Wednesday, February 1, 2012

இலங்கையைத் திணறவைக்கும் அமெரிக்காவின் புதிய நகர்வுகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய காய் நகர்த்தல்கள் கொழும்பைத் திகைக்க வைத்துள்ளன. ஜெனிவாவில் வருவாகக்கூடிய சவால்களைச் சமாளிப்பதற்கு முழு அளவிலான தயாரிப்புக்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் போர்க் குற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான விஷேட தூதுவர் ஸ்ரேபன் ரப் அடுத்த வாரம் கொழும்பு வரவிருக்கின்றார். சியரலியோன் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான பொறுப்பை இவரே ஏற்றிருந்தார். போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆலோசகராகவும் பணியாற்றும் இவர் அடுத்த வாரம் பெரும்பாலும் 5 ஆம் திகதி கொழும்பு வருகின்றார் என்ற செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு வயிற்றைக் கலக்கும் பேதி மருந்தாகவே வந்திருக்கின்றது. 

இந்தக் கலக்கத்தில் கொழும்பு இருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருக்கின்றார். கடிதத்தை வாங்கி உடைத்துப் படிக்கும் வரையில் அதில் அதிர்ச்சிக் குண்டுகள் ஒன்றல்ல இரண்டு இருக்கின்றது என்பதை பீரிஸ் அறிந்திருக்கவில்லை. 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் விஷயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். விஷயம் உடனடியாகவே பத்திரிகைகளில் கசியவில்லை. அமெரிக்க உதவித் தூதுவர் கையளித்த கடிதத்தில் இருந்த இருந்த இரண்டு அதிர்ச்சிக் குண்டுகளும் இவைதான்:

1. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பானது. இதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என இச்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் தொடர்பில் இலங்கை அரசின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக வாஷிங்டன் வருமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அமைச்சர் பீரிஸிற்கு விடுத்துள்ள அழைப்பு.
அமெ. போர்க் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்ரேபன் ரப்
இந்த இரண்டு விடயங்களிலுமுள்ள செய்தி மிகவும் கடுமையானது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகியிருந்தது. அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவரும் போது பிரித்தானியா, கனடா போன்ற மேற்கு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும். இந்தப் பின்னணியில் அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் டில்லிக்கும் ஏற்படும். கொழும்பிலள்ள மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்களின்படி இந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த நெருக்கடியிலிருந்து மீளவதற்கான வழிதான் இரண்டாவதாக உள்ளது. அதாவது 1. நல்லிணக்கம். 2. பொறுப்புக் கூறல் 3. வடமாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்று விடயங்களிலும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுமாயின் ஜெனிவாவில் உருவாகக்கூடிய நெருக்கடியின் தீவிரம் மட்டுப்படுத்தப்படும். அமெரிக்க கொடுத்துள்ள செய்தியில் மறைமுகமாக இந்த அர்த்தமும் பொதிந்திருப்பதை உணர முடிந்தது.
ஹிலாரி கிளின்டன்
நல்லிணக்கம் என்று சொல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தற்போது நடத்தும் பேச்சுக்களையே பிரதானமாகக் குறிப்பிடுகின்றது. ஆனால், இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் காட்டிக்கொள்ள அரசு முற்படுகின்றது. அதனால்தான் இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதில் அசாதாரண அவசரம் அண்மைக் காலத்தில் காட்டப்படுகின்றது. 

இரண்டாவதாகவுள்ள பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொள்ள முற்படுகின்றது. இருந்த போதிலும் இதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வடமாகாண சபைக்கான தேர்தலைப் பொறுத்தவரையில் காலத்தைக் கடத்துவதுதான் அரசின் உத்தியாகவுள்ளது. இந்தத் தேர்தலை அரசு எப்போதோ நடத்தியிருக்க முடியும். ஆனால் தமக்குச் சாதகமான நிலை இல்லை என்பதால் மட்டும் அரசு காலத்தைக் கடத்தவில்லை. வடமாகாண சபை உருவாக்கப்பட்டால் வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் போன்றன பாதிக்கப்படும் என அரசு சிந்திக்கின்றது. தேர்தலை நடத்தி வடமாகாணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொடுத்துவிடவும் அரசு விரும்பவில்லை. 
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பது உண்மை. விருப்பமில்லாத சிலவற்றை செய்யாவிட்டால் நெருக்கடி தவிர்க்க முடியாமல் போகலாம். 

சிறிய நாடுகளைத்தான் அமெரிக்கா தண்டிக்கின்றது என வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததும் இந்தப் பின்னணியில்தான்! ஈரானுக்காக பரிதாபப்படுவதாக அவர் காட்டிக்கொண்டாலும் அவரது மனதில் அது மட்டும் இருந்திருக்காது!

மகிந்த விரும்பாத சிலவற்றை மேற்கு நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. இதனை மகிந்தர் எப்படிக் கையாளப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! வீராவேசப் பேச்சுக்கள் மக்களின் ஆரவாரத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால் அது மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது. 

No comments:

Post a Comment