தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள பின்னணியில் உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் காரணமாக வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படட்டன, அவை எந்தளவுக்குப் பலனளித்தன என நடராஜாவிடம் கேட்ட போது அது பற்றி அவர் விரிவாக விளக்கினார்:
'கடந்த வரும்தான் நாம் எமது அமைப்பை ஏற்படுத்தி, இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி சில நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபருடன் பேச்சுக்களை நடத்தினோம். இரண்டாவது சந்திப்புக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழைக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் அமைச்சர் அதில் கலந்துகொள்ளவில்லை. அவரின் பிரதிநிதியே இதில் பங்குகொண்டார். இதில் அரசியலுக்கு அப்பால் இந்தப் பிரச்சினையைக் கையாள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்தச் சந்திப்பும் எந்தப் பலனையும் தரவில்லை எனத் தெரிவித்தார்.
"இதனையடுத்து மனித உரிமை இல்லம் ஒரு மநாட்டை நடத்தினார்கள். இதில் நான் வலி வடக்கு இடப்பெயர்வு தொடர்பாக விளக்கினேன். பல கட்சியினரும் இதில் கலந்துகொண்டிருந்தார்கள். இதன் மூலம் இந்தப் பிரச்சினை அனைத்துக் கட்சிகளினதும் கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இவ்வருடம் (2010) ஜனவரி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது இந்தப் பிரச்சினையும் முக்கிய கவனத்துக்குரியதாகியது. அவருடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போது 11 அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஒன்றை நாம் முன்வைத்தோம்" என அவர் விளக்கினார்.
அப்போது நாடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருந்தமையால் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உபாயமாக இந்த உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு சிந்தனை அரசாங்கத் தரப்பில் காணப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எதனையாவது செய்ய முற்படுகின்றதா என்பதை இடம்பெயர்ந்தோர் அமைப்ப அவதானித்தது.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக நடராஜா மேலும் விளக்ககின்றார்:
பசில் அளித்த வாக்குறுதி
"இது தொடர்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நாம் ஆராய்ந்தோம். நாம் உண்மையில் வலி. வடக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பாக இருந்தாலும் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுடைய நலன்களையும் கருத்திற்கொண்டுதான் எம்முடைய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். எமது இந்தக் கோரிக்கைகளை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இந்தக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அப்போது நாம் முன்வைத்த கோரிக்கையின் பிரதான அம்சமாக இருந்தது என்னவென்றால், காங்கேசன்துறை வீதிக்கு வடக்குப் பக்கமும், மாவட்டபுரம், கீரிமலை வீதிக்கு இடைப்பட்ட பகுதியையும் உள்ளடக்கியதாக சுமார் 10 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கியிருக்கின்றது. இந்த பத்து கிராமசேவகர் பிரிவுகளிலும் மக்களைக் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நாம் முன்வைத்த பிரதான கோரிக்கையாகும். ஏனென்றால் இந்தப் பகுதிகள் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகள் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்த தகவல் என்னவென்றால், இந்த உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையிலுள்ள 600 மீட்டர் தூரத்தை தாம் தாக்குதலற்ற பகுதியாக வைத்திருப்பதாக அரசு கூறிவந்திருக்கின்றது. அதில் வெளிப்பக்கமாக 300 மீட்டர் பகுதியில் 615 குடும்பங்களை மட்டும் மீளக்குடிமர்த்த அனுமதிப்பதாக அரசாங்கம் தொடர்ந்தும் வாக்குறுதியளித்துவந்த போதிலும் அது கூட பின்னர் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அரசாங்கத்துக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்னவென்றால் இந்த விடயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனை நாம் சுட்டிக்காட்டினோம். எங்களுடைய நெருக்குவாரத்தால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனால், பசில் ராஜபக்ஷ உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை”
நிவாரணம் எதுவும் இல்லை
இவ்வாறு தெரிவித்த நடராஜாவிடம், வலிகாமத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கு ஏதாவது நட்டவீடு வழங்கப்பட்டதா? அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான உதவிகள் கிடைக்கின்றா எனக் கேட்டபோது,
"அவர்களுக்கு எந்தவிதமான நட்டவீடும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் வலிகாமம் வடக்கைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்களா? என நடராஜாவிடம் கேட்ட போது அதனையிட்டு அவர் விளக்கினார்:
"வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாண முகாம்களிலிருந்த பலர் தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்வதற்கான வன்னி சென்றிருந்தார்கள். இவ்வாறு சென்றிருந்தவர்களில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கின்றார்கள். இப்போது அவர்களும் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள்.
