உள்நாட்டு அரசியல் விவகாரங்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மிகவும் இலகுவானமுறையில் சமாளிக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும், சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் 'போர்க் குற்றம்' தொடர்பிலான நெருக்கடியைச் சமாளிப்பது பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கப்போகின்றது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஆதாரங்களும், அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவில் நடத்தியிருக்கும் பேச்சுக்களும் இதனைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இலங்கை கடைப்பிடித்த வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கியிருக்கும் இந்த நெருக்கடியை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது என்பதுதான் இன்று எழும் கேள்வி.
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸின் அமெரிக்க விஜயம் மிகவும் முக்கியமான ஒரு கால கட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த ஒரு வருட நிறைவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் (மழை காரணமாக அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பது வேறு கதை) செய்யப்பட்டிருந்த ஒரு காலகட்டத்திலேயே போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச அரங்கில் மீண்டும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. போர்க் குற்றம் தொடர்பில் புதிய ஆதாரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் பேராசிரியரின் அமெரிக்க விஜயம் மிகவும் கடினமானதாக அமைந்திருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்!
அமெரிக்க ஜனப் பிரதிநிதிகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக்குழு, மனித உரிமைகள் காப்பகம் என்பன போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்திருந்த ஒரு நிலையிலேயே பேராசிரியர் அமெரிக்காவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டார். இவற்றைவிட பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியும், மனித உரிமைகள் காப்பகமும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தம்மிடம் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றில் சிலவற்றை வெளியிட்டும் இருந்தன. ஏனைய ஆதாரங்கள் சந்தர்பம் வரும் போது வெளியிடப்படும் என்ற எச்சரிக்கை கலந்த ஒரு அறிவித்தலை மனித உரிமைகள் காப்பக பேச்சாளர் ஒருவர் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் முக்கியஸ்த்தர்களையும், அமெரிக்கத் தலைவர்களையும் சந்திப்பதற்காக வாஷிங்டனுக்கு விமானம் ஏறிய பேராசிரியரின் விஜயம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருந்தார். இவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படுவதைத் தடுப்பதுதான் பேராசிரியர் மேற்கொண்ட இந்த விஜயத்தின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்டபட்ட இந்தப் பணியை நிறைவேற்ற முடியாதவராகவே பேராசிரியர் நாடு திரும்பப்போகின்றார் என்பதைத்தான் வாஷிங்டன் செய்திகள் புலப்படுத்துகின்றன.
மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவரது முதலாவது பதவிக்காலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், உள்நாட்டு அரசியல் நிலைமைகளைக் கையாள்வதிலும் கவனத்தைக் குவிப்பதாகவே அமைந்திருந்தது. இதில் அவரால் வெற்றியையும் பெறமுடிந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அவரது இரண்டாவது பதவிக் காலம் சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதில் கவனத்தைக் குவிப்பதாகவே அமைந்திருக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக கடந்த வருடத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே இதனைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இதனை நன்கு உணர்ந்திருந்த நிலையில்தான் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சராக தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மகிந்த நியமித்தார்.
மேற்கு நாடுகளைச் சமாளிப்பதற்கு பேராசிரியர்தான் பொருத்தமானவர் என மகிந்த கணிப்பிட்டமைக்கு பல காரணங்கள் இருந்துள்ளன. முதலில் சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் பேராசிரியர் இருந்துள்ளார். அப்போதே மேற்கு நாடுளுடன் நட்புறவு ரீதியான உறவுகளை அவர் வலுப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையிலும் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை அவர் வகித்ததுடன் விடுதலைப் புலிகளுடனான அரசின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கும் தலைமை தாங்கினார். இவற்றின் மூலம் மேற்கு நாடுகளில் பேராசிரியர் தொடர்பில் நல்லெண்ணம் ஒன்று காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் நியமிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது அமெரிக்காவுடனோ மேற்கு நாடுகளுடனோ நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதில் கடந்த காலங்களில் அக்கறை காட்டவில்லை. அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையான விமர்சித்த மகிந்த ராஜபக்ஷ தரப்பினர், அமெரிக்காவையும் தமது எதிரிகளாகவே உள்நாட்டில் வர்ணித்தார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தம்மை நாட்டுப்பற்றாளர்களாகக் காட்டிக்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை மகிந்த தரப்பினருக்கு இருந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் பொன்சேகாவின் பிரச்சாரங்களுக்கு அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கியதாக மகிந்த தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத போதிலும், மகிந்தவைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கா முற்படுகின்றது என்ற ஒரு செய்தி இதன் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் சரத் பொன்சேகாவை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அரச தரப்பால் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சிங்களக் கடும் போக்களாளர்கள் அனைவரையும் தமக்குப் பின்னாள் அணி திரட்டுவதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா மிகவும் முக்கியமான பங்களிப்பை வழங்கிவந்த நிலையிலும், அமெரிக்கா புலிகளுக்கு புத்துயிரளிக்கமுற்படுவதாக ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துவந்தது சிங்கள மக்களைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகவே கருதப்படவேண்டும். அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான தரப்பினருடனேயே மகிந்த அணி சேர்ந்தார் என்பதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது. இதன் மூலம் உள்நாட்டில் அதிகளவு அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொண்ட மகிந்தவினால் சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இப்போது உருவாகியிருக்கின்றது.
