Tuesday, October 18, 2016

ஜனாதிபதி மைத்திரி சொல்வது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான அவருடைய தேன்நிலவு முடிவுக்கு வரப்போகின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கின்றது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணையில் அரசாங்கம் நடந்துகொள்ளும் முறையை பகிரங்கமாக அவர் விமர்சித்திருக்கின்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன இந்தளவுக்கு கடும் தொனியில் கருத்து வெளியிட்டிருப்பது இதுதான் முதல்தடவை என்பதால், அரசியல் மற்றும் ஊடகத் தரப்பினரது கவனத்தை இது அதிகளவுக்குப் பெற்றிருக்கின்றது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும் மூன்று அமைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய இந்த உரையின் போது சாடியிருந்தார். சுயாதீன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும் இதற்குள் அடங்கும். அரசியல் நோக்கத்துடன் இந்த ஆணைக்குழுக்கள் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, அந்த ஆணைக்குழுக்களின் செயலாளர்களையும் எச்சரித்திருந்தார். இந்த செயலாளர்களை ஜனாதிபதியே நியமித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும், அவர்கள் தமக்குரிய எல்லைகளை மீறிச் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். குறிப்பாக அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் செயற்படும் போது அது குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

முன்னாள் படை அதிகாரிகள் மூவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட முறையே ஜனாதிபதியைச் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கின்றது.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை விசாரணைக்குள்ளாக்குவதில் மூன்று ஆணைக்குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன. நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, சுயாதீன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்பனவே அவையாகும். இந்த மூன்று ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளையும் கண்டனத்துக்குள்ளாக்கிய ஜனாதிபதி சிறிசேன, இவை அரசியல் நிகழ்சி நிரலுக்கு அமையச் செயற்படக்கூடாது எனவும் எச்சரித்தார். விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகளை விசாரணைக்குக் கொண்டு செல்வதன் மூலம் அவர்களை துன்புறுத்தலுக்குள்ளாகக் கூடாது எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பனிப்போர் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கியிருக்கின்றார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், ஜனாதிபதியின் இந்த உரை அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுதான் மைத்திரியின் இந்த உரை எனக் கருதலாம். பாரம்பரியமாகவே எதிர் - எதிர் அணிகளாக இருந்து செயற்பட்ட இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது சில பிரச்சினைகள் உருவாகுவது வழமைதான். இரு அணிகளுக்கும் கூட்டுச் சேர்வதற்கு சில நிர்ப்பந்தங்கள் இருந்துள்ளன. அந்த நிர்ப்பந்தம்தான் இன்று வரையில் தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அதிரடியான அறிவிப்பின் பின்னணி என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. ஐ.தே.க.வின் ஆதரவுடனேயே மைத்திரிபாலவினால் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அதேபோல மைத்திரியின் ஆதரவு இருப்பதால்தான் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சியை அமைத்து பிரதமராக முடிந்தது. ஆனால் மற்றொரு தேர்தலை எதிர்கொள்வதில் மைத்திரி தரப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அவர் தலைமைதாங்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் அணிவகுத்து நிற்கின்றது. தனியான கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். சிறிசேன எதிர்கொள்ளும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி இதுதான். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறிசேன தரப்புக்கு இது பிரச்சினையைக் கொடுக்கும். ஐ.தே.க.வும் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை உள்ளது.

மைத்திரி தரப்பின் மீது மகிந்த தரப்பினரால் இன்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக இருப்பது இரண்டு விடயங்கள்தான். ஒன்று: ஶ்ரீலங்காக சுதந்திரக் கட்சியை ஐ.தே.க.விடம் அவர் அடகுவைத்துவிட்டார் என்பது. இரண்டு: போர் வெற்றியின் கதாநாயகர்கள் பழிவாங்கப்படுவதை அவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்பது. இதன் மூலம் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களைத் தன்னுடன் அணி திரட்டுவதற்கும், சிங்களக் கடும் போக்காளர்களை மைத்திரியிடமிருந்து தனிமைப்படுத்தவும் மகிந்த தரப்பு முயன்றுள்ளது. அதேவேளையில், போர் வெற்றிக் கோஷத்தைத்தான் மகிந்த தரப்பு தமது கட்சியைப் பலப்படுத்துவதற்குப் பிரதானமாக நம்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் தன்னுடைய தரப்பைப் பலப்படுத்துவதற்கான ஒரு உபாயமாகவே ஜனாதிபதியின் இந்த உரையைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அதாவது சிங்களத் தேசியவாதிகளைக் கவர்ந்திழுப்பதற்காக தனது தொனியை அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் தேசத்தின் நலன்கள் என்பதைவிடவும், கட்சியின் நலன்கள் சார்ந்த செயற்பாடுகளே வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இனநெருக்கடி தீவிரமடையவும் அதுதான் காரணம். இப்போதும், தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கும் இரு பிரதான கட்சிகளும், கூட்டு எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பும் நாட்டின் எதிர்கால நலன்கள் குறித்ததான அக்கறயைவிட, தமது கட்சியின் நலன்சார்ந்த நகர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இது சிங்களத் தேசியவாதிகளுக்கு உற்சாகமளிப்பதாக அமையலாம். ஆனால், நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்காகக் காத்திருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே அமையும்.

ஆசிரியர் தலையங்கம்: ஞாயிறு தினக்குரல்: 2016-10-16

No comments:

Post a Comment