைக்கு இல்லை. அவர்களுக்குத் தேவையான காணிக்குள் அது வரவல்லை. விமானப்படையின் ஓடுபாதை பொதுமக்களுடைய காணிகளுக்கு அப்பால்தான் வருகின்றது. இதனை சிவசக்தி ஆனந்தனுடனான பேச்சுக்களின் போது விமானப்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அப்படியானால், காணிகளை விடுவிப்பதில் என்னதான் பிரச்சினை உள்ளது? பிரச்சினை என்னவென்றால் இந்தக் காணியை மக்களுக்குக் கொடுப்பதாயின் மேலிடத்திலிருந்து உத்தரவு வரவேவண்டும். அவ்வாறு வந்தால் காணிகளை விடுவக்கலாம் என்பதுதான் கெப்பாப்புலவு விமானப்படைப் பொறுத்ததிகாரியின் நிலைப்பாடு. மேலிடத்து உத்தரவு பாதுகாப்பு அமைச்சிடமிருந்தே வரவேண்டும். இதற்கு ஜனாதிபதிக்குத்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்களுடைய போராட்டம் தீவிரமான நிலையில் சென்றுகொண்டிருப்பதை விளக்கி ஜனாதிபதிக்கு அவசர செய்தி ஒன்றையும் சிவசக்தி ஆனந்தன் நேற்று முன்தினம் அனுப்பியிருந்தார். காணிகளை உரியவர்களுக்கு மீளக்கொடுக்க உடனடி நடவடிக்கை தேவை எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

மக்களை அனுமதிக்க விமானப்படை இப்போது மறுப்புத் தெரிவித்தாலும், இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி அந்த மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட விஜயத்தின் போது, காணி விடுவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஜனாதிபதியின் விஜயம் இறுதிவேளையில் ரத்துச் செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏமாற்றம். அதன் பின்னரும் காணி விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழியை அதிகாரிகள் வழங்கியிருந்தார்கள். இந்த உறுதியையடுத்து மக்கள் தமது ஆவணங்களுடன் சென்றபோதுதான் தடுத்து நிறுத்தப்பட்டடார்கள்.  

அவகாசம் கொடுக்க
மறுக்கும் மக்கள்

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதி மக்களுக்கு விமானப்படையினராலும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. அதற்காக 4 தடவைகள் தமது காணி உறுதிகள், மற்றும் ஆவணங்களை போட்டோ கொப்பி எடுத்து மக்களால் கொடுக்கப்பட்டிருந்தது. விமானப் படை சில காணிகளை விட்டுள்ளார்கள். சுமார் 2-3 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணிக்குரியவர்கள் தமது இடங்களுக்குச் சென்று அவற்றைத் துப்புரவாக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்கள். இப்போது மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலிட உத்தரவுதான் காரணம் எனவும் சொல்லப்படுகின்றது.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சு நடத்தியபோது, அவர், இரண்டு வார கால அவகாசம் கேட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் மக்கள் அந்த இடங்களைவிட்டுச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்கள். இரண்டு வாரமல்ல, எவ்வளவு காலமானாலும் தமது காணிகள் கிடைக்கும் தாம் அகலப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாகவுள்ளார்கள்.  குறிப்பாக பெண்கள் உணர்சி வசப்பட்டவர்களாகப் போராட்டத்தில் இறங்கியிருப்பதால், அந்தப் பகுதி உணர்வுகளின் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. விமானப்படை சுட்டாலும் பரவாயில்லை நாம் எமது காணிகளை மீளப்பெறுவோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

இதுவரையில் போராட்டம் அமைதியாகத்தான் இடம்பெறுகின்றது. அடுத்த தினங்களில் இதில் மேலும் பெருமளவு இளைஞர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் போராட்ட வடிவம் மாற்றமடையலாம் என மக்கள் பிரதிநிதி ஒருவர் குறிப்பிடுகின்றார். வாக்குறுதிகளை நம்பிய பொதுமக்கள் இப்போது களைத்துவிட்டார்கள், விரக்தியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்கள். யாரையும் நம்பியிருப்பதில் - எதிர்பார்த்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். அதனால் தமது காணி உரிமைகளுக்காக தாமே களத்தில் இறங்க வேண்டிய - போராட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

தெற்கில் கோலாகலமான சுதந்திர தினக்கொண்டாட்டம், வடக்கு கிழக்கில் தமது சொந்த நிலத்தில் வசிப்பதற்கே போராடும் மக்கள். போர் முடிவடைந்து எட்டுவருட காலத்தில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் இதுதான்!

-ஞாயிறு தினக்குரல் 2017-02-05

No comments:

Post a Comment