வலி வடக்குப் பகுதி மக்களுக்காக என அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குடிசைகளுக்குள்தான் இவர்கள் இப்போது வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பெரும் இட நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைவிட இவர்களுக்கு தொழில் இல்லை. கூலி வேலைகளும் செய்ய முடியாதுள்ளனர். இவ்வாறு வன்னியிலிருந்து வந்தவர்களுக்கு அரசாங்கம் 25,000 ரூபாவை மட்டுமே நிவாரணமாக வழங்குகின்றது. ஒரு குடும்பத்துக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் இந்தத் தொகை அவர்களால் மீண்டும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க போதுமானதல்ல. இந்தத் தொகை முடிவடையும் வரையில்தான் அவர்களால் உயிர்வாழ முடியும். இவ்வாறானவர்களையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை."
உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வலிகாமம் வடக்கில் எத்தனை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன எனக் கேட்டபோது, 17 பாடசாலைகள் வரையில் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நடராஜா, இந்தப் பகுதி மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகள் பற்றியும் விளக்கினார். பல மாணவர்கள் முகாம்களிலிருந்து வேறு பாடசாலைகளுக்குச் செல்கின்ற போதிலும், அதனால் அவர்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதிப்புக்கள்
இந்த உயர் பாதுகாப்பு வலயத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புக்களையிட்டு ஆராய்ந்த போது பெரும் அதிர்ச்சியான தகவல்களே கிடைக்கின்றன. இலங்கையிலேயே விவசாயத்துக்கு சிறப்பானது எனக் கூறக்கூடிய நிலம் வலிகாமம் வடக்கில்தான் உள்ளது. இங்குள்ள செம்பாட்டு மண்ணை குடாநாட்டில் வேறு எங்கம் காண முடியாது. மரக்கறிகள் இந்த மண்ணில் பெருமளவு விளைச்சலைக்கொடுத்தது. 1970களிலில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், வெங்காயம், மிளகாய், மரவள்ளிக்கிழங்கு என்பனதான் இலங்கை முழுவதிலுமே விநியோகம் செய்யப்பட்டது.
இலங்கை முழுவதற்கும் விநியோகம் செய்யப்பட்டது என்பதற்கு அப்பால் யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகம் சந்தை, திருநெல்வேலிச் சந்தை என்பன உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து மரக்கறிச் சந்தைகளிலும் வலி வடக்கில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளே நிரம்பிக்கிடந்தன என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். குறிப்பாக பலாலி கிழங்கு, வசாவிளான் கத்தரிக்காய் என்பன அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன.
இரண்டாவதாக மீன்பிடியைப் பொறுத்தவரையில் இலங்கையிலேயே அதிகளவு மீன்களைப் பிடிக்கும் ஒரு துறையாக இருந்தது மயிலிட்டிதான். இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவுக்கு மீன்பிடிக்கப்பட்டமையை இந்தப் பகுதியில்தான் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் தென்பகுதிக்கும் பெருமளவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த இருபது வருட காலமாக இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த உற்பத்தியை நாடு இழந்திருக்கின்றது.
இந்த மீன்பிடிச் சமூகமும் தமது ஜிவனோபாயங்களை இழந்துள்ள நிலையில் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்தேடி முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்தும் அகதிகளாகிவிட்டனர். இப்போது மீண்டும் அகதிகளாக வாழ்வாதாரங்கள் இல்லாமல் முகாம்களிலும், நண்பர்கள் உறவினர்களுடைய வீடுகளிலும் இவர்கள் வசிக்கின்றார்கள்...
மயிலிட்டியை ஒரு மீன்பிடித்துறையாக அபிவிருத்தி செய்திருந்தால் மீன்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு நாடு சென்றிருக்கும். அந்தளவுக்கு அதிகளவு மீன்கள் அங்கு கிடைத்தன. ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது தமிழர்களுடைய பொருளாதாரமாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகள் எதனையும் செய்யப்போவதில்லை. ஆக, பொருளாதார ரீதியாக யாழ்ப்பாணத்துக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே இந்தப் பாதுகாப்பு வலயப் பிரகடனம் பாரிய இழப்புக்களையே கொடுத்திருக்கின்றது. காய்கறி உற்பத்தியும், கடற்றொழிலும் இந்தப் பாதுகாப்பு வலயத்தால் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் செய்திகளைச் சேகரித்துக்கொண்டு வலிகாம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக என கோப்பாய் உதவி அரசாங்க அதபர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றைப் பார்வையிடுவதற்காகச் சென்றோம். சுமார் இரண்hயிரம் பேர் தங்கியுள்ள அந்த முகாமில் மேலும் அதிர்ச்சிகளே எமக்குக் காத்திருந்தன...
அவை பற்றி அடுத்த வாரம்.