கட்சிக்குள் நெருக்கடிகள் எந்தளவுக்குத் தீவிரமடைந்திருந்தாலும், கட்சியின் தலைமைப் பதவியை ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தக்கவைத்தக்கொள்வார் என ஐ.தே.க.வின் விசுவாசியான நண்பர் ஒருவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போதைய நிலையில் சஜீத் பிரேமதாசவினால் சலசலப்பை ஏற்படுத்த முடிந்தாலும், தலைமையைக் கைப்பற்றக் கூடியளவுக்கு கட்சிக்குள் அவருக்கு ஆதரவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக உரையாடியபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் சொல்வதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், கட்சியின் முக்கிய பதவிக்குரியவர்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிவு செய்வதென்ற தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்திருப்பதையடுத்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. கட்சியின் கடந்த காலத் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமை காரணமல்ல என்பதைச் சொல்வதற்கு அவர் முற்பட்டுள்ளமையை அவரது அண்மைக் காலப் பேட்டிகளில் காணக்கூடியதாகவிருக்கின்றது.
கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கவுள்ளவர்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிவு செய்வது என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதன் மூலமாக ஐ.தே.க.வுக்குள் உருவாகியிருந்த நெருக்கடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னாள் சாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு இது தொடர்பில் தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது. கட்சியின் செயற்குழுவும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதன் மூலம் ஐ.தே.க.வுக்கு புதிய ஜனநாயக வடிவம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.தே.க.வின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும். கட்சியின் பிரதித் தலைவர், உப தலைவர் தேசிய அமைப்பாளர், தவிசாளர் போன்ற முக்கியமான பதவிக்குரியவர்களைக் கட்சித் தலைமை நியமிக்கும் ஒரு நடைமுறைதான் கடந்த காலங்களில் காணப்பட்டது. இது கட்சித் தலைவருக்கு அதிகளவு அதிகாரத்தை வழங்கும் ஒரு நடைமுறையாகும். ஆனால், புதிய சீர்திருத்தங்களின்படி இந்தப் பதவிக்குரியவர்கள் மட்டுமன்றி கட்சித் தலைவர் கூட இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார்கள். இதன் மூலம் கட்சிக்குள் ஜனறாயகம் உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
கட்சிச் சீர்திருத்தங்கள் பற்றிய இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், கட்சித் தலைமையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் நெருக்கடி ஒரு புதிய கட்டத்துக்குள் பிரவேசித்திருப்பதாகவே தெரிகின்றது. கட்சியின் செயற்குழு இந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் பாராளுமன்றக் குழுவில் இதற்கான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சிப் பொதுக்குழு இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே புதிய சீர்திருத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
கட்சியின் அணுகுமுறையில் உருவாகியுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. அண்மைக்காலங்களில் கட்சி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான தோல்விகளுக்கு ரணிலின் பலவீனமான தலைமைத்துவமே காரணம் எனக்குறிப்பிடும் அவரது எதிரணியினர், தலைமையை மாற்றுவதன் மூலமாகவே வெற்றிப் பாதையில் கட்சியைக் கொண்டு செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றார்கள். இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் மேல்நாட்டுப் பாணியிலான தலைமைத்துவம் ஒன்றை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சியின் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமைத்துவம்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராகவில்லை. கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் தலைமைப் பதவியிலிருந்து விலகிச் செல்வதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தாலும்கூட, தலைமைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனபதில் அவர் அக்கறையுள்ளவராகவே இருக்கின்றார். இல்லையென்றால் தனக்குப் போட்டியாக உருவாகிய சஜீத் பிரேமதாசவுக்குப் பிரதித் தலைவர் பதவியைத் தருவதாக அவர் தெரிவித்திருக்கவேண்டியதில்லை.
எது எப்படியிருந்தாலும், கட்சியின் நிலைமைகள் அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதைத்தான் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புக்குரியவர்களைத் தெரிவு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வெளிப்படுத்துகின்றது. இருந்தபோதிலும் இன்னும் இரண்டு தடைகளைத் தாண்டிச் சென்றால்தான் இது நடைமுறைப்படுத்தப்படும். பாராளுமன்றக் குழுவும், பொதுக்குழுவும் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டுவிடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால் ரணிலுக்கு சாதகமான நிலை இன்னும் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதேவேளையில், கட்சியின் கடந்தகாலத் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமைதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதுடன், தனது தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான முயற்சிகளிலும் ரணில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கடந்த காலத் தோல்விகளுக்கான காரணங்களை அவர் தன்னுடைய பார்வையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 1994 ஆம் ஆண்டில் கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தவிர அனைத்துத் தேர்தல்களிலும் அவர் தோல்வியையே சந்தித்திருக்கின்றார்.
1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்தான் ரணில் முதல் முறையாகத் தோல்வியடைந்தார். இத்தேர்தலில் சந்திரிகாவுக்கும் தனக்கும் இடையில் கடுமையான போட்டி காணப்பட்ட போதிலும், தேர்தல் பிரச்சாரத்தில் இறுதித் தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சந்திரிகா படுகாயமடைந்தததன் மூலமாகப் பெற்றுக்கொண்ட அனுதாப வாக்ககளே தனது தோல்விக்கு காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். அதேபோல 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் தனக்கு இருந்த போதிலும், ; புலிகளின் பகிஷ்கரிப்பு கோரிக்கை காரணமாக தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டமையினாலேயே தான் மயிரிழையில் தோல்வியைச் சந்தித்ததாக ரணில் குறிப்பிடுகின்றார்.
ரணில் தெரிவித்திருக்கும் விடயங்களில் உண்மையில்லாமல் இல்லை. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவர் சொற்ப வாக்குகளால்தான் தோல்வியைத் தீழுவினார் என்பதுடன் இறுதி நேரத்தில் ஏற்பட்ட மாற்றங்களே அவரது தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தன என்பதும் உண்மை. இவற்றை இப்போது சொல்லிக்கொள்வதன் மூலம் கட்சிக்குள் அவருக்குச் சார்பாக அனுதாப அலை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால், அந்த இறுதிநேர மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்து அதற்கான மாற்று உபாயங்களைக் கையாளதததுதான் அவரது தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளது. இது அவரது தலைமைத்துவத்தின் ஒரு தவறேயன்றி வேறல்ல.
ரணில் தோல்வியைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவருக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்தே வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்து தனது தலைமைப் பதவியை அவர் தக்கவைத்தே வந்திருக்கின்றார். இந்த முறையும் அதேபோல அவர் சமாளிப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள். தற்போதைய அரசியல் கள நிலையில் ரணிலுக்கு பதிலாக யார் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவர்களால் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை. இராணுவ வெற்றியை மையப்படுத்திய இனவாத அலையில் மகிந்த நாட்டைக் கொண்டுவந்து வைத்திருக்கின்றார். இந்த நிலையில் ரணிலுக்குப் போட்டியாக உருவாகும் சஜித் போன்றவர்களால் கூட எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மைகும்.
No comments:
Post a Comment