Tuesday, October 18, 2016

பயங்கரவாத தடைச் சட்டம்?

சர்வதேச ரீதியாக கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்கு முற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படும் என அரசாங்கத் தரப்பில் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலம் முன்னைய சட்டமூலத்தை விடவும் மோசமானதாக இருக்கப்போகின்றது என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இப்போது வெளியிட்டிருக்கின்றார். ஆக, சட்டியிலிருந்து இப்போது அடுப்புக்குள் விழுந்த கதையா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில் அதனை அடக்குவதற்காக படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகளவு அதிகாரங்களைக் கொடுப்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. கேட்டுக்கேள்வியின்றி தமிழ் இளைஞர்களைக் கைது செய்து கால வரையறையின்றி அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான அதிகாரத்தை படையினருக்கு இச்சட்டமூலம் வழங்கியது. இச்சட்டத்தின் கீழ் கைதான பலர் காணாமலும் போயிருக்கின்றார்கள். சிலர் சடலங்களாகவும் மீட்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் தென்னாபிரிக்காவில் இருந்ததை விடவும் கொடூரமான ஒரு சட்டமூலமாக இது வர்ணிக்கப்பட்டது. அதனால்தான் இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. மனிதாபிமானத்துக்கு முரணான ஒரு சட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

போர் முடிவடைந்த பின்னர் இந்தச் சட்டமூலத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இது தொடர்பாக அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகளின் ஒரு அம்சமாக இந்தச் சட்டமூலம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியை நல்லாட்சி வழங்கியிருந்தது. இறுதியாக இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரிலும் இவ்விடயம் எதிரொலித்தது. "நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்" என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியிருந்தது.

இந்த அழுத்தங்களின் பின்னணியிலேயே பங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக சர்வதேச தரத்துடனான புதிய சட்டமூலம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அண்மையில் நியூசிலாந்துக்குச் சென்றிருந்த வேளையில் இது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை நியூசிலாந்துப் பிரதருக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.  ரணில் விக்கிரமசிங்க நியூசிலாந்து புறப்பட்ட நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆக, இலங்கைத் தலைவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்ப்படுவது இலங்கைக்குச் சங்கடத்தைக் கொடுப்பதாக இருக்கும். எப்படியாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக அது அமைந்திருக்கும். இந்த இடத்தில்தான் புதிய சட்டமூலம் எப்படியானதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

இந்தக் கேள்விக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெளிவாகப் பதிலளித்திருக்கின்றார். குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் மற்றும் சட்ட ஆணைக்குழு திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அரசாங்கத்தின் திட்டங்களை சுமந்திரன் அம்பலப்படுத்தியிருக்கின்றார். அவர் அங்கு தெரிவித்த விடயங்கள் முக்கியமானவை. "பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய வரைபு ஒன்றைத் தயாரிக்குமாறு சட்ட ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பரிந்துரைத்திருந்தது. அதற்கமைய ஆணைக்குழு முன்பாக நான் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். இவ்வரைவு தயாரிக்கப்பட்டபோதிலும் அதனை நான் காணவில்லை. அது குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருக்கலாம். பதிலாக பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட குழு ஒன்று தற்போது புதிய வரைபு ஒன்றைத் தயாரித்துள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபு தற்போதுள்ள சட்டத்தைவிட மோசமானது என்ற தகவல் கிடைத்திருக்கின்றது." இவ்வாறு சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கப்படுவதற்கு அதிலுள்ள மோசமான அம்சங்களே காரணம். அதை நீக்குவதாகக் கூறிவிட்டு அதிலுள்ள மோசமான அம்சங்களை மற்றொரு பெயரில் கொண்டுவருவதற்கான சதி நடைபெறுகின்றதா என்ற கேள்விதான் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எழுகின்றது. தடுத்துவைத்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் போன்ற மனிதாபிமானத்துக்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கும் புறம்பான விடயங்கள் அரசாங்கத்தின் உத்தேச புதி சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேசத்தையும், மனித உரிமைகள் அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற கேள்வி சுமந்திரன் அம்பலப்படுத்தியிருக்கும்  தகவல்களின் மூலம் எழுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனும், சர்வதேசத் தரங்களைப் பேணும் வகையிலும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மனித உரிமைகள் அமைப்புக்களும் இவ்விடயத்தில் அதிகளவுக்கு வழிப்புடன் இருப்பது அவசியம்!

ஆசிரியர் தலையங்கம்: ஞாயிறு தினக்குரல்: 2016-10-09

No comments:

Post a Comment