பல வருடகால இடைவெளியின் பின்னர் சென்றிருந்தமையால் திருக்கோணேஸ்வரம் கோவில் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருந்தது.
முன்னரெல்லாம் திருமலை சென்று பின்னர் அங்கிருந்து திருக்கோஸ்வரம் செல்வதற்காக கோணேஸ்வரம் மலையின் படிகளில் ஏறும் போது ஒரு இந்துக்கோவிலுக்குச் செல்கின்றோம் என்ற பயபக்தி தானாகவே மனதுக்குள் குடிகொள்ளும். ஆனால், கடந்தவாரம் அங்கு சென்ற போது, ஒரு பௌத்த விகாரைக்குச் செல்கின்றோமா என்ற சந்தேகம் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம் - திழருக்கோணேஸ்வரப் பெருமானைத் தரிசிக்க சாரையாரையாகச் செல்பவர்களில் கணிசமானவர்கள் சிங்களவர்கள்.
அதுமட்டுமன்றி கோவில் வீதியை ஆக்கிரமித்து கடைபரப்பியிருப்பவர்களும் முழுமையாக சிங்களவர்கள்தான். திருமலை நகரசபையின் உத்தரவையும் மீறி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் ஆக்கிரமிப்பின் மற்றொரு சின்னமாகக் காட்சியளிக்கின்றது.
கோணேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் பாதை |
கிழக்கு மாகாண ஆளுநர் சிங்களவர். திருமலை அரசாங்க அதிபர் சிங்களவர். கோவில் பகுதி ஒரு இராணுவ முகாமுக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. இந்த நிலையில் துணிச்சலாகக் கடை பரப்பியுள்ள சிங்களவர்களை அனுமதிப்பதைவிட நகர சபைக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்காது.
திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கும் பிரட்றிக் கோட்டைப் பகுதியை புனித நகராக்குவதற்கு இந்துமதப் பிரமுகர்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதுவே ஒரு சிங்களவர்களின் வணக்கத்தலமாக இருந்திருந்தால் கதை வேறு!
கோவில் முன்பாக சிவனுக்கு பாரிய விக்கிரம் |
கோவில் வீதியை ஆக்கிரமித்துள்ள கடைகள் |
இராவணன் விக்கிரகம் |
கன்னியா வெந்நீரூற்று |
சுடுதண்ணீர் கிணறு |
வளம் கொழிக்கும் சம்புரிலிருந்து தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் வெளியேற்றப்பட்டு இன்று எழு வருடங்களாகப்போகின்றது. அவர்களுடைய முகாம் வாழ்க்கைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தாம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த சம்பூர் மக்களையிட்டு இன்று வரையில் யாரும் கவலைப்படவில்லை.
இந்தப் பின்னணியில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலைமையைப் பயன்படுத்தி திருமலை நகரப் பகுதியை சிங்கள மயமாக்கும் திட்டம் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருமலை நகரை அடுத்துள்ள மீன்பிடிக் கிராமங்கள் அனைத்தும் சிங்கள மயமாககப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் கடல்வளம் முழுமையாகவே சிங்களவர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
சுடுதண்ணீர் கிணறுகளில் நீராட படையெடுக்கும் சிங்களவர்கள் |
திருமலை நகரப் பகுதியில் எந்த இடத்தில் தடுக்கிவிழுந்தாலும் முன்னால் ஒரு கோவில் இருக்கும். அந்தளவுக்கு நகரப் பகுதிகளில் இந்துக் கோவில்கள் பெருமளவுக்கு நிறைந்துள்ளன. நகரில் தமிழர்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதில் இந்தக் கோவில்கள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதில் பிரதானமானதுதான் திருக்கோணேஸ்வரம் கோவில்!
இதனை முறியடிப்பதற்காகத்தான் திருமலை நகரின் மத்தியில் புத்தர் சிலை ஒன்று இரவோடிரவாக அமைக்கப்பட்டு அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதனைவிட திருமலை நெல்சன் தியேட்டரின் முன்பாக உள்ள பாரிய காணியும் புத்த விகாரை ஒன்றை அமைப்பதற்காக சிங்களவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணியில் நான்கு அரச மரங்கள் இருப்பதைக் காரணங்காட்டியே இதனை சிங்களவர்கள் இப்போது கைப்பற்றியிருக்கின்றார்கள்.
அரச மரங்களே இன்று தமிழர்களுக்கு எதிரியாகிவிட்ட நிலை!
வெந்நீருற்று பகுதியில் காணப்படும் அறிவித்தல் |
வெந்நீரூற்றுப் பகுதியில் குவிந்துள்ள மக்கள் |
திருமலையின் கன்னியா பகுதியிலுள்ள சுடுதண்ணீர் கிணறுகள் அமைந்திருக்கும் பகுதியில் இப்போது சிங்களவர்களுடைய ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாகவே காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துசெல்வதுடன், இந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றின் கீழ் பௌத்த விகாரை ஒன்றும் சின்னதாக அமைக்கப்பட்டுவிட்டது. சுடுதண்ணீர் கிணறு அமைந்திருக்கும் பகுதிக்குச் செல்வதற்கான நுளைவுச் சீட்டு தனிச் சிங்களத்திலேயே அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் பாதுகாப்புக் கடமைகளில் இராணுவத்தினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete