அரசியலமைப்புக்கான
13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலின் மூலமாக இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு கூறுவது இதுதான் முதன்முறையல்ல. புதுடில்லிக்கு மேற்கொள்ளும் விஜயங்களின்போது
இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவதை அவர் வழமையாகவே கொண்டிருந்தார். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கு
இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவது அவருக்கு அவசியமானதாக இருந்தது. இப்போதும் இலங்கைக்கான
விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுக்களை
நடத்திய போதுதான் இந்த வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார்.
'13 பிளஸ்'
என ஜனாதிபதி சொல்வது வழமையானதாக இருந்துள்ள போதிலும்கூட, இப்போது அவர் இதனைத் தெரிவித்திருப்பது
முக்கியத்துவம் பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களைத்
தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் நிலைப்பாடாக
இப்போது வெளியிடப்பட்டுவருகின்றது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச்
செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்ஷ
கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து
உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.
அரசாங்கத்துக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும்
இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது. அதாவது 13 திருதத்தின்
அடிப்படையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும்
என்பதே கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன
தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை. அவற்றை விட்டுக்கொடுப்பது என்பது கூட்டமைப்பின்
ஆதரவுத் தளத்தையும் ஆட்டங்காணச் செய்துவிடும்.
மறுபுறத்தில்
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு
உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன. இது
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியை
ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் 13 பிளஸ் என ஜனாதிபதி கூறியிருப்பதாக
வெளியான செய்தி தொடர்பில் அனைத்துத் தரப்பினரது கவனமும் திரும்பியிருந்தது. காணி, பொலிஸ்
அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ் எனக் கூறுவதில் அர்த்தமிருக்க முடியாது.
எதற்காகச்
சொன்னாரோ தெரியவில்லை, 13 பிளஸ் என ஜனாதிபதி சொல்லிவிட்ட நிலையில்,
அமைச்சர்களுக்குப் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனை மறுக்கவும் முடியாது. அதனை அதற்குரிய அர்த்த்தில்
ஏற்கவும் முடியாது. அதனால், அதற்கு புதுப்புது
அர்த்தங்களைத் தேடுவதில்தான் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கவனம் இப்போது திரும்பியுள்ளது.
அமைச்சரவைப்
பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல 13 க்கு மேலாக செனட்ட சபையைத் தரப்போவதாகக் கூறியிருக்கின்றார்.
ரம்புக்வெலவின் அர்த்தத்தில் 13 பிளஸ் என்பது செனட் சபைதான். செனட் சபை என்ற யோசளை
புதிதான ஒன்றல்ல. கடந்த 2011 மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய
யோசனைளை அரசுக்கு முன்வைத்திருந்தது. இதற்கு ஆகஸ்ட் மாதம் வரையில் பதிலளிக்காத அரச
தரப்பு இந்தக் காலப்பகுதியில் செனட் சபையை அமைக்கும் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.
இருந்தபோதிலும் அந்த யோசனை தெளிவானதாக இருக்கவில்லை. ஆக, இது புதிதல்ல. பழைய யோசனைகள்
சிலவற்றை தூசிதட்டி புதிது போல வெளியிடுவதை அரசு வழமையாகவே கொண்டுள்ளது.
இந்திய வெளிவிவகார
அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார்
என்பது உண்மைதான். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை
நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக்
கூறியிருந்தார். 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில்
வைத்துத் தெரிவித்திருந்தமையையும் ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது இந்திய அமைச்சர்
நினைவூட்டியிருந்தார்.
இந்த நிலையில்
அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி
தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார
அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார். இதனை அரச தரப்பு மறுக்காத
அதேவேளையில் உறுதிப்படுத்தவும் இல்லை.
அதிகாரப்
பரவலாக்கல் என்பது சாச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் நிலையில் 13 பிளஸ் என்பதன் மூலம்
ஜனாதிபதி எதனை அர்த்தப்படுத்தியிருக்கின்றார் என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது.
இந்தக்குழப்பத்தைத் தீர்க்க வேண்டிய அரச தரப்பு குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே
கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது. இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன்
பேசிய போது, "அந்த அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை" என ஜனாதிபதி கூறியதாகத்
தெரிகின்றது. ஆக, கிருஷ்ணா சொன்னதை கொழும்பு உறுதிப்படுத்தப்போவதில்லை என்பது மட்டும்
தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளையில், இந்தியாவின் தேவை இருப்பதால் அதனை மறுக்கவும்
கொழும்பு முன்வரப்போவதில்லை.
பெப்ரவரி
இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்
தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்
கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட
அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. சீனாவை மட்டும் நம்பி இந்தப் பிரச்சினையிலிருந்து
மீளமுடியாது என்பது கொழும்புக்குத் தெரியும். ஏனெனில் ஆசியாவில் சீனா வகுக்கும்
வியூகத்துக்கு எதிரான அணுகுமுறையைத்தான் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் கொண்டுள்ளன.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே
நம்பிக்கை இந்தியாதான். இந்தியாவும் தன்னைக்கைவிட்டுவிடுமா என்ற
ஒரு அச்சம் கொழும்பிடம் உள்ளது.
இந்த அச்சத்தைப்
பயன்படுத்திக்கொண்டுதான் இந்தியா தன்னுடைய காய்களை நகர்த்துகின்றது. அதாவது, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குக்
கிடைத்துள்ள ஒரு பிடி இதுதான். இதனைப் பயன்படுத்தி இந்தியா இலங்கையில்
எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். இந்தியாவைப்
பொறுத்தவரையில் அதன் நலன்கள்தான் அதற்கு முக்கியமானவை. அதற்காக இலங்கைத் தமிழர்களின்
நலன்களை காலில் போட்'டு மிதிக்கவும் இந்தியா தயங்காது என்பது கடந்த மூன்று தசாப்த கால
வரலாறு.
ஈழத் தமிழர்களின்
நலன்களை வெறுமனே ரயில்வே பாதை அமைப்பதன் மூலமாகவும், சைக்கிளைக் கொடுப்பதன் மூலமாகவும்
மட்டும் பாதுகாக்க முடியாது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதன்
ஈழத் தமிழரின் தேவை. ஆனால், அதற்காக எவ்தவிதமான
ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் முன்னெடுக்கா இந்தியா, இலங்கையில்
தனது நலன்களை இந்தியா பேணிக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களைத்தான் மேற்கொள்கின்றது.
சம்பூர் அனல் மின்சாரம், திருமலை எண்ணெய்க்குதம், காங்கேசன்துறை துறைமுகம்,
எரிபொருள் நிநியோகம் என தமது பொருளாதார பாதுகாப்பு நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நலன்களைக் கவனித்தால் ஈழத் தமிழர்களைப் பற்றி இந்தியா கவலைப்படாது
என்பது மகிந்தவுக்குத் தெரியும்.
அதனால்தான்
கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில்
மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்
மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்"
என்பதுதான் மகிந்த வைத்துள்ள பொறி! பாராளுமன்றத் தெரிவுக்குழுவில்
பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கும்.
13 பிளஸ்
என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள்
சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் 13 பிளஸ் என்பது நிராகரிக்கப்பட்டதொன்றாகிவிடலாம். அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள்
கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.
இந்திய இராஜதந்திரிகள்
திறமையானவர்கள்தான். ஏனென்றால் அவர்கள் கொழும்பிடம்தான் பாடம் படிக்கின்றார்கள்!
No comments:
Post a Comment