Saturday, May 11, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு : 04 நரசிம்மராவை அனுப்பிய இந்திரா!

இலங்கையில் வெடித்த 83 ஜூலைக் கலவரம் இந்தியாவில் பெரும் குழப்பமான நிலை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். குறிப்பாக தமிழகத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையைப் போல அருகாமையிலுள்ள நாடொன்றில் உருவாகியிருக்கும் இந்த மோசமான நிலையையிட்டு இந்தியா கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னுடைய விஷேட பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவை அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்தார்.

வன்முறைகள் வெடித்த மூன்றாவது நாள் அதாவது 1983 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு நகர் எரிந்துகொண்டிருந்த ஒரு நிலையில்தான் நரசிம்மராவ் கொழும்பு புறப்பட்டார். ஜூலைக் கலவரம் வெடித்த பின்னர்தான் இந்திரா காந்தி ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தன்னுடைய கரிசனையை முதல் தடவையாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, அது அப்போதுதான் அவருக்கு ஏற்பட்ட ஒரு திடீர் அக்கறை எனக் கருத முடியாது. இதற்கு முன்னரே இராணுவ நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான ஒரு நிலை உருவாகியிருந்தபோதே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த கே.எஸ்.பாஜ்பால் இது தொடர்பில் இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கொழும்பு சென்ற நரசிம்மராவை வரவேற்ற ஜனாதிபதி ஜெயவர்த்தன, ஆடிக்கலவரம் எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார். அத்துடன் இது அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பான தனது பார்வையையும் வெளிப்படுத்தினார். குறிப்பாக ஆடிக்கலவரம் இடதுசாரிக் கட்சிகளின் ஒரு சதி முயற்சி எனவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இவ்வாறான ஒரு கலவரத்தை அவர்கள் தூண்டிவிட்டிருப்பதாகவும் ஜெயவர்த்தன விளக்கினார். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஜே.வி.பி. உட்பட இடது சாரி அமைப்புக்கள் சில தடை செய்யப்பட அவ்வமைப்புக்களின் தலைவர்கள் தலைமறைவானார்கள்.

இதேவேளையில் கொழும்பு வந்திருந்த நரசிம்மராவ் மரியாதை நிமித்தமாக பிரதமர் ஆர்.பிரேமதாசவையும் தான் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்கான அனுமதி அவருக்கு உடனடியாகவே வழங்கப்பட்டதுடன், பிரதமருக்கும் அது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. பிரேமதாசவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிரான நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். இந்தநிலையில் நரசிம்மராவின் வருகைக்கும் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு அவர் விரும்பினார்.

பிரேமதாசவைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்ற நரசிம்மராவை சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்வைத்தார் பிரேமதாச. அதன்பின்னரே அவரை அழைத்து உரையாடினார். இந்தப் பேச்சுக்களின் போதும் இந்தியத் தலையீடு தொடர்பான தனது அதிருப்தியை பிரேமதாச வெளிப்படுத்தியிருந்தார். பிரேமதாசவைப் பொறுத்தவரையில் அவரது அரசியல் வாழ்வில் உச்சத்துக்கு வருவதற்கும் இந்த இந்திய எதிர்ப்புக் கொள்கைதான் காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிடலாம். நரசிம்மராவின் வருகையுடன்தான் இவ்வாறான ஒரு அணுகுமுறையை பிரேமதாச கையாள முற்பட்டார் எனக் குறிப்பிடலாம்.

இலங்கை இனநெருக்கடியில் இந்தியாவின் அரசியல் ரீதியான தலையீடு நரசிம்மராவின் இந்த வருகையுடனேயே ஆரம்பமானது எனக்குறிப்பிடலாம். இந்த வருகையின் போது இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழகத்தில் உருவாகியிருக்கும் கொந்தளிப்பான நிலை தொடர்பாகவும், இந்திய அரசாங்கம் இது தொடர்பில் கொண்டுள்ள கரிசனையையிட்டும் நரசிம்மராவ் இலங்கைத் தலைவர்களின் கவனத்துக்கக் கொண்டுவந்தார்.

அத்துடன் இவ்வாறான அக்கறையை வெளிப்படுத்தியதன் மூலமாக இலங்கைப் பிரச்சினையில் தன்னை ஒரு மத்தியஸ்த்தராக இந்தியா உருவகப்படுத்திக்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயற்பட்டால் இலங்கையில் உருவாகக்கூடிய நிலைமைகள் இந்தியாவிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை புதுடில்லி கொழும்புக்கு எடுத்துக்கூறியது. இதன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் தனக்குள்ள கரிசனையை இந்தியா நியாயப்படுத்தியது.

அதாவது இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, அங்கு தமிழர்களுக்கு எதிராக உருவாகியிருக்கும் நிலைமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இலங்கையில் தமிழர்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய இந்தியா அதற்கான முயற்சிகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள முற்பட்டது.

அத்துடன் இலங்கைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கும் படகுகளில் செல்லத் தொடங்கியுள்ள நிலைமைகளால் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதில் தனக்குள்ள உரிமையை இந்தியா நியாயப்படுத்திக்கொண்டது.

அதேவேளையில், ஜெயவர்த்தன அரசாங்கம் கடைப்பிடித்த வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவுக்கு பாதகமானதாக அமைந்திருந்தமையும் இந்தப் பிரச்சினையை இந்தியா தனது கைகளில் எடுத்துக்கொள்ள முற்பட்டமைக்கு மற்றொரு காரணமாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திரா காந்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவுக்குச் சார்பான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றினார்.

ஆனால், ஜெயவர்த்தனவோ திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த அதேவேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு முற்பட்டார். சோவியத் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் ஜெயவர்த்தன நெருங்கிச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அது தமது மேலாண்மையைப் பாதிப்பதாக அமையும் எனவும் இந்தியா கருதியது. அதற்கெதிரான வியூகம் ஒன்றை அமைப்பதற்கும் இன நெருக்கடியைத் தமது கைகளில் எடுத்துக்கொள்வது உதவும் என இந்தியா கருதியது.

தமிழகத்தில் உருவாகியிருந்த கொந்தளிப்பான நிலை, பங்களாதேஷில் இந்தியா மேற்கொண்ட தலையீடு என்பவற்றையும் புரிந்துகொண்டிருந்த ஜெயவர்த்தன இந்தியாவின் மத்தியஸ்த்த முயற்சிகளைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஒரு தந்திரோபாய நகர்வாகவே அவர் மேற்கொண்டார்.

ஜெயவர்த்தன இந்திய மத்தியஸ்த்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பு முதிர்ந்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியிடம் இந்திரா காந்தியால் ஒப்படைக்கப்பட்டது….

No comments:

Post a Comment