Sunday, January 15, 2012

கொழும்பு வரும் கிருஷ்ணா!

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பு வரும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் மேற்கொள்ளப்போகும் பேச்சுக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாகவே அனைவரது கவனமும் இன்று திரும்பியுள்ளது. கிருஷ்ணாவின் இந்த விஜயத்தின் போது பொருளாதார உடன்படிக்கைகள் சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டாலும்கூட, அரசியல் விவகாரங்களே இதில் மேலோங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களில் காணப்படும் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு கிருஷ்ணாவின் விஜயம் உதவுமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாகவுள்ள விடயமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் கவனத்துக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது. 1980 களில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்து அதன் மூலமாக இலங்கைப் பிரச்சினையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியளவுக்கு இந்தியா தன்னை உருவாக்கிக்கொண்டது. இந்தியத் தலையீட்டின் மூலம்தான் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் உருவாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களும் இணைக்கப்பட்டது. இருந்தபோதிலும், நோர்வேயின் மத்தியஸ்த்ததுடன் அரசு - விடுதலைப் புலிகள் பேச்சு இடம்பெற்ற காலத்தில் இந்தியா ஒதுங்கியிருப்பதாகவே காட்டிக்கொண்டது. நேரடியான தலையீட்டை மேற்கொள்ளவில்லை. திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பேச்சுக்களை வழிநடத்துவதற்கு இந்தியா முற்பட்டது இரகசியமானதல்ல.

போர் முடிவுக்கு வந்து விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது. 13 வது திருத்தம் இந்திய அழுத்தங்களால் உருவாக்கப்பட்டது என்பதால், அதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இந்தியா பார்த்தது. அதனைவிட இனநெருக்கடிக்கான தீர்வாக இதுவரை காலங்களில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் 13 வது திருத்தமே அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.

ஆனால், தமிழ்த் தரப்பைப்பொறுத்தவரையில் 13 வது திருத்தம் என்பது போதுமானதாக இருக்கவில்லை. மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்த் தரப்பினர் இதனை இந்தியாவுக்குச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் புதுடில்லிக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் 13 பிளஸ் எனக் கூறி இந்தியாவை நம்ப வைத்துக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவை அவரால் குளிர்விக்க முடிந்தது. மறுபுறத்தில் 13 இல் உள்ளவற்றை வெட்டிக்குறைப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினார். இதன் மூலம் சிங்கள - பௌத்த கடும்போக்காளர்களை அவரால் திருப்திப்படுத்த முடிந்தது. உள்நாட்டு அரசியல் வெற்றிகளுக்கு இதுவே அவருக்கு அவசியமானதாகவும் இருந்தது.

வடக்கு கிழக்கு பிளவுபடுத்தப்பட்டபோது இந்தியாவால் எதனையும் செய்ய முடியவில்லை. இப்போது 13 வது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை வருகின்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் தற்போது அதற்குள்ள மட்டுப்பாடுகள் கவனிக்கப்படவேண்டியவை.

1980 களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தன அரசாங்கத்தை இந்தியாவால் ஆட்டுவிக்க முடிந்தது என்பது உண்மைதான். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று - தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனை வைத்து ஜெயவர்த்தனவை அச்சுறுத்தக்கூடிய நிலையில் இந்தியா இருந்தது. இரண்டு - தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை வல்லரசு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையின் வான் எல்லைக்குள் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களை இந்தியா போட்டபோது வல்லரசுகள் அனைத்தும் மௌனமாக அதனை அங்கீகரித்தன. இலங்கை இந்திய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பாதகமான அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருந்த போதிலும் அமெரிக்கா அதனை வரவேற்றது. இந்தப் பின்னணியில்தான் ஜெயவர்த்தன அடிபணிந்து 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்துக்கக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

இப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பணியவைப்பதற்கான பிடி எதுவும் புதுடில்லியிடம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லி சொல்வதைக் கேட்கக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும்கூட, அது பலம்வாய்ந்த ஒரு அமைப்பல்ல. தமிழர்களின் பிரதான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்து அவர்களுக்கு இருந்தாலும், அதற்குரிய பலத்தையோ கட்டமைப்பையே அவர்கள் கொண்டிருக்கவில்லை. சர்வதேச ரீதியாக இருக்கும் அங்கீகாரம் மட்டும்தான் அதற்குள்ள ஒரே பலம். அதேவேளையில் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது. இதனைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சீனா மகிந்த அரசுடன் கொண்டுள்ள உறவுகளும் இந்தியாவுக்குப் பாதகமான ஒன்று. மகிந்தவுக்கு அழுத்தங்களை அதிகரித்தால் அவர் சீனாவுடன் மேலும் நெருங்கிச் சென்றுவிடுவார் என்பதால் இந்தப் பிரச்சினையை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்குள்ளது.

