Tuesday, May 21, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு : 06 இந்திராவின் கோட்பாடும் ‘றோ” வின் வியூகங்களும்

இலங்கையின் இன நெருக்கடி தொடர்பில் இந்திரா காந்தியின் முதலாவது தூதுவராக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1983 ஜூலையில் அனுப்பப்பட்ட போதிலும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பவராக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியே செயற்பட்டார்.83 ஆடிக்கலவரத்துக்குப் பின்னரான இந்திய- இலங்கை அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அதில் பார்த்தசாரதியின் பங்கு பிரதானமானதாக இருந்துள்ளது.

பார்த்தசாரதியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்வையாக அமைந்திருந்தது.

ஒன்று – இந்தியாவின் பிராந்திய ரீதியான நலன்களைப் பாதுகாத்தல். அதாவது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள்.

இரண்டு – இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடியதான தீர்வு ஒன்றைகப் காண்பது. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தொடரும் பட்சத்தில் அது இந்தியாவுக்குத் தொடர்ந்தும் தலையிடியைக் கொடுப்பதாக அமையும் என்ற கருத்தும் டில்லியில் காணப்பட்டது.

இந்தப் பின்னணியில் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது என்ற இரட்டை அணுகுமுறையில் இந்தியா செயற்படத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இரட்டை அணுகுமுறைதான் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதில் அதற்கு ஏற்பட்ட தோல்விகளுக்குக் காரணமாக அமைந்திருந்தது என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஈழப் போராளி அமைப்புக்களுக்கு இந்தியாவில் பயிற்சி வசதிகளை ஏற்பாடு செய்த றோ அமைப்பின் முன்னாள் அதிகாரியான கலாநிதி சந்திரசேகரன், கடந்த வாரம் லண்டனில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் நிகழ்த்திய உரையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை – இந்திய உடன்படிக்கை நல்லதுதான். ஆனால், அதில் இந்தியா தன்னுடைய நலன்களை அதில் முன்னிலைப்படுத்தியிருக்கக் கூடாது. இந்த உடன்படிக்கை இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.

இந்தியாவின் இந்த அணுகுமுறை இரண்டு இலக்குகளைக் கொண்டதாக இருந்த அதேவேளையில், அரசியல் ரீதியான அணுகுமுறையை இந்தியா வெளிப்படையாகவும் ஜெயவர்த்தன அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை மறைமுகமாகவும் முன்னெடுத்தது.

இந்தியாவின் இந்த அணுகுமுறை உண்மையில் பிரதமர் இந்திரா காந்தியினால் உருவாக்கப்பட்டதாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இலங்கை தொடர்பான அதன் அணுகுமுறை அமைந்திருந்தது. குறிப்பிட்ட காலப்பகுதியில் உள்நாட்டு ரீதியாகவம், சர்வதேச ரீதியிலும் இந்தியா எதிர்கொண்ட சில நெருக்கடிகள் இவ்வாறான ஒரு கொள்கையை நோக்கி இந்தியாவைத் தள்ளியிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்ட சுர்ஜிர் மான்சிங் இந்திராவின் வெளியுறவக் கொள்கையை இவ்வாறு வர்ணிக்கின்றார்: “இந்திரா காந்தியின் பதவிக்காலத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது சர்வதேச உறவுகளில் அதிகாரம்தான் தீர்மானிக்கும் சக்தி என்பதை இந்திரா கண்டு கொண்டார். இதுவே அவரது வெளிநாட்டுக்கொள்கை வகுப்பில் பிரதான பங்கை வகித்தது” என அவர் குறிப்பிடுகின்றார்.

இதனை மேலும் விபரிக்கும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘இந்தியா தனது அதிகார அரசியல் நடவடிக்கையை முழுமையானதாக ஆக்குவதற்கு உப கண்டத்தில் ஏனைய நாடுகளிடமிருந்து குறிப்பிட்ட சில அகுமுறைகளை எதிர்பார்த்தது. அதாவது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவை என பொருள்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை அண்டை நாடுகள் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பிராந்தியத்தின் உறுதிப்பாடின்மைக்கும் உட்பூசலுக்கும் மூலகாரணமாக இருப்பது வெளிப்புறச் சக்திகளின் தலையீடு என இந்தியா கருதியதால் பிராந்தியத்தில் அதன் நலன்களுக்குத் தீங்கானவையென அது தீர்மானித்த நடவடிக்கைகள் மீது ஒருவிதமான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த அது தீர்மானித்தது.”

பிராந்திய ரீதியான இந்தியாவின் அணுகுமுறையை இவ்வாறு வர்ணிக்கக்கூடியதாக உள்ள அதேவேளையில், இந்தியாவின் வெளிப்படையான அரசியல் அணுகுமுறைகளுக்குச் சமாந்தரமான மறைமுக இரகசிய நகர்வு ஒன்றும் இருந்தது. இந்த நகர்வை மேற்கொள்வதற்கான பொறுப்பு இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான றோ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. றோவின் செயற்பாடுகளை வெளிப்படையாகச் சொல்வதானால் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது என்பதுடன் அவற்றின் அடிப்படையிலான இந்தியாவின் நலன்களின் அடிப்படையில் சதி, நாசகாரச் செயல்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவது என்பனவே அதன் பணி எனக் கூறலாம். அதாவது எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் செய்யக் கூடியதைத்தான் றோவும் செய்கின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதையும், அண்டை நாடுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டு 1968 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் றோ உருவாக்கப்பட்டது. றோ பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு அமைப்பாகும். காவ் என்பவரே இதன் ஸ்தாபகத் தலைவராக இந்திரா காந்தியினால் நியமிக்கப்பட்டார். இந்திராவின் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவர், றோவின் ஆரம்ப காலச் செயற்பாடுகளிலும், ரோவின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் அதற்கான செயல் வடிவங்களை வகுப்பதிலும் முக்கியமான பங்கை வகித்தவர்.

பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷை உருவாக்குவதற்கும் 1970 களின் ஆரம்பத்திலிருந்து இவ்வமைப்புத் தான் இந்திரா காந்திக்கு துணையாகச் செயற்பட்டது. இந்திரா காந்தியின் அரசியல் செயற்பாடுகளுக்குத் தேவையான பாதையை அமைத்துக்கொள்வதும், அதற்குள்ள தடைகளை அகற்றுவதும் இவ்வமைப்பின் பிரதான பணியாக அமைந்திருந்தது எனக் கூறலாம். இதற்காக எவ்வாறான வழிவகைகளையும் கையாளக்கூடிய அதிகாரம் இவ்வமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த அதேவேளையில், அதற்கான திறனும் வசதிகளும் அதற்கு இருந்தது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு றோவின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் சுருக்கமாகவாவது அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான் இந்தக் குறிப்புக்களைப் பகிந்துகொள்ள வேண்டியிருந்துள்ளது.

இலங்கை விவகாரத்தை அரசியல் ரீதியாகக் கையாளும் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி தனது கைகளில் எடுத்துக்கொண்ட அதேவேளையில் அதற்குச் சமாந்தரமாக மற்றொரு நிகழ்ச்சி நிரலுடன் றோவும் இந்தப் பிரச்சினையில் பிரவேசித்தது.

1970 முதல் 77 வரையிலான காலப்பகுதியில் அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவுக்கு நெருக்கமானவராக இருந்த அதேவேளையில், அணிசேராக் கொள்கையையும் கண்டிப்பாகக் கடைப்பிடித்தார் என்று சொல்லலாம். ஆனால், 1977 இல் பதவிக்கு வந்த ஜெயவர்த்தனவோ தானும் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராகக் கூறிக்கொண்டாலும் மேற்கு நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். இது இந்தியாவுக்குச் சந்தேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நிலையில்தான் 83 ஜூலைக் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ரீதியான தலையீடு ஒன்றை மேற்கொள்ளக் கூடிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்ட அதேவேளையில், அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களும், போராளிகளும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு மேலும் சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜூலைக் கலவரத்தையடுத்து போராட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் தீவிரமடைய – மேற்கு நாடுகள் சிலவற்றிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன முயற்சிக்கின்றார் என்ற செய்தி இந்தியாவுக்கு அதன் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பிலான கேள்விகளை ஏற்படுத்தியது. இந்த பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் அச்சம், புதிய கோட்பாடு ஒன்றை இந்திரா காந்தி வகுத்துக்கொள்வதற்கக் காரணமாகியது. ‘இந்திராவின் கோட்பாடு” என பெருமையாகக் கூறப்படும் இந்தக் கோட்பாடு பல அம்சங்களைக் கொண்டது. இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அதனை பின்வரும் 3 அம்சங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

1. தெற்காசிய நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. அத்துடன் வேறு நாடுகளின் தலையீட்டையும் இந்தியா ஏற்றுக்கொள்ளாது.

2. தெற்காசிய நாடு ஒன்றில் காணப்படும் பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகளின் தலையீடு மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ இந்திய விரோதக் கொள்கை ஒன்றைக் கொண்டிருக்குமாயின் அவ்வாறான தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது. அதாவது தெற்காசிய நாடு எதுவும் இந்திய எதிர்ப்புக்கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.

3. தெற்காசிய நாடு ஒன்றில் பாரதூரமானளவுக்கு உள்நாட்டுப் பிரச்சினை ஒன்று உருவாகி, அந்த நாட்டுக்கு அது அச்சுறுத்தலானால் அதனைக் கையாள்வதற்கு வெளிநாடு ஒன்றின் உதவி தேவைப்படுமாயின் இந்தியா உட்பட அயல்நாடு ஒன்றின் உதவியையே அந்நாடு கேட்க வேண்டும். இத்தகைய நிகழ்வின் போது இந்தியாவை விலக்கிவைப்பது இந்திய விரோதப் போக்காகவே கருதப்படும்.

இந்திராவின் இந்த சித்தாந்தம் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. உண்மையில் தமது அண்டை நாடுகள் தமக்குக் கீழ்ப்பட்ட நாடுகளாக இருக்க வேண்டும் என்ற கருத்தே இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திராவின் இந்தக் கோட்பாடு சவாலுக்கு உட்பட்ட நிலையில்தான் இலங்கை விவகாரத்தை இரு வழிகளில் கையாள்வதற்கு இந்திரா காந்தி தீர்மானித்தார்.

அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் அடுத்த கட்டுரையில்..

No comments:

Post a Comment