யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் வலிகாமம் வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுதான் முதலாவது இடப்பெயர்வு எனக் குறிப்பிலாம் மக்களை தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இச்சம்பவம் 1986 ஆம் ஆண்டில் ஜனவரி 13 ஆம் திகதி இடம்பெற்றது. இனநெருக்கடி ஆயுதப் போராக மாற்றமடையத் தொடங்கியிருந்த நிலையில் தமது படைப்பலத்தைக் கொண்டு அதனை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை ஒன்றுடனேயே இந்த இடப்பெயர்வு ஆரம்பமானது.
1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இராணுவம் பெருமளவுக்கு முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்ததுடன், முகாம்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் விடுதலைப் புலிகள் கொண்டுவந்திருந்தார்கள். இந்த நிலையில் பலாலி விமானத் தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1986 ஜனவரி 13 ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாள். அவர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வேருடன் அகற்றப்பட்டும் சம்பவங்கள் ஆரம்பமான நாள். அன்றைய தினம் பலாலி விமானப்படைத் தளத்திலிழருந்து ஏழாலையை நோக்கி குரும்பசிட்டி ஊடாக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை யின் போது மூன்று அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சிலர் சிறைப்பிடிக்கப்பட்டு காணாமல் போனார்கள். பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
சிதைக்கப்பட்ட குரும்பசிட்டி
அன்றைய தினம் வரலாற்றுப்பெருமை மிக்க குரும்பசிழட்டி கிராமம் இராணுவ நடவடிக்கையால் சிதைக்கப்பட்டது. இராணுவத்தால் இவ்வாறு சிதைக்கப்பட்ட முதலாவது தமிழ்க் கிராமம் என குரும்பிட்டி கிராமத்தையே கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் திகதி பலாலியிலிருந்து தெல்லவிப்பளைக்கு இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் மேஜர் தரத்திலுள்ள இராணுவ உயர் அதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குரும்பசிட்டி ஊடாகவே மீண்டும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் சில அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெருமளவு வீடுகள் வர்த்தக நிலையங்கள் என்பன இராணுவத்தின் கவச வாகனங்களினாலும் புல்டோசர்களினாலும் தரைமட்டமாக்கப்பட்டன. இது போன்ற இராணுவ நடவடிக்கைகளினால் குரும்பசிட்டி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஜனவரியில் குரும்பசிட்டி, கட்டுவன், வசாவிளான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முழுமையாகவே இடம்பெயர்ந்தார்கள்.
1986 ஆண்டில் முதல் முறையாகவும் பின்னர் 1990 ஆம் ஆண்டிலும் என என வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் தமது வளம் மிக்க மண்ணை விட்டு வெளியேறினார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் தமது வாழ்வாதாரங்களையும், வாழ்ந்த நிலத்தையும் இழந்த இந்த மக்கள் இன்று வரையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகவே உள்ளனர். அகதகளாக அனாதைகளாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அல்லல்படுகின்றார்கள்.
கடந்த 20 வருட காலமாக தமது வீடுகளைக் கூட பார்வையிட அனுமதிக்கப்படாதவர்களாகவே இவர்கள் உள்ளனர். உண்மையில் இப்பகுதியிலுள்ள வீடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலைதான் உள்ளது என்பதை அங்கு நேரில் சென்ற சிலர் கண்டுள்ளார்கள். வீடுகள் இருந்தமைக்கான அடையாளங்களைக் கூட சில இடங்களில் காண முடியாதிருக்கின்றது. போரினால் அந்தப் பகுதி சிதைக்கப்பட்டிருப்பதால் தமது வீடுகளை மட்டுமல்ல, தமது காணிகள் எங்கே இருந்தன என்பதைக்கூட அடையாளம்காண முடியாதவர்களாகவே இந்தப் பகுதி மக்கள் உள்ளனர்.
1986 ஜனவரி மாதம் குரும்பசிட்டி, கட்டுவன் மற்றும் வசாவிளான் பகுதிளை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட போது, மக்கள் முழுமையாகவே அந்தப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தார்கள். இருந்தபோதிலும் 1987 ஜூலையில் இந்திய அமைதிப்படை வந்திறங்கிய பின்னர் உருவாகிய சமாதான காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றரை வருடங்காகத் தொடர்ந்த தமது இடப்பெயர் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் நம்பிய போதிலும் அது உண்மையாக அமையவில்லை.
