Sunday, October 30, 2016

ஆயுத குழுக்களும் யாழ்ப்பாணமும்


'ஆவா குழு' என்ற பெயரில் செயற்படும் அமைப்பின் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், இது போன்ற ஆறு குழுக்கள் அங்கு இயங்குவதாக செய்தி வந்துள்ளது. ஆவா குழு உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வாளர்கள் இருந்துள்ளார்கள் என மற்றொரு செய்தி கூறுகின்றது. இந்தப் பரபரப்புக்களுக்கு மத்தியில் ஆவா குழுவை எதிர்கொள்வதற்காக தாம் இன்னொரு குழுவை களமிறக்கப்போவதாக சிங்கள தேசியவாத அமைப்பான 'ராவண பலய' எச்சரிக்கை விடுத்துள்து.

போருக்குப் பின்னர் அமைதி வாழ்வை விரும்பும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தச் செய்திகள் உள்ளன. குடாநாட்டு மக்களைப் பயணமாக வைத்து யாரோ சிலர் அரசியல் சூதாட்டத்தில் இறங்கியுள்ளார்களா என்ற கேள்விதான் இவற்றைப் பார்க்கும் போது எழுகின்றது. இந்தச் சூதாட்டத்தில் பலியாகப்போவது அமைதியை விரும்பும் யாழ்ப்பாண மக்கள்தான். யாழ்ப்பாணத்தில் உருவாகும் இந்த நிலை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடியது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமையும், அதன்பின்னர் இடம்பெறும் சம்பவங்களும் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் பல. அமைதியைக் குழப்பி, நெருக்கடி நிலை ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனவா என்ற கேள்வியை இவை எழுப்பியிருக்கின்றன. இவற்றை வெறுமனே தனிப்பட்ட சம்பவங்களாகவோ, தற்செயல் நிகழ்ச்சிகளாகவோ பார்க்க முடியாது.

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அங்கங்களாகவே இவை கருதப்பட வேண்டியவை. ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று இடம்பெற்று வருகின்றது. இவ்விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகளை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். இதற்கு நியாயமான சில காரணங்கள் உள்ளன. மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகள் அமைந்திருக்கவில்லை.

ஆவா குழுவோ அதுபோன்ற மற்றைய குழுக்களோ யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்தவையல்ல. கடந்த சில வருடகாலமாகவே அவற்றின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் அமைதியிழந்திருக்கின்றது. மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த அச்சத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதனை அதிகப்படுத்துவதாகவே பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இப்போது ஆவா குழு போன்ற ஆறு குழுக்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாகவும், அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான நடநடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை மட்டுமன்றி சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்கு ஆவா குழுவின் பெயரில் உரிமை கோரப்பட்டது. இதன்மூலம் ஆவா குழு என்பதை ஒரு புரட்சிகரமான அமைப்பு என்பது போல காட்டிக்கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வாள்வெட்டு போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாகவே ஆவா குழு அறியப்பட்டிருந்தது. இந்த உரிமைகோரல் துண்டுப்பிரசுரத்தின் மூலம் ஆவா குழுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

இதன்மூலம் மாணவர் கொலையை விட ஆவாகுழுவின் செய்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. மாணவர் கொலை விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆவா குழுவின் பெயரிலான துண்டுப் பிரசுரங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டன. ஒரு சிலரை மட்டும் உறுப்பினராகக் கொண்ட சிறிய குழு ஒன்று பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ள குடாநாட்டில் துண்டுப் பிரசுரங்களை எவ்வாறு பரவலாக விநியோகிக்க முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டது. இது பலத்த சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றது.

இராணுவக் குறைப்பு, தமிழ்ப் பொலிஸார் நியமனம் என்பன தொடர்பில் வடக்கிலிருந்து குரல் கொடுக்கப்படுகின்றது. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் மாணவர் கொலை போன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்க முடியும் என நல சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ண தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், வடபகுதியில் ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன என்ற செய்தி படையினர் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்துவதற்கு உதவலாம்.

இதற்கு மேலாக இந்த வாள்வெட்டுக் குழுக்கள் என அடையாளம் காணப்படும் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விஷேட அதிரடிப்படை களமிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்களைப் பார்க்கும் போது குடாநாட்டின் நிகழ்வுகள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைத் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்கள் ஒரு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகத்தையே எழுப்புகின்றது.

போருக்குப் பின்னைய யாழ்ப்பாண சமூகத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம். குறிப்பாக இராணுவப் புலனாய்வாளர்களின் கண்களுக்கு அகப்படாமல் அங்கு எதுவுமே நடைபெற முடியாது என்ற நிலை உள்ளது. பல்வேறு சம்பவங்களின் போதும் இதனை அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது.

ஆனால், குடாநாட்டில் செயற்படும் ஆறு ஆயுதக் குழுக்களை மட்டும் அவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றதா என்ற சந்தேகம் சாதாரண மக்கள் மத்தியிலும் உருவாகியிருப்பதைக் காணமுடிகின்றது. மக்களின் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த வரும்புகின்றோம்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-30

No comments:

Post a Comment