குடாநாட்டை உலுக்கிய மர்ம மரணம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ள மற்றொரு மர்மக் கொலை யாழ்ப்பாண மக்களை மட்டுமன்றி இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. வேலனை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ மாது ஒருவதே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். 27 வயதான இந்தப் பெண்ணின் சடலம் அவர் தங்கும் அறையில் சீருடையுடன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தை தற்கொலை எனச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தெரியவந்திருக்கின்ற போதிலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அடித்துக்கூறும் வைத்தியசாலை பணியாளர்கள் இங்கு பணி புரியும் சிங்கள மருத்துவர் ஒருவரே இதற்குப் பொறுப்பானவர் எனவும் குற்றஞ்சாட்டியிருப்பதையடுத்து குறிப்பிட்ட மருத்துவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து அவர் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடைய ஆர்ப்பாட்டப் போராட்டங்களையடுத்து குறிப்பிட்ட வைத்தியரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருந்த போதிலும் பொலிஸார் குறிப்பிட்ட வைத்தியருக்குச் சாதகமான முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் விசாரணைகள் எந்தளவுக்குப் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள வைத்தியர் ஒரவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பது அரசாங்கத்துக்கும் பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால், அவரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மெற்கொண்டு வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிரக்கின்றது.
சுருக்கிட்ட நிலையில் சடலம்
வேலனை வைத்தியசாலையில் மருத்துவ மாதுவாகப் பணிபுரிந்துவந்த கைதடியைச் சேர்ந்த 27 வயதான சரவணை தர்சிகா என்ற பெண்மணியே கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார். வழமைபோல வெள்ளிக்கிழமை இரவுக் கடமைக்கு வந்த அவரது சடலம் சனிக்கிழமை காலை அவரது அறையில் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது. சுனிக்கிழமை காலையில் பணிக்கு வந்த சில மணி நேரத்திலேயே அவரது சடலம் மீட்கப்பட்டிருப்பது வைத்தியசாலைப் பணியாளர்களை அதிர்ச்சியடைவைத்துள்ள அதேவேளையில் வேலனைப் பகுதியிலும் இச்சம்பவம் பெரும் பதற்ற நிலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
தர்சிகா சுருக்கிட்டுத் தற்கொலை செய்தகொண்டுள்ளார் எனக் காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு காணப்பட்ட தடயங்கள் மற்றும் சடலம் தரையைத் தொடும் வகையில் இருந்தமை என்பன இது ஒரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மருத்துவமனை பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளதையடுத்து இங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கின்றது. அத்துடன் தர்சிகா தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த அவசியமும் இல்லை எனக் குறிப்பிடும் மருத்துவமனைப் பணியாளர்கள், குறிப்பிட்ட சிங்கள மருத்துவர் கடந்த சில வாரகாலமாகவே தர்சிகா மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மேற்கொண்டுவந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் குறிப்பிட்ட இரவும் சிங்கள மருத்துவரே கடமையிலிருந்தமையால் - அவர் மீதே சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் பொலிஸார் சகிதம் உடனடியாகவே சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், அதனைப் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிட்டார். இதேவேளையில் - கொலையுண்ட பெண்ணின் கைத்தொலைபேசியில் இறுதியாக எடுக்கப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி கிடைத்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இதேவேளையில் இந்த மரணத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என சிங்கள டாக்டரான பிரியந்த செனவிரட்ண மீது பணியாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து குறிப்பிட்ட டாக்டர் உடனடியாகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட டாக்டர் மரணமடைந்த பெண்ணை தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விஜயகலா அவசரக் கோரிக்கை
தர்சிகா மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளமை குடாநாட்டில் பெரும் அதிர்சியலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், இதில் சிங்கள வைத்தியர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறுமா என்ற சந்தேகத்தை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது. முக்கியமாக சம்பந்தப்பட்ட வைத்தியரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு அரசியல் விவகாரமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவருகின்றது. இந்த நிலையில் இந்த மர்ம மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய இந்த இளம் பெண் அங்கு பணியாற்றிய வைத்தியரான பிரியந்த செனவிரட்ண என்பவரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் சனிக்கிழமை காலை இவரது சடலம் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வரது மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணத்தில் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் குறித்த மருத்துவர் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய செயற் பாடுகள் கடமைபுரியும் பெண்களை அச் சுறுத்துவதாகவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இவற்றை இல்லா தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் இந்தச் சம்பவமானது வேலணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையினால் இது குறித்து பொலிஸாரும் நீதித் துறையும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும் பெண்கள் பாதுகாப்பாக கடமை புரிவதற்கு உரிய சூழல் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" எனவும் விஜயகலா அவசரக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பரலவாக இடம்பெற்றுவருவது தொடர்பாக விஜயகலா தனது செய்தியில் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. குடாநாடு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு எதிரான இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படாமல் விடப்படும் நிலை காணப்படுகின்றது.
மக்கள் ஆர்ப்பாட்டம்
தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ள பொதுமக்களும் மருத்துவமனைப் பணியாளர்களும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி குடாநாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். தர்சிகாவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் விபரங்கள் உத்தியோகபூர்வமான முறையில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற அவரது மரணச் சடங்கைத் தொடர்ந்து மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையும் குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், யாழ். மாவட்ட பொதுச் சுகாதார சேவைகள் சங்கம் என்பன இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின. மருத்துவர் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனக் கருதப்படுவோரை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைச்சு மட்டத்தில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுடக்கு நட்டவீடு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டதுடன், உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில் இரவுக் கடமைக்கு வருமாறு தம்மை நிர்ப்பந்திக்கக்கூடாது எனவும் இவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
சுகாதாரப் பணிப்பாளர் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து பணிப் பகிஷ்கரிப்பைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ள பணியாளர்கள் மீண்டும் கடமைக்குச் செல்லத் தொடங்கியிருப்பதையடுத்து மருத்துவமனையின் வழமையான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதேவேளையில் இந்த மர்ம மரணத்தில் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படும் சிங்கள மருத்துவரைக் கைது செய்யுமாறு செவ்வாய்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
சிங்கள மருத்துவர்
வடபகுதியில் தமிழ் மருத்துவர்களுக்குக் காணப்படும் தட்டுப்பாடு காரணமாகவே தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்கள் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள். அந்த வகையில்தான் சிங்கள மருத்துவரான பிரியந்த செனவிரட்ண யாழ்ப்பாணத்தில் பணிக்காக அனுப்பப்பட்டார். நாட்டின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருப்பதால், அதிகாரத்துடனும், ஆணவத்துடனுமே நடந்துகொண்டதாக மருத்துவமனைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். புடையினரின் பாதுகாப்பும் இருப்பதால் இவர்களுடைய அடாவடித்தனத்துக்கு அஞ்சி நடக்க வேண்டியவராகவே மற்றவர்கள் இருந்துள்ளார்கள்.
இரவு நேரக் கடமையில் இருக்கும் போது பெண் பணியாளர்களைத் துன்புறுத்தும் வகையில் இவர் நடந்தகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக இரவுக் கடமைக்கு வரும் தர்சிகா அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையிலேயே சனிக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டமை குடாநாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
No comments:
Post a Comment