Sunday, October 23, 2016

யாழ் பல்கலைக்கழக மாணவர் கொலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை நள்ளிரவு கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அத்துமீறிச் சென்று நடந்திருப்பது இதுதான் முதல் தடவையல்ல. போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் பொலிஸார் அமைதியை முற்றாகச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருந்த இரு மாணவர்களின் உயிர் இடைநடுவில் கொடூரமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களை நம்பியிருந்த குடும்பங்களையும், உறவுகளும் சோகக் கடலில் மூழ்கியுள்ளன. அவர்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பு.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படும் வகையிலேயே இருந்துள்ளது. இப்போதும் அவர்கள் போர்க்கால மனோ நிலையிலும், ஆதிக்க மனப்போக்கிலும்தான் உள்ளார்கள் என்பதை இந்தச் சம்பவம் பகிரங்கப்படுத்தியுள்ளது. வாள் வெட்டுக் குழுக்கள் உட்பட போதை வஸ்த்துக் கடத்தல்கள் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கக் கொண்டுவரப்படுவது தீவிரமாக அதிகரித்திருப்பதை அன்றாட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இருந்தபோதிலும், இவை கொண்டுவரப்படும் பாதையத் தடுக்கவோ, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதை முற்றாக நிறுத்தவோ பொலிஸாரால் முடியவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவனை துப்பாக்கிக் குண்டு துளைத்துச் சென்றுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகேயுள்ள மதில் ஒன்றில் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த மாணவனும் படுகாயமடைந்து மரணமடைந்திருக்கின்றார். இதனை ஒரு விபத்தாகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இருந்தபோதிலும், மாணவனின் உடலில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டு அடையாளம் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக அனுப்பப்படும் பொலிஸார் நிதானமாகச் செயற்படுவது அவசியம். மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தாமல் செல்கின்றது என்றால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இதற்கும் மேலாக படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்கோ பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவன் மரணமடைய, பின்னால் இருந்த மற்றைய மாணவன் மோட்டார் சைக்கிள் மதிலில் மோதியதால் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் ஒரு மாணவனையாவது காப்பாற்றியிருக்க முடியும். அதனைக்கூட பொலிஸார் செய்யவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட 5 பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஜனாதிபதியின் உத்தரவையடுத்து விஷேட பொலிஸ் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மாணவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மாணவனின் மார்பிலேயே துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்துச் சென்றிருப்பதை சட்ட மருத்துவ பரிசோதனையின் போது தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. குறிப்பிட்ட மாணவர்கள் தப்பிச் செல்வதற்கு முற்பட்டபோதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்குமாயின் மார்பிலல்ல முதுகிலேயே துப்பாக்கிச் சன்னம் துளைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனால் இது தொடர்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றள.

மாணவர்களின் மரணத்தையடுத்து கொந்தளிப்பான நிலை யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கின்றது. குறிப்பாக மாணவர்கள் அமைதியிழந்திருக்கின்றார்கள். இலங்கை போன்ற நாடுகளில் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவாவதென்பதே மிகவும் கடினமானது. அவ்வாறு உயர் கல்விக்குத் தெரிவான இரு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாகத்தான் குடாநாட்டில் கடந்த காலங்களில் பெரும் கலவரங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நாடுமுழுவதற்கும் பரவியும் இருக்கின்றது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பொலிஸ் மா அதிபரும் உறுதியளித்திருக்கின்றார்கள். நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு மேலாக எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்..

No comments:

Post a Comment