
பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், அதற்குக் கிட்டிய பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. மூன்றில் இரண்டுக்குத் தேவையாகவுள்ள ஏழு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது தமக்கு ஒன்றும் கடினமானதாக இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் இப்போது காய்களை நகர்த்ததத் தொடங்கியுள்ளது.
தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைக்குப் பதிலாக முன்னைய தேர்தல் தொகுதியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாகும். இருந்தபோதிலும் இதற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களைக் கவனத்திற்கொண்டு இந்த இரண்டையும் இணைத்த ஒரு தேர்தல் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதாவது ஜேர்மனியில் இவ்வாறான ஒரு தேர்தல் முறைதான் நடைமுறையில் உள்ளது.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதற்கு அப்பால் தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைப்பதன் மூலமாகவே கட்சி சார்ந்த முழுமையான நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் கருதுகின்றது. அரசாங்கத்தின் இந்த நம்பிக்கையில் உண்மை இல்லாமல் இல்லை. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைவிட தேர்தல் தொகுதி அடிப்படையிலான நேரடித் தெரிவு என்பதுதான் தமக்குச் சாதகமானது என அரசு கருதுவதில் பெருமளவு உண்மை இருக்கத்தான் செய்கின்றது.
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முன்னைய முறையில் - அதாவது தேர்தல் தொகுதி அடிப்படையில் நடத்தப்பட்டிருந்தால் அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஒரு சில ஆசனங்களை மட்டும்தான் பெற்றிருக்க முடியும், ஜே.வி.பி. அல்லது ஜனநாயக தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்க முடியாது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துத்தான் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் முறை மாற்றத்தை இரண்டு நோக்கங்களுடன் முன்னெடுக்கின்றது. ஒன்று - பிரதான எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற தேசிய ரீதியாகவுள்ள சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இதன் மூலம் குறைக்க முடியும். இதன் மூலம் இவ்வாறான சிறிய கட்சிகளின் அழுத்தங்களையிட்டு அஞ்சத் தேவையில்லை. 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக ஜே.வி.பி. வெளிப்பட்டமைக்கு இந்த விகிதாசாரப் பிரதிநித்துவத் தேர்தல் முறையும் ஒரு காரணம்!
அரசாங்கத்தின் இரண்டாவது நோக்கம் - சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவது. கடந்த காலங்களில் மலையகக் கட்சிகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றனவும் கிங் மேக்கர்கள் போலச் செயற்பட்டமைக்கு இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறையே காரணமாக இருந்துள்ளது. இந்தத் தேர்தல் முறையை மாற்றியமைத்துவிடுவதன் மூலம் சிறுபான்மையினக் கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்திவிட முடியும் என அரசு கருதுகின்றது.
இருந்தபோதிலும் வடக்குக் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இதன் மூலம் அரசாங்கம் நினைக்கும் அளவுக்குப் பலவீனப்படுத்திவிட முடியாது. காரணம் அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகவும் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் ஒன்றின் மூலமும் தமது பலத்தை அவர்களால் உறுதிப்படுத்த முடியும். ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளைத்தான் இது அதிகளவுக்குப் பாதிக்கும்.
தேர்தல் தொகுதி அடிப்படையிலான இறுதித் தேர்தல் 1977 ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் 18 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாகவும் வெளிப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட அப்போது முதல் முறையாக ஒரு தமிழரின் கைகளில் கிடைத்தது. கூட்டணியின் செலதிபர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.
எதிர்க்கட்சித் தலைமைப்பதவி இனி எந்த ஒரு காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற ஜே.ஆரின் சிந்தனையும் அப்போது தேர்தல் முறையை அவர் மாற்றியமைப்பதற்குக் காரணமாக அமைந்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர் பதவிக்குச் சமாந்தரமானது என்பது ஜனநாயக மரபு. பிரதமருக்குரிய அத்தனை வசதிகளும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்படுவதுதான் ஜனநாயக நாடுகளில் காணப்படும் வழமை. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தமிழர்கள் ஒரு போதும் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாது.
ஆக, தேர்தல் முறை மாற்றம் என்பது மலையகத் தமிழ்க் கட்சிகளினதும், முஸ்லிம் கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துக்குத்தான் உடனடியாக வேட்டுவைப்பதாக அமையும். முலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையிலேயே மலையகத் தமிழ்ப் பிரதிநித்துவம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பேரம்பேசும் பலத்தை அவர்கள் இழந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தேர்தல் முறையில் செய்யப்படக்கூடிய மாற்றம் அவர்களை மேலும் பாதிப்பதாகவே இருக்கும்.
மலையகத் தமிழ்க் கட்சிகள் இப்போது பெருமளவுக்கு அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அவர்கள் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. இதேநிலையில்தான் முஸ்லிம் அமைச்சர்களும் இருக்கின்றார்கள். அரசுடன் இணைந்து செயற்படும் இவர்கள் தமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் இணைந்து செயற்பட முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதிக்கும் விடயங்களில் இவர்கள் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசுடன் இணைந்திருக்கும் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியம்.
சிறுபான்மையினக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவது என்பது இந்த அரசாங்கத்தின் நிகழ்சி நிரலில் பிரதானமானது. அதன் செயற்பாடுகள் அதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆதிகாரமில்லாத வெறும் அலங்கார அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளது என்பதற்காக தமது இனத்தைப் பலவீனப்படுத்தும் திட்டங்களுக்கே மலையக, மற்றும் முஸ்லிம் தலைமைகள் துணை போகப் போகின்றனவா என்பதுதான் இன்று எழுகின்ற கேள்வியாகும்!
No comments:
Post a Comment