இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றதா?
கடந்தவாரப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்றைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்ட பிரதான கேள்வியாக இதுவே அமைந்திருந்தது. அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் முறையில் மாற்றம் என்பன தொடர்பில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில்தான் இந்தச் செய்தியும் வெளியாகியிருந்தது. இச்செய்தி தொடர்பான நம்பகத்தன்மை அதிகமாகக் காணப்பட்டமைக்கு அதுவும் ஒரு காரணம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் திரைமறைவில் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்புக்கான புதிய சீர்திருத்தங்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ள நிலையில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் "உள்வாங்கும்" நோக்கில் இந்தப் பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்திருக்கலாம் எனவும் கருதப்பட்டது.
அதேவேளையில் பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் பிரதான தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் பேச்சுக்களுக்கான அழைப்பு வரும் என கூட்டமைப்பும் எதிர்பார்த்திருந்த ஒரு பின்னணியிலேயே இந்தச் செய்திகளும் வெளியாகியிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.
இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியையே அரசாங்கம் கடந்த வாரத்தில் மேற்கொண்டதாகத் தெரிகின்றது. பேச்சுவார்த்தைகளோ அல்லது பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களோ எதுவும் இல்லை என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்திருக்கின்றார். உத்தியோகப்பற்றற்ற ரீதியிலான இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனப்போக்கு எவ்வாறுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு பேராசிரியர் பீரிஸ் முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சம்பந்தனிடம் பேராசிரியர் கூறியிருக்கின்றார்.
இருந்தபோதிலும், இது ஒரு திரைமறைவிலான பேச்சுவார்த்தையோ அல்லது பேச்சுக்களுக்கான முன்னோடியோ அல்ல என்பதைத் தமிழ்க் கூட்டமைப்பினர் அடித்துக்கூறுகின்றார்கள்.
13 வது திருத்தம் தொடர்பாக கூட்டமைப்பின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு இந்தச் சந்திப்பின்போது பேராசிரியர் பீரிஸ் முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன், "இது பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கே உதவாது" என திட்டவட்டமாக நிராகரித்ததுடன், "இதனை நீங்களே முன்னர் தெரிவித்திருந்தீர்கள்" எனவும் பேராசிரியருக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளைப் பொறுத்தவரையில் அமைச்சர் பீரிஸை அதிகளவுக்குப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முற்பட்டிருப்பது தெரிகின்றது. அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான பேராசிரியர், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அரசியலமைப்பு விவகாரங்களைக் கையாண்டவர். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்கு அரச தரப்புக் குழுவுக்குத் தலைமைதாங்கியர். அத்துடன் சர்வதேச ரீதியாகவும் பேராசிரியருக்கு நம்பகத்தன்மை உள்ளது. ஆக பேராசிரியரை இந்த முயற்சிகளுக்குப் பயன்படுத்துவது உள்நாட்டு ரீதியாகவும் அனைத்துலக ரீதியாகவும் தமக்குச் சாதகமானது என ஜனாதிபதி கருதுவதாகத் தெரிகின்றது.
ஆனால், சம்பந்தனுடனான சந்திப்பு தற்போதைய அரசியல் நிலையில் கூட்டமைப்பு எவ்வாறான மனோ நிலையில் உள்ளது என்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்காக அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியாக மட்டுமே கருதப்பட வேண்டும். அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும், தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக கூட்டமைப்பின் உணர்வுகளை அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாக இது இருந்திருக்கலாமே தவிர கூட்டமைப்பின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்பட வேண்டிய தேவை எதுவும் அரசுக்கு இல்லை.
தமிழர் தரப்பில் தெரிவு செய்யப்படும் பிரதான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதை இந்தப் பகுதியில் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அண்மித்தான வெற்றியைப் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள அரசு, அரசியலமைப்பைத் திருத்துவதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு யோசனைகள் அடுத்தமாத் அளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இதனை நிறைவேற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அரச தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றார்கள்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அரசுக்குத் தேவையாக இருப்பது வெறுமனே ஏழு வாக்குகள்தான். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அரசு விரும்பாது. கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசியலமைப்புத் திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஒரு யோசனையை முன்வைத்தால் சிங்கள ஆதரவுத் தளத்தை அரசு இழக்க வேண்டியிருக்கும்.
அண்மைய தேர்தல்களில் அரசாங்கத்துக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது சிங்களக் கடும் போக்காளர்களின் ஆதரவுத் தளம்தான். தமிழர்களுக்கு எதிராக இனவாதத்துடன் கூடிய ஒரு கடும்போக்கை அரசாங்கம் தனது கொள்கையாக வெளிப்படுத்தியமையால்தான் மூன்றில் இரண்டுக்கு அண்மித்தான ஒரு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்த நிலையில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி சிறுபான்மையினருடைய அரசியல் அபிலாசைகளுக்குச் சார்பான ஒரு அரசியலமைப்பு மாற்றத்தை அரசாங்கம் முன்வைக்கும் என யாராவது சொல்வார்களாயின் அவர்கள் இந்நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் கிடைத்துள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். எந்தவொரு அரசாங்கமும் தமக்குக் கிடைக்கக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது அரசியலில் யதார்த்தம். அந்தவகையில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் போது தேசம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதைவிட, கட்சி ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாவும் தமக்குள்ள அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கே மகிந்த ராஜபக்ஷ முற்படுவார். அரசியலில் இது சகஜம். 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ சிந்திக்கவில்லை. அவ்வாறு அவர் சிந்தித்துச் செயற்பட்டிருந்தால் இந்த நாடு கடந்த காலத்தில் எதிர்கொண்ட பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும். தன்னுடைய அதிகாரங்களைப் பற்றி மட்டுமே ஜே.ஆர். சிந்தித்தார். அதனால்தான் ஜே.ஆரினால் ஜே.ஆருக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு என 1978 ஆண்டு அரசியலமைப்பை அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
தற்போது மகிந்த உருவாக்கும் அரசியலமைப்பும் அவ்வாறான தன்மையைக் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இன்றுள்ள முதலாவது தேவை - ஜனாதிபதிப் பதவிக்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடிப்பது. இரண்டாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நீக்கிவிட்டு முன்னைய தேர்தல் தொகுதி முறையிலான தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது. இதன் மூலம் இரண்டு நன்மைகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஒன்று - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியைத் தொடந்தும் உறுதிப்படுத்த முடியும். இரண்டு - ஜே.வி.பி. போன்ற சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து அவர்கள் சக்தியற்றவர்களாக்கிவிட முடியும்.
இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அரசியலமைப்புத் திருத்தம் அமையும் என நிச்சயமாக நம்பலாம். அதாவது அரசின் நிகழ்ச்சி நிரலில் இவைதான் முன்னணியில் உள்ள விடயங்கள். இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு என்பது மகிந்த சிந்தனையில் இல்லாத ஒன்று. அவ்வாற தீர்வைக்காண வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் அரசுக்கு இல்லை. இந்தியாவையும் சர்வதேசத்தையும் சமாதானப்படுத்துவதற்காக இடையிடையே சில அறிவிப்புக்களை வெளியிடுவதைவிட வேறு எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது!
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏன் வரப்போகின்றது?
No comments:
Post a Comment