மகிந்த - ரணில் பேச்சுக்களும்
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கருத்தொருமிப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பித்த பேச்சுக்கள் அரசியல் அரங்கில் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்களைத் தொடர்ந்து சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்ற போதிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் தன்னிச்சையாகச் செயற்படாமல் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு ஒரு புதிய பாதையில் செல்வதற்கு அரச தரப்பு முற்பட்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் அதனைத் தன்னிச்சையாகச் செயற்படுத்துவதில் அரசாங்கம் சில நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதனால்தான் இவ்விடயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு முனைந்த அரசாங்கம் இப்போது எதிர்க்கட்சிகளுடன் கருத்து ஒருமிப்பை ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவதற்கு முன்வந்திருக்கின்றது. அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது - பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. இரண்டாவது - இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு. மூன்றாவது சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிலைமைகள் காரணமாக எதிர்க்கட்சிகளுடன் இணங்கிச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முக்கியமான விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார். அதாவது - ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்று தவணைகளுக்கு நீடிப்பதற்கான திட்டத்தை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் இப்போது முற்பட்டிருக்கின்றார். அதே அதிகாரங்கள் ஆனால் பதவி மட்டும் மாற்றம். அதாவது இது ஒரு பெயரளவிலான மாற்றமே தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது லேபிள்தான் மாற்றப்படுகின்றதே தவிர உள்ளடக்கம் அதேதான்.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை மகிந்த - ரணில் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க ரணில் விக்கிரமசிங்க ஜனாபதிபதி செயலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க எண்ணியிருக்கும் ஜனாதிபதி அதற்கு எதிரணியின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கருத்தொருமிப்பைக் காண்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் எனவும் இதன் முதற் கட்டமாகவே எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்திருப்பதாக ஜனாதிபதி செயலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுடன் பேச்சுக்கள் நடத்தப்படும்.
முன்னர் திட்டமிட்டிருந்த அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை அரசு இப்போது கைவிட்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த எண்ணியிருப்பதாக அறியவருகின்றது. இதன்படி நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படும். உத்தேச திட்டத்தின் படி ஒருவர் நிறைவேற்று அதிகார பிரதமராக எத்தனை தடவையும் பதவி வகிக்கக்கூடியதாக இருக்கும். அதேசமயம் நிறைவேற்று அதிகார பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் கவனம் செலுத்தப்படும். புதிய அரசியலமைப்புத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே (அதாவது 2016 இல்) நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் தாம் நினைத்தவாறு அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். எதிர்க்கட்சியிலிருந்து சிலரையாவது கட்சி பாயச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே அரசாங்கம் ஏற்கனவே தயாரித்திருந்த திட்டத்தைக் கைவிட்டு புதிய திட்டம் ஒன்றை இப்போது முன்வைத்திருக்கின்றது. ஆனால் அடிப்படையில் இது ஒரு பெயர் மாற்றமே தவிர பெரிதாக வேறு எதுவும் இல்லை.
நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டதாக இருக்கும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி என்பது அவ்வாறான ஒரு கடமைப்பாட்டைக் கொண்டதல்ல. அதாவது இது ஒருவகையில் அடையாள ரீதியான விட்டக்கொடுப்பாக மட்டுமே இருக்கும். இதனைவிட எந்த அதிகாரங்களையும் இந்த மாற்றங்களின் போது அரசாங்கத்தின் தலைவர் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. இதனைவிட சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். உண்மையில் இது வெறுமனே ஒரு அலங்காரப் பதவியாக மட்டுமே அமைந்திருக்கும்.
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் ஐ.தே.க. முன்வந்திருப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ஒத்துழைப்பை வழங்காவிட்டால், தமது கட்சியைச் சேர்ந்தவர்களைக் கட்சி மாறச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கும் என்பது ஐ.தே.க. தலைமைக்குத் தெரியும். ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இதனைவிட கட்சித் தலைமையில் மாற்றங்களையும் கட்சிப் புனரமைப்பையும் செய்வதற்கான முயற்சிகளை அதிருப்தியாளர்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில், தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் என ரணில் கருதியிரக்கலாம். அத்துடன் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது ஐ.தே.க.வுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
இதேவேளையில் இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் தமது அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஜே.வி.பி. குறிப்பிட்டிருக்கின்றது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை நீடிப்பதற்கு உருவாகியிருக்கும் அதிகரித்த எதிர்ப்பினால் அதனைக் கைவிட ஆளும் கட்சி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. தெரிவிக்கின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி மறுசீரமைப்புப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்குக் காலத்தைக் கடத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே சூழ்ச்சி இடம்பெறுகின்றது என ஜே.வி.பி. கடுமையாகச் சாடியிருக்கின்றது.
இருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.க்கும் இந்தப் பேச்சுக்களில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி. இந்தப் பேச்சுக்களில் நிச்சயமாகக் கலந்துகொள்ளும். ஆனால் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவியை அவர்கள் எதிர்ப்பார்கள் எனத் தெரிகின்றது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியும் ஒன்றுதான் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியும் ஒன்றுதான். லேபிள்தான் மாற்றப்படுகின்தே தவிர உள்ளடக்கம் ஒன்றுதான் என்பதுதான் ஜே.வி.பி.யின் கருத்தமாகும். அதனால் குறிப்பிட்ட திருத்தங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.
இதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அடுத்த வாரத்தில் இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படும் எனத் தெரிகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியா அல்லது பிரதமர் பதவியா என்பதைவிட, அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் போது இன நெருக்கடிக்கான தீர்வு அதில் எந்தளவுக்கு உள்ளடக்கப்படும் என்பதிலேயே அதிகளவுக்கு அதன் அக்கறை இருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். குறிப்பாக இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்தும்.
கூட்டமைப்மைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சுக்களின் போது தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக இல்லை. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும் கூட்டமைப்பின் தலைமை நடத்திய பேச்சுக்களின் போது இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது கூட்டமைப்பு தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் என்பதற்கான ஒரு சமிஞ்ஞையாக இது உள்ளது.
No comments:
Post a Comment