Monday, January 23, 2017

அரசியலமைப்பாக்க முயற்சி 20 ஆவது திருத்தத்துடன் முடிவுக்கு வரப்போகிறதா?

0 புதிய அரசியலமைப்பு குறித்து ஒப்பாரி வைக்க வேண்டியவர்கள் யார்? மகிந்தவா? கூட்டமைப்பா?
0 மைத்திரி பிரிவின் முடிவால் புதிய பாதையில் செல்லும் அரசியலமைப்பாக்க முயற்சிகள்
0 சர்வஜனவாக்கெடுப்பைக் கோரும் த.தே.கூட்டமைப்பும் தயங்கும் மைத்திரி தரப்பினரும்
0 தேர்தல் சீர்திருத்தத்தில் உருவாகியிருக்கும் சர்ச்சையும், சிறிய கட்சிகள் வெளியிடும் அச்சமும் 

- பாரதி -
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பு ஒன்றை பதிவேற்றியுள்ளார். உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதை  அந்தப் பதிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. "நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு என மகிந்த பிரிவினர்தான் ஒப்பாரி வைக்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பினரல்லவா ஒப்பாரி வைக்க வேண்டும்" என்பதுதான் அவருடைய பதிவு. சுருக்கமான பதிவுதான். என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ன நடைபெறவில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடும் தெளிவான ஒரு பதிவு! கூட்டமைப்பினர் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இதில் மறைந்திருக்கின்றது.. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி பிரிவினர் அண்மையில் எடுத்திருக்கும் முடிவு அரசியலமைப்பாக்க முயற்சிகள் புதிய ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றது. தேசிய நலன் என்பது இப்போது கட்சி சார்ந்த, தனிநபர் சார்ந்த அரசியல் நலனாக மாற்றப்பட்டுவிட்டதையும் இது உறுதிப்படுத்துகின்றது. என்ன நக்கிறது? என்ன நடக்கப்போகின்றது? என்பது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்தாலும் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையிலான கருத்துக்களைத்தான் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவருகின்றன. ஒப்பாரி வைக்கும் மகிந்த அணியினரைத் தவிர. 

அரசியலமைப்புப் பேரவையின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு, அது எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலைதான் இப்போது உள்ளது. பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இதனை வெளியிட வேண்டும். இல்லையெனில் அரசியலமைப்புப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை மூலம் காலலக்கெடு விதித்திருக்கிறார். இல்லையென்றால் அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. 2016 இல் தீர்வை எதிர்பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ அமைதியாக இருக்கின்றார். 

மகிந்தவின் நகர்வுகளும்
மைத்திரி பிரதிபலிப்பும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மீள்எழுச்சிதான் இந்த நிலைமைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.  அரசியல் களத்தில் தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக மகிந்த எடுக்கும் ஒவ்வொரு நகர்வுக்கும் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய பிடியில் தளரத் தொடங்கிவிட்டதை உணர முடிகின்றது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், மக்கள் வழங்கிய ஆணை என்பவற்றுக்கு முரணாக தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியவராக மைத்திரி இன்று உள்ளார். 

அரசியலமைப்புத் திருத்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு வழிநடத்தல் குழுவிடம்தான் உள்ளது. இந்தக் குழு ராஜபக்‌ஷ பிரிவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே தோன்றுகின்றது. இந்தக் குழுவுக்கு மைத்திரியால் நியமிக்கப்பட்டவர்களே மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் வலுவடையத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் கால அவகாசத்தைக் கேட்டவர்கள் இருவர். ஒருவர் மகிந்த அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன. மற்றவர் மைத்திரி அணியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா. 

இதில் நிமால் சிறிபால டி சில்வா மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மைத்திரி தரப்புக்கு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதனைவிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், மகிந்த அணியினரின் கொள்கைகளுக்கு ஒத்ததாகவே அவரது செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் சிறுபான்மையினருக்குச் சாதகமான முறையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் நடைபெறும் என யாராவது நம்பினால் அது வெறும் பகற்கனவாகவே இருக்க முடியும். 