இரண்டாவது இடப்பெயர்வு
1990 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமான பின்னர் வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டு வெளியேறுவதற்கு மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் மூலம் வலிகாமத்தில் இரண்டாவது இடப்பெயர்வு ஏற்பட்டது. முழுமையாகவே இந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். வலிகாமம் வடக்கின் குடித்தொகை அப்போது 83,600 என மதிப்பிடப்பட்டிருந்தது. இது உண்மையில் 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையிலானதாகும். உண்மையில் இத்தொகை அவர்கள் வெளியேறிய போது ஒரு லட்சம் வரையில் அதிகரித்திருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.
வலிகாமம் வடக்கு தவிர, தென்மராட்சியில் தனக்கிளப்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகள், காரைநகரில் கடற்படை முகாமையடுத்துள்ள பகுதிகள் என்பனவும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், வலிகாமம் வடக்கில் மக்களுக்கு ஏற்பட்டளவுக்கு அதிகளவு பாதிப்புக்களை அது ஏற்படுத்தவில்லை. அத்துடன் அங்கிருந்து வெளியேறியவர்களின் தொகையும் வலி வடக்குடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே இருந்தது.
2003 ஆம் ஆண்டு அகதிகள் கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 18 இடங்கள் காணப்பட்டன. இது 160 சதுர கிலோ மீட்டர் பரப்பை உள்ளடக்கியதாகும். யாழ்ப்பாண நிலப்பரப்பில் இது 18 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்களில் (2002 – 2004) அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை முக்கியமானதாக இருந்தமைக்கும் இதுதான் காரணம்.
விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இக்காலப் பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், அதிஉயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 30,000 வீடுகள், 300 பாடசாலைகள், 40 கைத்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட 42,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலமும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள்.
யாழ்ப்பாண அரசாங்க செயலகத்தினால் 2005 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 9,000 பேர் முகாம்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட சுமார் 16,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய இல்லங்களில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்கள் தென்பகுதிக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
முறைப்பாடுகளும் வழக்கும்
போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்த கால கட்டத்தில், இடம்பெயர்ந்த மக்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பாக பெருமளவு முறைப்பாடுகளைச் செய்திருந்தார்கள். அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக தமது நடமாடும் சுதந்திரம், தமது வசிப்பிடத்தைத் தெரிவு செய்வதற்கான உரிமை, சட்டத்தின் முன்பாக சமத்துவம் என்பன மீறப்படுவதாக இந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2004 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றமும் இது தொடர்பான முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. யாழ்ப்பாண வாசி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு மீதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சின்னப்பு சிவஞானசம்பந்தர் என்பரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான தீர்ப்பில் "மனுதாரர் தனது காணிக்குச் செல்வதற்கும் அங்கு விவசாயச் செய்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இலங்கை அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மீறப்பட்டிருப்பதை இந்த வழக்கு கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தது.
வலி வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் பின்னர் போர் நிறுத்தங்கள் ஏற்பட்ட காலங்களில் மீண்டும் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டார்களா என வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் ஆ.சி.நடராஜாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கேட்ட போது அவர் அது தொடர்பாக விளக்கினார்:
"1996 மற்றும் 97 ஆம் ஆண்டுகளில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட போது, 44 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் 11 பிரிவுகளில் முழுமையாகவும், ஆறு பிரிவுகளில் பகுதி அளவிலும் மீளக்குடியேறுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் யாரும் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. ஏனைய பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகத்தான் இன்றுவரையில் இருக்கின்றது."
உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரகடனம் முதன் தடவையாக 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி பலாலி விமான நிலையத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதுதான் முதலாவது பிரகடனமாகும். இதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரகடனம் 1990 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னரே இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளோ அல்லது அவர்கள் தமது வாழ்வாதாரங்களைக் கொண்டு செல்வதற்கான வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாழ்வில் சந்தித்த சந்திக்கும் அவலங்கள் பல. இன்று வரையில் இவர்களுடைய மீள்குயேற்றத்துக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும், இவர்களுடைய அவலங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை.
- மேலும் தகவல்களுடன் அடுத்த வாரம்..
No comments:
Post a Comment