Monday, October 24, 2016

சர்ச்சையை ஏற்படுத்திய உரை: தேசிய அரசில் வெடிப்பு?


- சபரி -

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய இலங்கை மன்றக் கல்லுரி உரை ஏற்படுத்திய அதிர்வுகள், கொழும்பு அரசியலில் தொடர்ந்தும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டில்ரூக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். தனது இராஜினாமாவுக்கான காரணத்தை டில்ரூக்‌ஷி தெரிவிக்காத போதிலும், ஜனாதிபதியின் உரை ஏற்படுத்திய தாக்கம்தான் அதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் "அரசியல் உள் நோக்கத்துடனானவை" என மைத்திரிபால தெரிவித்திருக்கும் நிலையிலேயே டில்ரூக்‌ஷி தனது பதவியைத் துறந்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் உத்தரவையா அல்லது பிரதமரின் உத்தரவையா முன்னெடுப்பது என்பதில் அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளதைத்தான் டில்ரூக்‌ஷியின் பதவிதுறப்பு வெளிப்படுத்துவதாக சிவில் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கின்றார். அரசின் பங்காளிகளாகவுள்ள இரு கட்சிகளும் வெவ்வேறான நிகழ்ச்சி நிரலில் செயற்படும் போது முக்கிய அதிகாரிகள் இவ்வாறான அழுத்தங்களுக்குள்ளாவது வழமை. டில்ரூக்‌ஷி தனது பதவிதுறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்காத போதிலும், இந்த அழுத்தங்களுக்குள் செயற்பட முடியாத நிலைமை அதற்குக் காணமாக இருக்கலாம். நல்லாட்சி மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஒரு சம்பவம் இது.

மைத்திரியின் உரையிருந்து டில்ரூக்‌ஷியின் இராஜினாமா வரை இடம்பெற்றுள்ள சம்பவங்கள் இரண்டு வருடத்தைக் கூட நிறைவு செய்யாத நல்லாட்சியில் கீறல் விழுந்திருப்பதை தெளிவாகக் காட்டியிருக்கின்றது. அத்துடன், எந்த வாக்குறுதியுடன் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அதனை மீறுவதாக ஜனாதிபதியின் உரை அமைந்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சர்ச்சைகளின் மத்தியில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை நாடு திரும்பியிருக்கிறார். உருவாகியிருக்கும் நெருக்கடியைத் தணிப்பதற்கு இரு தரப்பினரும் அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இப்போது எழுப்பப்படும் கேள்வி.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகிய மூன்றுமே ஜனாதிபதியின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. நல்லாட்சியை உறுதிப்படுத்துவதில் இந்த மூன்று பிரிவினருமே முக்கிய பங்கை வகிக்க வேண்டியவர்கள். இவை மூன்றுமே அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி தேவை ஏற்பட்டால், அதன் செயற்பாடுகளில் தான் தலையிட வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார். இவ்வாறான தாக்குதல் ஒன்றை ஜனாதிபதி பகிரங்கமாக நடத்துவார் என ஐ.தே.க. ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. என்ன நோக்கத்துடன் இந்தத் தாக்குதலை ஜனாதிபதி நடத்தியிருந்தாலும், இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் நம்பகத்தன்மைதான்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உடனடியாக இடம்பெற்றது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்கவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளே ஜனாதிபதியின் சீற்றத்துக்குக் காரணமாக இருந்தமையால் அவரும் பேச்சுக்களில் பங்குகொண்டிருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அமைச்சை ஜனாதிபதி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய அரசாங்கத்திலுள்ள இரு கட்சிகளுக்கும் இடையில் பதற்றநிலை காணப்பட்டது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இந்த பதற்ற நிலை ஓரளவுக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தேசிய அரசாங்கத்துக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்தச் சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக கொள்கைத் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் இரு பிரதான கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த திங்கட்கிழமை முதல் முறையாகச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், வரவு செலவுத் திட்டம் உட்பட சில விடயங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பினர் அதிருப்தியமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் 10 ஆம் திகதி அரசின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பட்ஜெட்டில் வெளியேயிருந்து மட்டுமன்றி அரசுக்கு உள்ளேயிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பும் எனத் தெரிகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவினால் கட்சியில் பாரிய பிளவு ஒன்றை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய நிலையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே இலங்கை மன்றக் கல்லூரி உரையை நிகழ்த்தியிருந்தார். படைத் தரப்பின் ஆதரவையும், சுதந்திரக் கட்சி தீவிர விசுவாசிகளையும் ராஜபக்‌ஷ தனது பக்கத்துக்கு கவர்ந்துவருகின்றார். இந்தநிலையில் முன்னாள் படைத் தளபதிகளும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்களும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதை ராஜபக்‌ஷ தனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வார் என்பது மைத்திரிக்குத் தெளிவாகத் தெரியும். கூட்டுறவுத் தேர்தல்களில் ராஜபக்‌ஷ தரப்பின் ஆதரவு அதிகரித்துவருவது மைத்திரிக்கு ஒரு ஆபத்தான சமிஞ்ஞையாகவே உள்ளது.

ரணிலையும் ஒரேயடியாகப் பகைத்துக்கொள்ளாமல், ராஜபக்‌ஷவின் ஆதரவுத் தளம் வளர்ச்சியடைவதையும் தடுக்க வேண்டும் என்ற நிலையிலேயே மைத்திரி இப்போது காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றார். ரணிலும் இதனைப் புரிந்துகொண்டுள்ளவராகவே தனது அரசியலை முன்னெடுக்கின்றார்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-23

No comments:

Post a Comment