- சபரி -
'சன்டே லீடர்' பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியர் சலந்த விக்கிரமதுங்கவின் கொலை விசாரணையில் ஏற்கனவே காணப்பட்ட குழப்பங்களை இராணுவப் புலனாய்வு அதிகாரி ஜெனமானேயின் தற்கொலை அதிகரித்திருக்கின்றது. 57 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயமானே, லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்தது தானே என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அக்டோபர் 14 ஆம் திகதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார். லசந்தவின் கொலை வழக்கில் இச்சம்பவம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. புதிய கோணத்திலிருந்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயத்தில் பொலிஸாரை இரு விடயங்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒன்று இது தற்கொலையா என்பது. இரண்டாவது குற்ற ஒப்புதல் கடிதம் அவரால் எழுதப்பட்டதா என்பது. இந்த இரு விடயங்களிலும் இப்போது பொலிஸாருக்குத் தெளிவு ஏற்பட்டிருக்கின்றது. இது தற்கொலைதான் என்பதை சட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இரண்டாவதாக, குறிப்பிட்ட கடிதம் அவரால்தான் எழுதப்பட்டது என்பதை அவரது மகன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். இதனால், விசாரணை இப்போது அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கின்றது.
லசந்தவின் கொலைக்கு ஜெயமானேதான் காரணம் என்றால், அவர் எதற்காக அது தொடர்பில் காவல் துறையினரிடம் வாக்குமூலம் ஒன்றைக் கொடுக்காமல் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? இந்தக் கொலைக்கு உத்தரவிட்டவர்கள் யாராக இருக்க முடியும்? மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை எனவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜெயமானே கூறியிருப்பது எதற்காக? இது போன்ற கோள்விகளுக்கு பதில் காணப்பட வேண்டும். இதனைவிட ஜெயமானேக்கு யாராவது அழுத்தம் கொடுத்தார்களா என்பதும் கண்டறியப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. இந்த விடயங்களைக் கண்டறியும் நோக்கத்துடன்தான் பொலிஸாரின் விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைவிட, ஜெயமானேயின் கடிதம் உணர்வுபூர்வமானதாக இல்லாமல், அதிகளவுக்கு "உத்தியோகபூர்வ"த் தன்மையைக் கொண்டதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதவது, தற்கொலை செய்யத்துணியும் ஒருவரது கடிதம் உணர்வுபூர்வமானதாகவே இருக்கும். அதனால் இந்தக் கடிதம் மற்றொருவரின் தேவைக்காக எழுதப்பட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் கடிதத்துக்குக் கீழ் கையொப்பமிடப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பிலும், சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு கோணங்களிலிருந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.
புலனாய்வுப் பிரிவில்
20 வருட கால சேவை
ஜெயமானே 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவில் இணைந்துகொண்டவர். அதன்பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவில் 1987 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர். 2007 நவம்பரில் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் புலனாய்வுப் பிரிவிலேயே கடமையாற்றியவர். அதாவது புலனாய்வுப் பிரிவில் 20 வருடகால அனுபவம் அவருக்குள்ளது. லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டது 2009 ஜனவரி 8 ஆம் திகதி. அதாவது சேவையிலிருந்து அவர் ஓய்வு பெற்று ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்துள்ள நிலையிலேயே லசந்தவின் கொலை இடம்பெற்றது.
தற்கொலை செய்துகொண்ட ஜெயமானேயின் உடல் கேகாலையிலுள்ள பொது மயாமன் ஒன்றில் அக்டோபர் 16 ஆம் திகதி புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மூன்றாவது தினம் அதாவது அக்டோபர் 19 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவையடுத்து உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. ஜெயமானேயின் கைவிரல் அடையாளங்கள் உட்பட மேலும், ஆதாரங்கள் பெறப்படாமல் உடல் அவசராக புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்தே உடலை தோண்டியெடுக்கும் உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக உடல் கேகாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஜெயமானேயின் மனைவி வெளிநாடு ஒன்றில் தொழில் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பிள்ளைகளில் ஒருவர் சம்பவம் நடைபெற்ற போது வெளிநாடு சென்றிருந்தார். மற்றொரு மகன் தனியாக வாழ்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெயமானேயுடன் அவரது இறுதி மகன் மட்டும்தான் வசித்து வந்திருக்கின்றார். சம்பவம் நடைபெற்றபோது அவரும் வெளியில் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையிலேயே ஜெயமானே தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்.
புலனாய்வுப் பிரிவு
துரித விசாரணை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோலையடுத்தே ஜெயமானேயின் உடல் மீண்டும் தோண்டப்பட்டது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் உத்தரவையடுத்து விஷேட பொலிஸ் குழு ஒன்று இப்போது விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றது. ஜெயமானே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னதாக வீட்டில் இருக்கவில்லை என்ற தகவல் சி.ஐ.டி.யினருக்குக் கிடைத்துள்ளது. இந்த நாட்களில் அவர் எங்கு சென்றிருந்தார் யாரையெல்லாம் சந்தித்திருக்கின்றார் என்பதை அறிவதற்கு சி.ஐ.டி.யினர் முயற்சிக்கின்றார்கள். ஜெயமானேயின் தற்கொலையின் பின்னணியை அறிவதற்கு இந்த விபரங்கள் அவசியம் என அவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.
லசந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் எனக் கருதப்பட்டு றிமாண்டில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம குற்றமற்றவர் எனவும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஜெயமானே தன்னுடைய தற்கொலைக் குறிப்பில் தெரிவித்திருந்தார். உடலகமவுக்கும் ஜெயமானேக்கும் இடையிலான தொடர்புகளையிட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றார்கள். இது தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஜெயமானேயின் கைப்பேசியிலுள்ள தரவுகள் அவசியம். அவரது கைப்பேசியை கேகாலை பொலிஸார் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இருந்தபோதிலும் அதிலுள்ள பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடமிருந்து அந்தப் பதிவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளையில், ஜெயமான்னேயுடன் பணியாற்றிய 200 இராணுவப் புலனாய்வாளர்களை அடுத்து வரும் வாரங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் பட்டியலை தருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இராணுவத் தலைமையகத்திடம் கோரியுள்ளனர். ஜெயமானேயின் சடலத்தை கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்த ஆட்டோ சாரதியின் வாக்குமூலத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முக்கியமானதாகக் கருதுகின்றார்கள்.
லசந்த விக்கிரமதுங்கவின் உடல் ஏழு வருடங்களின் பின்னர் கடந்த மாதம்தான் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் மூலம் விசாரணைகள் புதிய கோணத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிலையில்தான் இப்போது ஜெயமானேயின் தற்கொலை இடம்பெற்றிருக்கின்றது. அவரது சடலமும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. தோண்டியெடுக்பப்படும் இந்தச் சடலங்கள் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுமா?
ஜெயமானேயின் பூதவுடல் தோண்டி எடுக்கப்படுகின்றது |