Tuesday, October 18, 2016

தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்பும் 'எழுக தமிழ்' சொல்லும் அரசியலும்


- சபரி -

யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் இரண்டு துருவங்களாகப் பிரிந்து செயற்படும் நிலைமை உருவாகியுள்ளதை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மு.திருநாவுக்கரசுவின் நூல் அறிமுகக் கூட்டத்தில் இடம்பெற்ற குழப்பங்களும் இதனை மேலும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் காணப்பட்டிருப்பினும், தேர்தல் என்று வரும் போது அவை ஒன்றாக நிற்பது வழமை. கூட்டமைப்புக்கு ஒருங்கணைப்புக் குழு என்று ஒன்று இருந்தாலும் கூட, அதனால் பங்காளிக் கட்சிகளை தொடர்ந்தும் ஒருங்கிணைக்கக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்ட போதே கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை அது முன்னெடுக்கப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது. கூட்டமைப்பின் தலைமையில் அதிருப்தியடைந்திருந்த கட்சிகள் அதில் இணைந்துகொண்டமை இதனை மேலும் உறுதிப்படுத்தியது. கூட்டமைப்பின் மிதவாதப் போக்கும், அரசுடன் அவர்கள் முன்னெடுக்கும் 'இணக்க அரசியல்' மூலமாக எதனையும் பெற்றுக்கொடுக்காத நிலையும், பேரவையின் அவசியத்தை தமிழ் மக்களுக்கு உணர்த்தியது. தமக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடக்கு முதலமைச்சர் கூறிக்கொண்டாலும் கூட, பேரவையின் செயற்பாடுகள் கூட்டமைப்பின்  தலைமைக்கு அழுத்தத்தை அதிகரிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன பேரவையில் இணைந்திருக்கின்றன. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பேரவையுடன் இணைந்து செற்படுகின்றது. ரெலோவும் தமிழரசுக் கட்சியும் இதற்கு எதிர் முகாமில் உள்ளன. ரெலோவின் தலைமை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து நின்றாலும்கூட, பேரவை நடத்திய 'எழுக தமிழ்' பேரணியில் ரெலோவின் முக்கிய புள்ளிகள் சிலரைக் காணமுடிந்தது. அதனால், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் ரெலோவின் தலைமை எதிர்காலத்தில் உள்ளக அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும் ரெலோ தலைமை தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் என எதிர்பார்ப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

தமிழரசுக் கட்சியின்
நம்பிக்கை இதுதான்

'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைமை எடுத்த நிலைப்பாடு ஆச்சரியமானதல்ல. இந்தப் பேரணில் தமது கட்சியைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக்கூடாது என தமிழரசுக் கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது. மக்கள் ஆதரவுடன் நடைபெறும் பேரணியில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றால் தமது ஆதரவுத் தளம் ஆட்டம் காணலாம் என தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் வெளியான இந்த அறிவிப்பு உறுதியானதாக இருந்தது. "மக்கள் போராட்டங்களுக்கு நாம் எதிரல்ல. ஆனால், போராட்டங்களை நடத்துவதற்கான தருணம் இதுவல்ல" என கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். தலைவர் இரா.சம்பந்தனின் நிலைப்பாடாகவும் இதுவே இருந்தது.

"புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இப்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த நிலையில் இது போன்ற பேரணிகள் எதிர்மறையான பலன்களைத்தான் கொண்டுவரும்" என்பது கூட்டமைப்புத் தலைமையின் கருத்தாக இருந்தது. "பேரவை"யின் செயற்பாடுகள் தமக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருப்பதையிட்டு தமிழரசுத் தலைமை அதிருப்தியடைந்திருந்தாலும் கூட, பங்காளிக் கட்சிகள் தனியாகச் சென்றுவிடும் நிலை உருவாகிவருவதையிட்டு அவர்கள் குழப்பமடையவில்லை. "போவதானால் போகட்டும்" என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருப்பதாகத் தெரிகின்றது. அடுத்ததாக வரப்போகும் தேர்தலில் தனியாகக் களம் இறங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகின்றது. பேரவையின் வருகையும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் கிடைக்கக்கூடிய மக்கள் ஆதரவும் தமக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கப்போவதில்லை என தமிழரசுத் தலைமை கருதுவதற்குக் காரணம் உள்ளது.

நவம்பரில் வரப்போதும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையைத்தான் தமிழரசுக் கட்சியினர் நம்பியிருக்கின்றார்கள். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுடனான சந்திப்பின் போது "கடும் தொனி"யில் சில கருத்துக்களை சம்பந்தன் தெரிவித்திருந்தாலும் கூட, இவ்வருட இறுதிக்குள் திருப்திகரமான தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்பதில் நம்பிக்கை வைத்தவராகவே சம்பந்தன் உள்ளார். பல சந்தர்ப்பங்களில் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்லியும் இருக்கின்றார். தான் சொன்னதை நிரூபிப்பதற்கு அவர் எதிர்பார்த்திருப்பது நவம்பரில் வரப்போகும் இந்த இடைக்கால அறிக்கையைத்தான். இந்த இடைக்கால அறிக்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய வகையில் அமையுமாயின் அது சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படும். அவ்வாறான நிலையில், அந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தவர்கள் நாமே என்ற முறையில் அடுத்த தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்து களம் இறங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயற்படுவதாகத் தெரிகின்றது.