சுதந்திரக் கட்சியின்
முடிவின் பின்னர்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளைப் புதிய பாதைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. அவரது தலைமையிலான ஐ.ம.சு.மு.வில் 95 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுள்ளார்கள். இதில் சுமார் 50 முதல் 55 வரையிலானவர்கள் மகிந்தவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால், மேலும் சிலர் உள்ளே இருந்துகொண்டே மறைமுகமாக மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகச் சொல்லப்படுகின்றது. 

இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிக்கு ஆதரவான குழுவினர் இன்று பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில்தான் உள்ளார்கள்.  அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆபத்தான நிலைதான். இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரத்தையும் துறந்துவிட்டு அதிகாரப் பரவலாக்கலையும் வழங்குவது தற்கொலைக்குச் சமமானது என்ற கருத்து மைத்திரி தரப்பிலிருந்தே முன்வைக்கப்படுகின்றது. இது 'றிஸ்க்'கான விடயம் என அவர்கள் கருதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 

ஒன்று: அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதற்கு அவர்கள் தயாராகவில்லை. அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவதென்றால், அல்லது 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டும். அதற்கு மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என த.தே.கூ. பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சொல்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அதனைத்தான் வலியுறுத்துகின்றார். 

சர்வஜன வாக்கெடுப்பு;
தயங்கும் மைத்திரி அணி

ஆனால், சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதற்கு மைத்திரி அணியினர் தயாராகவில்லை. அவ்வாறு மக்களின் கருத்துக்கு அரசியலமைப்பு விடப்பட்டால், அங்கு வைத்து அதனைத் தோற்கடிக்க மகிந்த தரப்பு தயாராகவே இருக்கும். அவ்வாறான 'றிஸ்க்' ஒன்றை எடுப்பதற்கு மைத்திரி அணி தயாராகவில்லை. இரண்டாவதாக, நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படும் நிலையில் பிரதமராக வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மகிந்த ராஜபக்‌ஷ முன்னெடுப்பார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதுவும் தமக்கு ஆபத்தானதாகிவிடும் என மைத்திரி தரப்பு கணக்குப் போடுகின்றது. சர்வஜன வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதையும் கணக்குப் பார்ததுத்தான் மைத்திரி அணி செயற்படுகின்றது. 

இந்தப் பின்னணியில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் இரண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதில்லை என்பதும், 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதில்லை என்பதும்தான் அந்தத் தீர்மானங்கள். இதற்கு கட்சியின் மத்திய குழு இதுவரையில் அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், அதனைப் பெற்றுக்கொள்வது கடினமானதாக இருக்கப்போவதில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கும் நிலையில் அதற்கு மேலாக ஐ..க.வினால் செல்ல முடியும் என எதிர்பார்க்க முடியாது. 

தேர்தல் சீர்திருத்தம்
மட்டும்மே கையில்

இதன்படி பார்த்தால் தேர்தல் சீர்திருத்தம் மட்டும்தான் இப்போது கைகளில் உள்ளது. அதுகூட இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் இது தொடர்பில் அச்சத்தை வெளியிட்டிருக்கின்றன. அவசரப்பட வேண்டாம் என்றும் கேட்டுள்ளன. இறுதியில் பாரிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு என்று பெரிதாகத் தொடங்கிய நகர்வு வெறுமனே தேர்தல் சீர்திருத்தத்துடன் முடிந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது. அதாவது அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடக்கூடிய நிலைதான் உள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்த அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கியமான ஒரு பாத்திரம் அதற்கு இருக்கின்ற போதிலும் கூட இந்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது வெறும் பார்லைவயாளனாகவே இருக்கின்றது. மகிந்தவின் ஒப்பாரிக்கு அஞ்சி எதனையும் கொடுப்பதற்குத் தயங்கும் நிலையில் மைத்திரி இருப்பது வெளிப்படை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய கூட்டமைப்புத்தான் ஒன்றும் இல்லாததால் ஒப்பாரி வைக்க வேண்டும் என்பதுதான் மனோ கணேசன் போட்டுள்ள பதிவின் அர்த்தமா?

r.bharati@gmail.com

ஞாயிறு தினக்குரல் 2017-01-022

No comments:

Post a Comment