அடுத்ததாக அரசியலமைப்புக்கான திருத்தம் செப்டம்பர் முற்பகுதியில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
அரசியலமைப்பைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை என்ற நிலையில் 146 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ+டன் ஜனாதிபதி பேச்சுக்களை ஆரம்பித்தார். இப்போது முஸ்லிம் காங்கிரஸ் (08) ஆதரவும் கிடைத்துள்ள நிலையில் அரசாங்கத்துக்கான ஆதரவு 154 ஆக அதிகரித்திருக்கின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது எதிர்கொண்டிருந்த அனைத்துத் தடைகளையும் இப்போது தாண்டிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவர்த்தைகளை ஆரம்பித்த அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்க்கட்சி தரப்பில் உள்ளவர்களைத் தமது பக்கத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை தொடர வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இப்போது இல்லாமல் போயுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென்ற முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என ராவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும், எதிர்க்கட்சிக் கூட்டமைப்புக்கு இது ஒரு பாரிய பின்னடைவுதான். எதிர்க்கட்சிக் கூட்டமைப்பைப் பாதிக்காத வகையில் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவையும், ஆலோசனையையும் வழங்கும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்களைப் பாதிக்காத அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதரிப்பதென கட்சி முடிவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடிப்பதால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்த ஹக்கீம், அதில் எதாவது பிரச்சினைகள் உருவாகினால் அது தொடர்பில் பேசித் தீரத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றர்.
ஹக்கீமின் இந்தக் கருத்தின்படி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது உட்பட அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கு முழுமையான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கப்போகின்றது.
முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செல்ல வேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்கள் கொடுத்த கடுமையான நெருக்குதல்களில் தாக்குப் பிடிக்க முடியாத நிலையிலேயே கட்சியின் தலைவர் ராவூப் ஹக்கீம், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவை அவசரமாகச் சந்தித்து புதிய அரசியல் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியாகவே அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென்ற நிலைப்பாட்டை எடுக்காதுவிட்டால், கட்சியின் ஆறு உறுப்பினர்களை தன்னுடைய பக்கத்துக்கு இழுத்துக்கொள்வதற்கான உபாயம் ஒன்றை மகிந்த வகுத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. நான்கு உறுப்பினர்கள் ஆரம்பம் முதலே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தலைமையை வலியுறுத்திவருகின்றார்கள். ஆக, கட்சி உடைவதை அல்லது பிளவுபடுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு உபாயமாகத்தான் மகிந்தவுடன் பேசுவதற்கு ஹக்கீம் சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இரண்டு விடயங்களில் பேரம் பேசல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைவது. இதற்று அமச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுடன் 3 பிரதி அமைச்சர் பதவிகள் வழங்குவது
2. எதிர்க் கட்சியாகவே இருந்து கொண்டு அரசியலமைப்பு திருத்தத்தின் போது பாராளுமன்றில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது. இதற்காக முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்குவது.
இதில் முதலாவது திட்டத்தை நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது திட்டத்திற்கு இணங்கியதுடன் கட்சியில் இருந்து தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்குவதில்லை எனவும் கட்சியை உடைப்பது இல்லை எனவும் உறுதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது. கட்சியை உடைக்கக்கூடாது , கட்சி உறுப்பினர்களைத் தனித்தனியாக தமது பக்கத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக ஹக்கீம் முன்வைத்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருதரப்பு உடன்பாட்டின் மூலம் ஏற்கனவே அரசாங்கத்துடன் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் முரண்படாத அதே நேரம் முஸ்லீம் காங்கிரசையும் உள்வாங்கும் தந்திரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையாண்டுள்ளார். அதேவேளையில் கட்சி உடைவைத் தவிர்த்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், எதிர்க்கட்சி வரிசையிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கும் இது ஹக்கீமுக்கும் வசதியாகிப்போய்விட்டது. அதனால்தான் தான் அரசுக்கு ஆதரவளித்தாலும் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பை அது பாதிக்காது என ஹக்கீம் குறிப்பிட்டிருக்கின்றார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதற்குள்ள உடனடிப் பிரச்சினை அரசியலமைப்பை தனக்கேற்றவாறு திருத்திக்கொள்வதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதுதான். அதனை அரசாங்கம் செலவில்லாமலேயே (அதாவது- அமைச்சர் பதவிகளை வழங்காமலேயே) இப்போது பெற்றுக்கொண்டுவிட்டது.
ஐ.தே.க.தலைமையுடன் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்திருந்த போதிலும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடிப்பதற்கு ஆதரவிக்கக்கூடிய நிலையில் ஐ.தே.க. இல்லை. அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி தொடரக்கூடாது என்பதுதான் ஐ.தே.க.வின் நிலைப்பாடாகவும் உள்ளது. ஜனாதிபதிப் பதவி தொடர்வது தமக்குப் பாதகமாக அமையும் என்றே ரணில் கருதுகின்றார்.
ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது என்பதுதான் அவர்களுடைய பிரதான நோக்கம்! பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில் தனக்கேற்றவாறு அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதையே அரசுத் தலைமை விரும்பும்.
இப்போது தமது நோக்கில் முக்கிய தடைகளைத் தாண்டிவிட்ட அரசாங்கம், அரசியலமைப்புக்கான திருத்த யோசனைகளை செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருப்பது இந்தப் பின்னணியில்தான்.
No comments:
Post a Comment