Wednesday, January 18, 2017

மகிந்தவின் அதிரடி நகர்வுகள்; தற்காப்பு நிலையில் மைத்திரி?

0 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தக்கவைக்க சுதந்திரக் கட்சி முடிவு!
0 மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மைத்திரி சம்மதம்?
0 அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற மகிந்தவிடம் உள்ள உபாயம் என்ன?
0 அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் கைவிடப்பட்டுவிடுமா?

- பாரதி -

கூட்டு எதிரணியினரால் உருவாக்கப்பட்டுள்ள 'பொது ஜன பெரமுன'வின் முதலாவது பகிரங்கக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இதில் கலந்துகொள்வார். பொது ஜன பெரமுனவில் மகிந்த ராஜபக்‌ஷ உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவில்லை என்றாலும், இக்கட்சி அவரை மையப்படுத்தியதாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன் தலைவராக தற்போதைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றார். மகிந்த பின்னர் தலைவராகப் பொறுப்பேற்பார் என்பதுதான் ஏற்பாடு. இவ்வருடத்தில் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாக மகிந்த ராஜபக்‌ஷ சூழுரைத்திருக்கும் நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் தமது பலத்தைக் காட்டுவதற்கு நிச்சயமாக முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதனைவிட அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாக மகிந்த அறிவித்த பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுக்கூட்டமாகவும் இதுவே இருப்பதால் அதன் முக்கியத்துவம் அதிகமாகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவின் அதிரடியான நடவடிக்கைகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்பது இரகசியமானதல்ல. பிரதி அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருக்கின்றார். மேலும் சிலர் "அந்தப் பக்கத்துக்கு"ச் செல்லலாம் எனச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடிகளின் பின்னணியில்தான் ஜனாதிபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவிருந்த விஜயமும் பின்போடப்பட்டது. தேசிய அரசாங்கமானது தனது இரண்டாம் ஆண்டில் காலடி வைத்திருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பொருளாதாரம் நலிவுற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் இடம்பெறும் கூர்மையான முரண்பாடுகள் வெளிப்படையாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தலைவர்களிடமிருந்தும் வெளிப்படுத்தப்படும் முரணான கருத்துக்கள் அவர்களது ஒற்றுமையின்மையைப் பிரதிபலிக்கின்றது. இந்த முரண்பாடுகள் தேசிய அரசாங்கத்துக்கு உடனடியாக ஆபத்தை ஏற்படுத்துமா என்பதுதான் சாதாரண மக்கள் மத்தியில் எழும் கேள்வி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அமைச்சர்களுடன் பேச்சு

இந்தப் பின்னணியில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முக்கியமான இரு தீர்மானங்களை எடுத்திருக்கின்றார்கள். வாரந்த அமைச்சரவைக கூட்டத்தின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றார். 2017 ஆம் ஆண்டுக்கான தன்னுடைய திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்காகவே தமது கட்சி அமைச்சர்களை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியைத் தொடர வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் இரு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பான தீர்மானத்தை முன்வைத்து, சக அமைச்சர்களின் ஆதரவைக் கோரிய போது ஜனாதிபதி மைத்திரிபால தனது வழமையான புன்னகையுடன் அமைதியாக இருந்துள்ளார். மௌனம் சம்மதத்துக்குத்தான் அறிகுறி!

ஜனாதிபதியின் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக இரு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது, அரியலமைப்புத் திருத்தம் தொடர்பானது. 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாக மட்டுமே இனநெருக்கடிக்கான தீர்வு அமையவேண்டும் என்பதுடன், வடக்கு - கிழக்கும் இணைப்பு இல்லை. புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே இதற்குப் போதுமானது என்பவைதான் அந்த இரு தீர்மானங்காகும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எடுத்துள்ள இந்தத் தீர்மானங்கள் ஒரு விடயத்தைத் தெளிவாப் புலப்படுத்துகின்றன. அதாவது, அவர்களின் தீர்மானத்தின்படி பார்த்தால் புதிய அரசியலமைப்புக்கான தேவையே இல்லாமல் போய்விடுகின்றது.

மூன்று நோக்கங்களுக்காகத்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவது: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது. அந்த முறை தொடர்த்தான் வேண்டும் என்பது ஶ்ரீல.சு.க.வின் நிலைப்பாடாக இருந்தால் புதிய அரசியலமைப்புக்கான தேவை இல்லை. இரண்டாவது: இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது. 13 க்குள்தான் தீர்வு என்றால் அதற்காகவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அவசியமில்லை. எஞ்சியிருக்கப்போவது தேர்தல் முறை மாற்றம் மட்டும்தான். அதற்காக மட்டும்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் இடம்பெற வேண்டும் என்பதுதான் ஶ்ரீல.சு.க.வின் பிந்திய நிலைப்பாடா? அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கடந்த வாரம் தெரிவித்திருக்கும் கருத்தும் இதனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

