மூன்றாவது நாளுடன் முடிவுக்கு வந்த
‘சாகும் வரையிலான’ உண்ணாவிரதம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ஆரவாரங்களுடன் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளே கைவிடப்பட்டுவிட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களையே கேலிக் கூத்தாக்கியிருக்கும் விமல் வீரவன்சவின் இந்தப் போராட்டம், இனவாத அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களின் அரசியல் உறுதிப்பாட்டைத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து உருவாகியிருக்கும் நிலை இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒருவித மோதல் நிலையை உருவாக்கியிருந்தது. மேற்கு நாடுகளும் இவ்விடயத்தில் தமது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தன.
விடுதலைப் புலிகளுடான போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். கொழும்பு, தும்புளைச் சந்தியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக வீரவன்ச ஆரம்பித்துள்ள இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஐ.நா.வின் நிபுணர் குழு கலைக்கப்படும் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருந்த நிலை கடந்த வாரத்தில் காணப்பட்டது.
இவ்வாறான நிபுணர்குழு ஒன்றை அமைக்கும் எண்ணத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட போதே கொழும்பு அதற்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் ஐ.நா.வின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு நாடென்ற முறையில் இதற்கு எதிராக தீவிரமான போராட்டம் எதனையும் முன்னெடுக்கக்கூடிய ஒரு நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகவுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவையும் ஜாதிக ஹெல உறுமயவையும் இதற்காக அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என்பது எதிர்பர்க்கப்பட்டதுதான். விமல் வீரவன்சவும் வழமைபோல தேசப்பற்று என்ற முகமூடியை அணிந்து கொண்டு ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார். தேசப்பற்றாளர்களும் இதனை ஒரு பாரிய போராட்டமாக முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தனர்.
உண்ணாவிரததத்தை ஆரம்பிக்க முன்னர் வீரவன்ச தெரிவித்த தகவல்கள் அவரது போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற பெரும் அச்சத்தையே உருவாக்கியிருந்தது. இந்தப் போராட்டத்தை மாவட்ட ரீதியாக நடத்த வேண்டும் எனவும், ஐ.நா.வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டால்கூட தான் தன்னுடைய போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும், இந்தப் போராட்டத்தில் தான் கொல்லப்பட்டால் தனக்குப் பின்னால் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார். அவரது உரையில் காணப்பட்ட அந்த உணர்ச்சி உண்ணாவிரத முடிவில் காணாமல் போய்விட்டது.
விமல் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவருக்கு ஆதரவாக மாவட்ட ரீதியாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இது நாட்டில் கொந்தளிப்பான நிலை ஒன்றை ஏற்படுத்தவும் இல்லை. பதிலாக வீரவன்சவின் போராட்டத்தை அனைவரும் ஒரு கேலிக் கூத்தாகவே பார்த்தனர். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இதனை ஒரு கோமாளிக் கூத்து என்றே வர்ணித்தன. பிக்குமார்தான் பெருமளவில் உண்ணாவிரத அரங்கில் கூடி பிரித் ஓதிக்கொண்டிருந்தார்கள். இதனைவிட உண்ணாவிரத அரங்கில் கூட வேடிக்கை பார்க்க வந்தவர்களைவிட உணர்ச்சிகரமாக உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்க வந்தவர்கள் என யாரையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அரச ஆதரவு ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்துக்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்தன.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டத்தைத் தட்டிவிட்டாலும், ஒரு தேசப்பற்றாளன் என்ற முறையில் மகிந்த ராஜபக்ஷவைவிட விமல் வீரவன்ச பிரபலமடைவதை விரும்பவில்லை. வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான வாஸஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்ற இராப்போசன விருந்து வைபவமே இதற்குச் சான்று. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சர் என்ற முறையில் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை அமைச்சர்களுக்காகவும், எம்.பி.க்களுக்காகவும் ஜனாதிபதி நடத்தினார். தமது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சித் தலைவர் ஒருவர் தேசத்துக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார் என்பதால் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை ரத்துச் செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற எந்தவிதமான சிந்தனையும் இன்றி கேளிக்கைகளுடன் கூடிய இந்த விரந்துபசாரத்தை அரசாங்கம் நடத்தியிருப்பதே விமல் வீரவன்சவை அரசாங்கம் எந்த இடத்தில் வைத்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம்.
ஜ.நா.வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது, ஐ.நா.வின் செயற்பாடுகளை சுமூகமான முறையில் முன்னெடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காததன் மூலம் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனைவிட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய விமல் வீரவன்ச முன்வந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டார். இதன் மூலம் விமலின் இந்தப் போராட்டத்துக்கு ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் உள்ளது வெளிப்படையாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஐ.நா.வுக்கு மட்டுமன்றி மேற்கு நாடுகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்து தமது அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்கள். அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்துவது எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உட்பட்டதாகும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அவர்கள், இலங்கை அங்கத்துவ நாடாக இருக்கும் ஐ.நா. சபையின் வாயிலை முற்றுகையிட்டு ஐ.நா. சபையின் அதிகாரிகளைப் பயமுறுத்துவதும் அவர்களைத் துன்புறுத்துவதும் சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல்களாகவே கருதப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். சர்வதேச ரீதியான இவ்வாறான செயற்பாடு இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமையும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா.வின் உதவிகள் அதற்குத் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஐ.நா.வுக்கு கீழ் வரும் அமைப்புக்களே பெருமளவு உதவிகளை மேற்கொண்டுவருகின்றன. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகை யிடப்பட்டுள்ளதையடுத்து - வடபகுதிக்கான ஐ.நா. உதவி நிறுவனங்களின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உதவி நிவாரணப் பொருட்களுடனான வாகனங்கள், மற்றும் பணியாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றுவருவதற்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என வடபகுதியிலுள்ள நிவாரண அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் ஐ.நா.வின் கீழ் வரும் அமைப்புக்களின் உதவிகள் அதற்குக் கட்டாயம் தேவை. இந்த உதவிகள் தடைப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம், உலக உணவுத் திட்டம், யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம், மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புக்களின் உதவிகளையும், ஆதரவையும் எதிர்பார்த்தே இலங்கை உள்ளது. இவற்றின் உதவிகள் தடைப்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.
