- யாதவன் -
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று விடயங்கள் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. இலங்கை தொடர்ந்தும் ஒரு மதச்சார்பான நாடாக அதாவது பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடாக இருக்குமா அல்லது ஒரு மதச்சர்பற்ற நாடாகுமா என்பது முதலாவது. ஒற்றையாட்சி தொடருமா என்பது இரண்டாவது. தேர்தல் சீர்திருத்தம் எவ்வாறு அமையும் என்பது மூன்றாவது.
இந்த மூன்று விடயங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் கையாளப்போகும் அணுகுமுறைதான் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காண்பதில் அக்கட்சிகளின் மனப்போக்கைப் பகிரங்கப்படுத்துவதாக அமையும். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையைத் தயாரிப்பதில் இந்த மூன்று விடயங்களும் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிறுபான்மையினரது நம்பிக்கை சிதைவடைந்து செல்வதையும் காணக்கூடியதாகவிருக்கின்றது.
அண்மைக்கால அரசியல் நகர்வுகளும், அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் இரண்டு விடயங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் ஒற்றையாட்சிக்கான உறுப்புரையும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையளிக்கும் உறுப்புரையும் ஏதோ ஒரு வடிவில் புதிய அரசியலமைப்பிலும் இடம்பெறத்தான் போகின்றது. அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சிலர் இதனை இப்போது பகிரங்கமாகவே தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவரும் நிலையில் அரசாங்கம் இல்லை. சமஷ்டியையும், மதச்சார்பற்ற அரசாங்கத்தையும் கேட்பவர்கள் தீவிரவாதிகளாகவும், குழப்பவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் நிலை உருவாக்கப்படுவது இதனால்தான்.
இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவசரப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து ஒன்று பல கேள்விகளையு எழுப்பியியிருக்கின்றது. "புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன" என பிரதமரின் அறிவிப்பு அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக இதற்கு பதில் அளித்தார். "அரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டல் குழுவில் இவ்விடயம் இது வரை பேசப்படவில்லை" என்றும் மதச் சார்பற்ற நாடு என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அங்கு 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் 70 வீதமானவர்கள். இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இலங்கைக் குடியரசு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதன்படி பௌத்த மதத்தை அரசாங்கம் பேணி, பாதுகாக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விடயம், 1978 ஆம் ஆண்டின் அரசிலயமைப்பிலும் இடம்பெற்றிருக்கின்றது. இப்போது கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பிலும் இது இடம்பெறப்போகின்றது.
சுமந்திரன் குறிப்பிடுவது போல, அரசியலமைப்பு பேரவையில் இது குறித்து ஆராயப்பட்டு முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், மதத்லைவர் ஒருவர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லை அரசியலமைப்புப் பேரவையில் பிரஸ்தாபித்திருப்பதாகத் தெரிகின்றது. பௌத்த மத மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அந்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கலாம் என குறிப்பிட்ட மதத் தலைவர் தெரிவித்ததாக செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமைச்சர் கிரியெல்லை இங்கு கருத்து வெளியிட்டிருப்பதுடன், புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் கோரியிருக்கின்றார். இதன்போது கூட்டமைப்பு உட்பட மற்றைய கட்சிகள் ளெனமாகவே இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மௌனம் சம்மதம் என்ற அடிப்படையில்தான் பிரதமரின் கருத்து வெளியாகியிருக்கின்றது.
பல்லினத்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது ஆபத்தானது என இலங்கைக்கு வருகை தந்திருந்த சிறுபான்மையின விவகாரங்கள் குறித்த ஐ.நா. விஷேட ஆணையாளர் றிட்டா ஐசாக் நாடியா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதால்தான் மேலாதிக்க நிலைப்பாட்டில் பௌத்த மதத்தவர்கள் சிலர் செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரைகளை அமைத்தல், ஏனைய மதத்தவர்களின் வணக்கத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பனவற்றுக்கும் இந்த முன்னுரிமை ஏதோ ஒருவகையில் காரணமாகின்றது. நாட்டில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக எனக் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பு கூட, சிறுபான்மை மதங்களை இரண்டாம் இடத்தில் வைப்பது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கொண்டுவரப்போவதில்லை.
"பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதனைப் பேணிப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏனைய மதங்களுக்கு உரிமை உள்ளது" என்ற வகையிலேயே தற்போதைய அரசியலமைப்பு உள்ளது. புதிய அரசியலமைப்பு இதனை மாற்றப்போவதில்லை என்றே தெரிகின்றது. "புதிய மொந்தையில் பழைய கள்" என்ற நிலைதான் இது. "மதச்சார்பற்ற நாடு" என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக சுமந்திரன் சொல்கின்றார். "30 வருடம் போராடி ஒன்றையும் காணவில்லை. இன்னும் இரண்டு மாதங்கள் பொறுங்கள்" என தமிழ் மக்களை அவர் கேட்கின்றார். தென்னிலங்கையில் மாற்றமடைந்துவரும் அரசியல் போக்கு சிங்கள தேசியவாதம் மீண்டும் பலமடைவதையே உணர்த்துகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய இலங்கை மன்றக் கல்லூரி உரையும், அதன் பின்னரான அரசியல் நகர்வுகளும் சிறுபான்மையினரின் நம்பிக்கை வெறும் காணல் நீராகப் போகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
ஞாயிறு தினக்குரல்: 2016-10-23
No comments:
Post a Comment