மைத்திரி தரப்பின்
அரசியல் நகர்வுகள்

மைத்திரிபால சிறிசேன என்னதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும், மகிந்த ராஜபக்‌ஷவின் அதிரடி நகர்வுகளுக்கான பிரதிபலிப்பான நகர்வுகளைத்தான் அவரிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. இனநெருக்கடிக்கான தீர்வு விடயத்தில் மகிந்த கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில், மகாசங்கத்தினரைச் சந்தித்து, சமஷ்டியும் இல்லை இணைப்பும் இல்லை மதச்சார்பற்ற நாடு என்ற நிலையும் இல்லை என அவர் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார். இப்போது, அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாக மகிந்த அறிவித்துவரும் நிலையில்தான் ஶ்ரீல.சு.க. அமைச்சர்களின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கு முற்றிலும் முரணானதாகவே இந்தத் தீர்மானம் உள்ளது என்பது வெளிப்படை!

அவ்வாறான ஒரு நிலைக்கு மைத்திரியும் அவரது ஆதரவாளர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். பாராளுமன்றத்தில் இன்று ஶ்ரீல.சு.க.வைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐ.ம.சு.மு.வின் சார்பில் 95 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அதில் 52 பேர் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாகச் சொல்லப்படுகின்றது. மைத்திரியுடன் இருப்பவர்களில் அவருக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அவருக்கே தெரியாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவேன் என மகிந்த துணிச்சலாக அறிவித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகளவுக்கு அதிகாரம் மிக்கவராகச் செயற்படுவதற்கும் இதுதான் காரணம். பாராளுமன்றத்தில் மைத்திரி தரப்பு மூன்றாவது பெரும்பான்மையைக் கொண்டதாகத்தான் உள்ளது.

இந்த நிலையில் எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்வதன் மூலமாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என மகிந்த சிந்திக்கின்றார். 19 ஆவது திருத்தத்தின்படி 4 வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அத்துடன், ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு பதவிக்காலங்களுக்கு மட்டுமே செயற்பட முடியும். ஆனால், பாராளுமன்றப் பெரும்பான்மையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆட்சியை மாற்ற முடியும். அதற்கான உபாயத்துடன்தான் மகிந்த செயற்படுவதாகச் சொல்லப்படுகின்றது. தன்னால் பிரதமராக வரமுடியும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அதனால்தான், தன்னுடைய ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் மைத்திரி இறங்கியிருக்கின்றார்.

ஜனாதிபதி ஆட்சி
முறை தொடருமா?

ஶ்ரீல.சு.க. விலுள்ள மைத்திரியின் ஆதரவாளர்கள் இரண்டு விடயங்களை அண்மைக்காலத்தில் சொல்லிவருகின்றார்கள். ஒன்று: நாம் மேலே குறிப்பிட்ட ஜனாதிபதி ஆட்சி முறை தொடரும் என்பதும், மைத்திரி மீண்டும் போட்டியிடுவார் என்பதும். இரண்டாவது: அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2020 இல் அல்ல. 2021 இலேயே நடைபெறும் என்பது. அதாவது மைத்திரியை இன்னும் 4 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதுதான் அவர்களது கருத்து.  இது மகிந்தவுக்கு அவர்கள் சொல்லும் செய்தி.

பாராளுமன்ற எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்ய மகிந்த தரப்பு முற்பட்டாலும், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராக மைத்திரியே இருப்பார் என்பதுதான் அவர்களது கருத்து. அதாவது, அடுத்த 4 வருடங்களுக்கு மைத்திரியை மீறி எதுவும் நடந்துவிட முடியாது எனச் சொல்லிக்கொள்வதற்கு அவர்கள் முற்படுகின்றார்கள். நிறைவேற்று அதிகாரத்தை மாற்றினால், அது மகிந்தவுக்கு வாய்ப்பாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனை மாற்றத் தேவையில்லை என ஶ்ரீல.சு.க. அமைச்சர்கள் தீர்மானித்திருப்பதன் பின்னணி இதுதான்.

அதேவேளையில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை விட்டால் களத்தில் இறக்கக்கூடிய வசீகரத் தன்மையைக்கொண்ட ஆளுமைகள் யாரும் ஶ்ரீலசு.க.வில் இல்லை. அதனால்தான் அவரை மீண்டும் களமிறக்கப்போவதாக சு.க. அமைச்சர்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள். மைத்திரியும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகின்றது. 19 ஆவது திருத்தத்தின்படி மகிந்த மீண்டும் போட்டியிட முடியாது. மற்றொருவரை அவர் களமிறக்குவார். ஐ.தே.க. மீண்டும் 'பொது வேட்பாளர்' என மைத்திரியை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கமுடியாது. ரணில் களமிறங்குவார். ஆக, அவ்வாறான ஒரு தேர்தல் மைத்திரிக்கு சாதகமாக அமையப்போவதில்லை. இவை அனத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தான் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டியராக மைத்திரி உள்ளார்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. தாக்குதல் நிலையில் இன்று மகிந்த உள்ளார். தற்காப்பு நிலையில் மைத்திரி உள்ளார்.

ஞாயிறு தினக்குரல்: 2017-01-15

No comments:

Post a Comment