அத்துடன் இந்த சண்டித்தன அரசியலைத்தான் தன்னுடைய இராஜதந்திரமாக அரசாங்கம் கருதுகின்றது. இது சர்வதேச ரீதியாக அரசியல் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கொழும்புக்கான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி நில் புனேயை ஐ.நா. அவசரமாக அழைத்திருப்பது பதில் நடவடிக்கை ஒன்றுக்கு ஐ.நா.வும் தயாராக இருப்பதைத்தான் காட்டியிருக்கின்றது. ஆலோசனைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், ஐ.நா.வின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் பற்றிய ஆலோசனைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீள அழைக்கப்பட்டிருப்பது கொழும்புக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
ஐ.நா. அமைத்துள்ள நிபுணர்குழுவைக் கலைக்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதனைக் கலைக்கும் உத்தேசம் எதுவும் தமக்கு இல்லை என்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். இந்த நிபுணர் குழு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையே விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் கொழும்பில் பரப்பிவருவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினர் ஐ.நா. சபையின் விசாரணைகளையடுத்து தூக்கிலிடப்படுவார்கள் என விமல் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துக்களின் மூலமாக மக்களுடைய உணர்வுகளை ஐ.நா.வுக்கு எதிராகத் தூண்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமைவாகவே ஐ.நா. சபை செயற்பட்டுவருகின்றது. ஈரான் உட்பட சில ஆபிரிக்க நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் தடைகள் ஐ.நா. சபையினால் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு உள்ளது. இவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தி சில நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை ஐ.நா. சபை கடந்த காலங்களில் எடுத்திருந்த போதிலும், அவ்வாறு தடைகளுக்கு உள்ளான நாடுகள் கூட ஐ.நா. சபையிலிருந்து வெளியேறுவதற்கு முற்படவில்லை. ஐ.நா. சபையின் முக்கியத்துவத்தையும் அதன் மேலாண்மையையும் அவை ஏற்றுக்கொண்டே செயற்பட்டுள்ளன.
உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்தக் காலப்பகுதியில் எந்த ஒரு நாடுமே தனித்துச் செயற்பட முடியாது. ஒவ்வொரு நாடும் மற்றையவைகளைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாது என்பதுடன் இந்த புதிய உலக ஒழுங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவமும் பிரதானமானதாக இருக்கின்றது. இதனை உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஒரு எல்லையுடன் வரையறுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றிவளைத்து அங்குள்ள பணியாளர்களைப் பயணமாக வைக்கப்போவதாகவும், ஐ.நா.வின் செயற்பாடுகளை முடக்கப்போவதாகவும் கூறியே வீரவன்ச தலைமையிலான குழுவினர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும் பின்னர் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தாலும் இதனை ஒரு முழுமையான போராட்டமாக மாற்றுவதற்கு அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் விரும்பவில்லை என்பதை இது புலப்படுத்துகின்றது. சர்வதேச ரீதியாக இவ்வாறான செயற்பாடு தமக்கு அவப்பெயரைத் தேடித்தருவதாக அமையும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அத்துடன் சர்வதேச அரங்கில் சங்கடமான ஒரு நிலையையும் இது உருவாக்கலாம். எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கத்தை எச்சரித்துவருகின்றன. இந்தநிலையில் இதனை ஐ.நா.வுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு அப்பால் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்குத்தான் அரசாங்கமும், விமல் வீரவன்ச குழுவினரும் முற்படுவதையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
சிக்கலான இந்த விவகாரத்தை மிகுந்த இராஜதந்திரத்துடன் கையாள வேண்டிய நிலையில் இதனை வெறுமனே ஒரு சண்டித்தனமான அரசியலாகக் கையாள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இராஜதந்திரமாக அணுகுவேண்டிய இந்த விவகாரத்தை தேசப்பற்று என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் முற்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு போராட்டத்தை கொழும்பில் நடத்தும் அதேவேளையில், அணிசாரா அமைப்பு மற்றும் சீனா, ரஷ்யா ஆகியவற்றைப் பயன்படுத்தி ஐ.நா. மீதான எதிரான அழுத்தங்களை அதிகரிப்பது அதன் திட்டமாகவுள்ளது. இருந்தபோதிலும் அணிசாரா அமைப்பு 118 நாடுகளைக் கொண்ட எண்ணிக்கையில் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், ஐ.நா.வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியளவுக்கு சக்திவாய்ந்த ஒரு நாடாக அது இல்லை. அதேவேளையில் பாதுகாப்புச் சபையின் நிரந்திர உறுப்பு நாடுகள் என்ற முறையில் ரஷ்யா சீனா என்பன வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்ற போதிலும், குறிப்பிட்ட நிபுணர்குழு ஐ.நா. செயலாளர் நாயகம் தனது விஷேட அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் அந்த நாடுகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தநிலையில்தான் சாகும் வரையிலான தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மூன்றாவது நாளே நிறுத்திக்கொண்டு ஜனாதிபதி கொடுத்த இளநீரைப் பருகிக்கொண்டு உண்ணாவிரத அரங்கிலிருந்து விமல் வீரவன்ச எழுந்து சென்றிருக்கின்றார்.
No comments:
Post a Comment