போர்க் குற்றங்கள் என்பதை வைத்து மகிந்தவைப் பணியவைப்பதற்காக புதுடில்லி எடுத்த சில முயற்சிகளுக்கு மகிந்த பணிவதாகத் தெரியவில்லை. போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெறுமாயின் அதன் பின்னணியில் இந்தியாவுக்குள்ள சம்பந்தங்களும் வெளிவரலாம் என்பதால் அதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதேவேளையில், தமிழகத்திலிருந்து உருவாகக்கூடிய உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாக வேண்டும் என்ற தேவையும் புதுடில்லிக்குள்ளது. அதற்காகத்தான் இந்த விஜயங்கள் அக்கறைகள்.

இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாதிருக்கின்றது என்பதை சாதாரண தமிழர்களே பரிந்துகொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இந்தியாவை நம்பியிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. இது மக்களை ஒரு மாயையில் வைத்திருப்பதற்கே உதவும். 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக ஒரு வருடத்துக்கு முன்னர் வந்த அமைச்சர் கிருஷ்ணா, அந்தத் திட்டம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாத நிலையிலேயே நாளை மீண்டும் வருகின்றார். கொழும்பின் ஒத்துழைப்பின்மைதான் இந்தத் திட்டம் முன்னேற்றமின்றிக் காணப்படுவதற்கக் காரணம் எனக் கூறப்படுகின்றது. ஆக, வீடுகளைக் கட்டிக்கொடுப்பதைக் கூட உருப்படியாகச் செய்ய முடியாத இந்தியாவால் நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ஷவை எப்படி நிர்ப்பந்திக்க முடியும்?

இந்த நிலையில்தான் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

கொழும்புக்குக் கூற வேண்டியது என்ன என்பதுபற்றி கிருஷ்ணாவுக்கு நன்றாகவே தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். உண்மைதான். கிருஷ்ணாவுக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான் அது. ஆனால், இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று - கிருஷ்ணா அதனைக் கூறுவாரா? இரணடு - கிருஷ்ணா அதனைக் கூறினாலும் மகிந்த அதற்கு செவிமடுப்பாரா?

தற்போது பிரச்சினையாக இருப்பது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரேயடியாக மறுத்த அரசாங்கம் இப்போது அவை தொடர்பாகப் பேசத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றது. அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் பேச்சுக்களில் அது தொடர்பாக ஆராயப்படலாம். இந்திய வெளிவிவகார அமைச்சரும் கொழும்பில் உள்ள சந்தர்ப்பத்தில் பேச்சுக்கள் இடம்பெறுவதால் அவருடனான பேச்சுகளிலும் இவ்விடயம் ஆராயப்படும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரங்களைத் தம்மால் கொடுக்க முடியாது என்பதை அது ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இது தொடர்பாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரையில் சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தைக் கொடுப்பதற்கும், காணியைப் பொறுத்தவரையில் காணி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் இணங்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் செல்வது தமக்கு ஆபத்தாக அமையும் என அரசாங்கம் இந்திய அமைச்சரிடம் கூறலாம் எனத் தெரிகின்றது. இந்தியத் தரப்பு இதனை ஏற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரலாம். இதனைவிட வேறு எதனையும் தரும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதற்கு மேலாக எதனையாவது கொடுங்கள் என அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்பதும் உண்மை.

கனடிய அரசாங்கமும் பிரித்தானிய அரசாங்கமும் கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிக்கைகள் மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்துச் செல்லும் ஒரு போக்கைக் காட்டுவதாக இருந்தது. மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் உருவாகக் கூடிய நெருக்கடிகளுக்கு கட்டியம் கூறுவதாக இவை உள்ளன. இந்த நிலையில் எதனையாவது கொடுத்து தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மகிந்தவுக்கு உள்ளது. அதற்காக வரையறுக்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தையும், காணி ஆணைக்குழுவையும் அவர் பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச அரங்கில் மகிந்தவைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதற்குள்ளது. அதனால் இவற்றை ஏற்குமாறு கூட்டமைப்புக்கு இந்தியா ஆலோசனை வழங்கலாம் என தமிழ்க் கட்சிப் பிரமுகர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளையில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கிருஷ்ணாவின் விஜயத்தின்போது ஆராயப்படும் எனத் தெரிகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாலைதீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வினவியுள்ளார். அதனை விரைவில் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அப்போது கூறியிருந்தார். இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிவதற்கு இந்தியத் தரப்பு விரும்பும். அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இது தொடர்பான அறிவித்தல் ஒன்று அரச தரப்பிலிருந்து வெளிவரலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்திவிடுவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களைக் கொஞ்சமாவது குறைக்க முடியும் என்பதுதான் மகிந்தவின் கணிப்பு.

இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு அதிகரிக்கின்றது!

No comments:

Post a Comment