உள்நாட்டு அரசியல் நிலைமைகள் அனைத்தையும் இப்போது தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில் மேற்கு நாடுகளுடன் சமாதானமாகச் செல்ல வேண்டிய ஒரு தேவை மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரங்கள் உள்ளன. ஒன்று - போர்க் குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்துக்கொள்வது. இரண்டாவது பொருளாதார ரீதியாகவுள்ள தேவைகள். இந்தநிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவினால் மேற்கு நாடுகளுடனான உறவுகளைச் சீராக்க முடியவில்லை. அந்த நிலையிலேயே பீரிஸைவிட்டால் மகிந்தவுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
அமெரிக்காவுடன் உறவுகளைச் சீராக்குவதற்கான சமிஞ்ஞைகளைக் காட்டிய மகிந்த ராஜபக்ஷ மற்றொரு நடவடிக்கையையும் மேற்கொண்டார். தெஹ்ரானில் நடைபெற்ற ஜி-15 நாடுகளின் தலைமைப் பதவியை அவர் ஈரானிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டார். ஜி.15 நாடுகளைப் பொறுத்தவரையில் அதுதான் இன்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளைக் கொண்டுள்ள ஒரு அமைப்பாக உள்ளது. இதன் மூலம் தன்னுடைய பலத்தை அமெரிகாவுக்குக் காட்டுவதற்கும் மகிந்த முற்பட்டிருப்பதாக மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் கருதுகின்றார்கள். இதனைவிட ஜி-15 அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் பீரிஸ் அமெரிக்காவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று - இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தப்போவதாக அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்துவரும் ஒரு பின்னணியில் அதனைத் தடுத்து நிறுவது அவரது விஜயத்தின் முதலாவது நோக்கமாக இருந்துள்ளது. போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வாறான குழு எதனையும் நியமிக்காமல் தடுப்பது பேராசிரியர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் இரண்டாவது நோக்கமாகும்.
இந்த இரு விடயங்களையும் கையாள்வதற்கு பீரிஸ் பலமான ஆயுதங்கள் எதனையும் கொண்டு செல்லவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைக்கப்போவதாகக் கூறியிருந்த நல்லிணக்கத்துக்கான குழு என்ற ஒரேஒரு ஆயுதத்தை மட்டும் பயன்படுத்தித்தான் அமெரிக்காவும், ஐ.நா.வும் வீசிய பந்துகளைத் தடுத்தாடுவதற்கு பேராசிரியர் முற்பட்டிருந்தார். இந்தக் குழுவை நம்பமுடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கத் திட்டமிட்டுள்ள நிபுணர் குழு திட்டமிட்டபடி அமைக்கப்படும் எனவும் உறுதியாகக் கூறிவிட்டார். இது பேராசிரியருக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைக்குக் கிடைத்துள்ள ஒரு தோல்வியாகவே இதனைக் கருத வேண்டும். அமெரிக்கா பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலில் உரையாற்றாமல் அமைச்சர் பீரிஸ் வெளிநடப்புச் செய்தமை கூட, சங்கடமான நிலைமையைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது. மிகவும் செல்வாக்கும் முக்கியத்துவமும் வாய்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் அமெரிக்க - இலங்கை உறவுகள் என்ற தலைப்பில் அமைச்சர் உரையாற்றவிருந்தார். ஆனால் முன்னறிவித்தல் எதுவும் இல்லாமல் அவர் அங்கிருந்து வெளிநடப்பச் செய்தமைக்கான காரணம் எதனையும் சொல்ல முடியாத நிலையில் இலங்கை உள்ளது.
இதேவேளையில் ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்கள் ஓரளவுக்கு வெற்றியளித்திருப்பதாக இலங்கை கருதுவதற்குக் காரணம் உள்ளது. இந்தப் பேச்சுக்களின் போதும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்டள நல்லிணக்க ஆணைக்குழுவை முன்னிறுத்தியே பேராசிரியர் தனது வாதங்களை முன்வைத்திருக்கின்றார். ஆனால், முறைப்பாடு செய்யப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியிருக்கின்றார். இதற்கான பதிலைக் கூறக்கூடிய அதிகாரத்துடன் பேராசிரியர் இருக்கவில்லை. ஆனால், நல்லிணக்கக் குழுவைப் பயன்படுத்தி அமெரிக்காவை ஓரளவுக்குச் சமாதானப்படுத்தி விட்டதாக இலங்கை கருதலாம்.
இருந்தபோதிலும் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான இலங்கையின் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இந்தப் பேர்க் குற்றச்சாட்டுக்களை கைகளில் எடுத்து இலங்கையை அச்சுறுத்த அமெரிக்கா தயங்காது என்பதே உண்மை. உள்நாட்டு அரசியல் நலன்கருதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேச அரங்கில் பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்பதால் இராஜதந்திரத்துடன் காய் நகர்த்த வேண்டி தேவை அரசுக்குள்ளது. ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கு எரிச்சலுட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. உதாரணத்துக்கு அல்ஜஸ_ரா தொக்காட்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள பேட்டி.
No comments:
Post a Comment