இடைக்கால அறிக்கையும்
அது தரப்போகும் தீர்வும்...

இந்த இடத்தில்தான் வரப்போகும் தீர்வு எவ்வாறானது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அது குறித்து திட்டவட்டமாக எதனையும் சொல்லமுடியாவிட்டாலும், தேசிய நல்லிணக்கத்துக்கான தேசிய கொள்கைத் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கின்றார். 11 பக்கங்களைக் கொண்ட இந்தக் கொள்கைத் திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது இதில் தெரிவிக்கப்படும் முக்கிய அம்சமாகும். இருந்தபோதிலும், அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு ஒன்று தனியாகச் செயற்படுகின்றது. அந்தக்குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உப குழு ஒன்றுதான் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்கின்றது. இந்தக்குழுவின் பரிந்துரை அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. இருந்த போதிலும், இது எவ்வாறானதாக அமையும் என்பது குறித்து இதுவரையில் உறுதியான தகவல் இல்லை.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்கனவே அரச தரப்புடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலாநிதி ஜெயம்பதி விக்கிரமநாயக்க இதில் முக்கியமான பாத்திரத்தை வகிப்பதாகவும் தெரிகின்றது. இந்தப் பேச்சுக்களின் அடிப்படையில்தான் "ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி" என்ற கருத்தை சம்பந்தன் முன்வைத்தரா என்பது தெரியவில்லை.  ஒற்றையாட்சி என்பதை விட்டுக்கொடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது வெளிப்படை. அவ்வாறு விட்டுக்கொடுத்தால் சிங்களக் கடும் போக்காளர்களுக்கு அது வாய்ப்பைக்கொடுப்பதாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. கிடைக்கப்பெறும் தீர்வை தம்மால் தமிழ் மக்கள் மத்தியில் 'விற்பனை' செய்ய முடிந்தால் மட்டுமே அடுத்த தேர்தல்களை தனித்துச் சந்திக்க முடியும் என்பது தமிழரசுக் கட்சிக்குத் தெரியும். அதனால் ஏதோ ஒரு வகையில் இதற்கான அழுத்தத்தை அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். பான் கீ மூனுடனான பேச்சுக்களில் கடும் தொனியில் சம்பந்தன் கதைத்தது கூட இதற்காக இருக்கலாம்.

இந்தியாவின்
அணுகுமுறை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் போன்றவற்றை புதுடில்லி நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் அதிகளவுக்கு "என்கேஜ்ட்" ஆக இருக்குமாறு கூட்டமைப்புக்கு புதுடில்லி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்மூலமாகவே தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என புதுடில்லி கருதுகின்றது. மறுபுறத்தில் பேரவையினால் நடத்தப்பட்ட "எழுக தமிழ்" பேரணி குறித்த தகவல்களும் உடனுக்குடன் யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எழுக தமிழ் பேரணியை புதுடில்லி "பொஸிட்டிவ்"வாகவே பார்த்ததாக பேரவையின் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

"தென்னிலங்கையிலிருந்து எதிர்புக் குரல்கள் வருகின்றன என்பதற்காக தமிழர்களுடைய அபிலாஷைகளை வெளிப்படுத்துவதை அடக்கிவைத்திருக்கத் தேவையில்லை" என்ற அர்த்தத்தில் இந்தியத் தரப்பிலிருந்து பேரவையின் பிரமுகர் ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பேரணி முடிவடைந்த பின்னர் இந்தியத் தரப்பினர் அது தொடர்பில் பேரவையின் பிரமுகர்களுடன் பேசியிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதன்போது பேரணி தொடர்பில் ‘பொசிட்டிவ்’வான கருத்தையே இந்தியத் தரப்பு முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் அதிகாரம் மாறிய பின்னரும் சீனா தொடர்பான கொழும்பின் அணுகுமுறையில் பெரியளவிலான மாற்றம் ஏற்படாதது புதுடில்லிக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக சீனாவின் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. சம்பூரில் இந்தியாவுக்கு வழங்கப்படவிருந்த அனல் மின் திட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானுடனான முறுகல் நிலை தீவிரமடைந்திருப்பதால் பதற்றமடைந்திருக்கும் புதுடில்லியைப் பொறுத்தவரையில் கொழும்பின் இந்தச் செயற்பாடுகள் சீற்றத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். இவ்வாறான நிலையில் கொழும்பை வழிக்குக் கொண்டுவர தமிழர் தரப்பை புதுடில்லி கையாள்வது வழமை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுகூட இவற்றுக்கு விளக்கமளிக்க வேண்டியவராக இருந்துள்ளார்.

இந்தியா மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட, சர்வஜன வாக்கெடுப்புக்கு அது முன்வைக்கப்படும் போது அதன் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறிதான்! ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வந்தாலும் அந்தத் தடையைத் தாண்டுவதில் ஏற்படக்கூடிய நெருக்கடி தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்புக்களையும் தகர்த்துவிடலாம்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-09

No comments:

Post a Comment