Sunday, January 29, 2017

காணாமலாக்கப்பட்டோர்; நீதி கிடைக்கவேண்டும்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்திருக்கின்றார். பெப்ரவரி 9 ஆம் திகதி இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவிருக்கின்றது. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான தெளிவாக பதிலொன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கும் என உறவினர்கள் நம்புகின்றார்கள். எட்டுவருட காலமாக தமது உறவுகளைத் தேடி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர்கள் விரக்தியின் விளிம்புக்கே வந்திருந்தார்கள். இந்த நிலையிலேயே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள். போராட்டத்தில் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், அதற்கான ஆதரவு பல்கிப் பெருகியமையும்தான் அரசாங்கத்தை இறங்கிவரச் செய்திருக்கின்றது.

போர் தீவிரமடைந்த காலத்திலிருந்தே வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம் ஆரம்பமாகிவிட்டிருந்தாலும், இறுதிப்போரின்போதுதான் இது உச்சகட்டத்துக்குச் சென்றிருந்தது. அப்போதுதான் பெருந்தொகையானவர்கள் சரணடைந்தார்கள் அல்லது உறவினர்களால் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இதனைவிட பலர் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டார்கள். இவ்வாறு "இனந்தெரியாதவர்களால்" கடத்தப்பட்ட பலர் பின்னர் இராணுவ முகாம்களில் இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அல்லது அவர்கள் இராணுவத் துணைக்குழுக்களால் கடத்தப்பட்டிருந்தார்கள். தலைநகர் கொழும்பில் இவ்வாறு கடத்தப்பட்டு காணாமலலாக்கப்பட்ட பலருடைய விவகாரத்தின் பின்னணியில் கடற்படையினர் இருந்துள்ளார்கள் என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்
றது.

இவ்வாறு காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கின்றது. முன்னைய ஆட்சிக்காலத்தில்தான் பெருந்தொகையானவர்கள் காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் நின்ற ராஜபக்‌ஷ அரசாங்கம் அதற்குப் பொறுப்புக்கூறும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கவில்லை. வலிந்துகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்படும் படைத் தரப்பை பாதுகாப்பதன் மூலமாகவே சிங்களக் கடும்போக்காளர் மத்தியில் தாம் கதாநாயகர்களாக இருக்க முடியும் என்று ராஜபக்‌ஷ அரசு கருதிச்செயற்பட்டது. அந்த ஆட்சியில் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதால்தான் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இரண்டு வருடகால மைத்திரி - ரணில் ஆட்சியிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறாத நிலையில்தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்ற முடிவை உறவினர்கள் எடுத்தார்கள். காணாமல்போனவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவிலோ அல்லது வேறு நிகழ்வுகளிலோ காணாமல்போனவர்களல்ல. அதிகபட்சமானவர்கள் சரணடைந்தவர்கள். பெற்றோரால் அல்லது நெருங்கிய உறவினர்களால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். போர் முடிவுக்கு வந்தவேளையில் படையினர் அவர்களை நேரில் அழைத்துச்சென்றதைப் பார்த்தவர்கள். இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையெனில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் உண்ணாவிரதமிருந்தவர்களின் கோரிக்கை.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன. இதற்குப் பின்னரும் பொறுப்புக்கூறுவதற்கு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் உறவுகள் உறுதியாக இருந்ததும், அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்துவந்ததும்தான் அராங்கத்தை பேச்சுவார்தைக்குக் கொண்டுவந்தது. தமது பாதுகாப்பு அமைச்சரையே களத்துக்கு அவசரமாக அனுப்பிவைக்கும் அளவுக்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. போராட்டத்துக்குப் பெருகிவந்த ஆதரவும், சர்வதேச ரீதியாக அது பெற்றுக்கொண்ட கவனமும்கூட அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம்.

போராட்டங்கள் தீவிரமடையும்போது இது போன்ற வாக்குறுதிகளை வழங்கி அதனை வலுவிழக்கச் செய்யும் உபாயத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பது இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவதை அரசாங்கம் விரும்பப்போவதில்லை. இலங்கை அரசின் ஆதரவுடன் இறுதியாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இங்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதுவுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் போராட்டங்கள் இடம்பெறுவது ஜெனீவாவிலும் இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிப்பதாகவே இருக்கும்.

பதிலளிக்கவேண்டிய கடப்பாட்டுக்கு அரசாங்கத்துக்கு ஏற்கனவே பலவருட காலம் அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இப்போது இரண்டுவார கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. படையினரால் கொண்டு செல்லப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடைபெற்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இதற்குப் பதிலளிக்கவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது. இப்போது பெற்றுக்கொண்டுள்ள அவகாசத்தைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவோ வலுவிழக்கச்செய்யவோ பயன்படுத்தாவது உறுதியான பதிலை அரச தரப்பு சொல்ல வேண்டும். தென்பகுதி அரசியல்நலன்களை மட்டும் இலக்காகக்கொண்டு செயற்பட்டால், சிறுபான்மையினரின் நம்பிக்கையை அரசாங்கம் முழுமையாக இழக்கவேண்டிய நிலைதான் உருவாகும். 
 
ஞாயிறு தினக்குரல்: 2017-01-29

No comments:

Post a Comment