Wednesday, March 1, 2017

நொயார் மீதான தாக்குதல்; நீதி நிலைநாட்டப்படுமா?


- பாரதி -

'த நேஷன்' பத்திரிகையின் முன்னாள் பிரதி ஆசிரியர் கீத் நொயார் (Keith Noyahr) கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர் கைதாகியுள்ளனர். கீத் நொயார் விவகாரம் பெருமளவுக்கு மறக்கப்பட்டிருந்த நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கைதுகள், அரசியல் மற்றும் ஊடகத்துறையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பரபரப்பாக இடம்பெற்ற லசந்த விக்கிரதுங்க, பிரகீத் எக்னெலியகொட  கொலை விசாரணைகளில் மந்த நிலை ஏற்பட்டிருக்கும் பின்னணியில், நொயார் கடத்தல் விவகாரம் 8 வருடங்களின் பரபரப்பாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானதுதான். பாதுகாப்புத் துறையில் முக்கிய பதவியிலிருந்த ஒருவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதும் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம். ஆனால், இறுதியில் ஒன்றும் இல்லாமல் விசாரணைகள் கைவிடப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் ஊடகத்துறை செயற்பாட்டாளர்களிடம் காணப்படுகின்றது.

கீத் நொயார் கடத்தப்பட்டு சுமார் 8 வருடங்களின் பின்னரே அது குறித்த விசாரணை குற்றப் புனாய்வுப் பிரிவினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நொயார் கடத்தப்பட்ட போதே சி.ஐ.டி.யினர் அது குறித்து பலருடைய வாக்குமூலங்களைப் பதிந்திருந்தார்கள். குறிப்பாக நொயாருடன் பணிபுரிந்த பலருடைய வாக்குமூலங்கள் பதியப்பட்டன. விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு நோயாரிடமும் சி.ஐ.டி.யினர் கோரியிருந்தார்கள். இருந்த போதிலும், அந்த வேளையில் அந்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. யாரும் கைதாகவும் இல்லை. ஒரு அளவுக்கு மேல் விசாரணை முன்னெடுக்கப்படவும் இல்லை. கடத்தப்பட்டு, பலமாகத் தாக்கப்பட்டு வீதியில் கொண்டுவந்து போடப்பட்ட நொயார், மருத்துவசிகிச்சைக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது. ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் அவ்வப்போது இதனையிட்டு குறிப்பிட்டதைவிட, இச்சம்பவம் பெரிதாகப் பேசப்படவும் இல்லை.

ஆணயிட்டவர் யார்?

2008 மே மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 இராணுவத்தினர் கைதாகியிருப்பதாக கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 18) குற்றப் புலனாய்வுத்துறை அறிவித்த போது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினர் இருந்துள்ளார்கள் என்ற ஊடகத்துறையினருடைய சந்தேகத்தையும் அது உறுதிப்படுத்தியது. கைதானவர்களில் மேஜர் புலத்வத்தை முக்கியமானவர். சிரேஷ்ட இராணுவ அதிகாரியான இவர், ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதலிலும் தொடர்புடையவராகக் கருதப்படுகின்றார். உபாலி மீதான தாக்குதல் 2009 முற்பகுதியில் இடம்பெற்றது. ஊடகவியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்ட சிலர் பயன்படுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

கைதான படையினர் ஐவரும் மார்ச் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். கைதானவர்கள் அம்பாகச் செயற்பட்டவர்கள்தான். இந்த அம்புகளை 'எய்தவர்' யார் என்பதுதான் பதில் காணப்பட வேண்டிய பிரதான கேள்வி. பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒருவரே இதன் பின்னணியில் இருந்திருப்பதாக வெளியிடப்படும் சந்தேகங்களும் நியாயமானவையாகத்தான் உள்ளன. அதற்குத் தேவையான உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சிக்கியதாகத் தெரியவில்லை. லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பிரகீத் எக்னெலியகொட காணமல் போனமை, சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமங்க கொலை தொடர்பான விசாரணைகளிலும் இதேபோல இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் கைதானபோதிலும், இப்போது விசாரணைகள் மந்த கதியில் செல்வதையே காணமுடிகின்றது.

கைதான இராணுவ அதிகாரிகள் யாருமே நொயார் மீது தாக்குதலை நடத்துவதற்கு தனிப்பட்ட எந்தக் காரணமும் இருக்கவில்லை. 'மேலிடத்து' உத்தரவை அவர் செயற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த 'மேலிடத்தை' கண்டுபிடிப்பதும், கண்டுபிடித்தால் அதனை சட்டத்தின் முன்பாகக் கொண்டுவருவதும்தான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பெரும் சவாலாகவே அமையப்போகின்றது. கடந்த இரண்டு வருட காலத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்துமே ஒரு கட்டத்துக்கு மேல் செல்லாமலிருப்பது வெளிப்படை. அந்த நிலையில், நொயார் மீதான தாக்குதல் விசாரணை இந்த 5 இராணுவ அதிகாரிகள் கைதுடன், முடிவடைந்துவிடுமா அல்லது அடுத்த கட்டத்துக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

கடத்தப்பட்டது ஏன்?

தெஹிவளை, வைத்தியா மாவத்தையிலுள்ள அவருடைய வீட்டு வாசலில் வைத்தே கீத் நொயார் கடத்தப்பட்டார். 2008 மே 22 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. 'நேஷன்' பத்திரிகையின் பிரதி ஆசிரியராக மட்டுமன்றி, அதன் பாதுகாப்பு விவகார பத்தியாளராகவும் நொயார் இருந்துள்ளார். சன்டே ரைம்பஸில் வெளிவரும் பாதுகாப்பு விவகார பத்திக்கு நிகராக வாசகர்கள் மத்தியில் பெரும் அவதானிப்பைப்பெற்ற ஒரு பத்தியாக இது இருந்தது. இராணுவத் தலைமையை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை கடந்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அவர் எழுதியிருந்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இராணுவத் தலைமையின் மீது இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் இந்தப் பத்தி ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி இரு வாரங்களின் பின்னர் நொயார் கடத்தப்பட்டார். தெஹிவளையிலுள்ள தன்னுடைய வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த நொயார், 10.30 க்கு சில நிமிடங்கள் முன்னர், மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். தான் அருகே வந்துவிட்டதால், கதவைத் தறக்குமாறு கூறியிருக்கின்றார். கதவைத் திறந்து 15 நிமிடங்களாகியும் கணவர் வராததால் ஆச்சரியடைந்த மனைவி, வாசலுக்கு வெளியே வந்து பார்த்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. வாசலில் நொயாரின் கார் நின்றது. அதன் கார் என்ஜின் வேலை செய்துகொண்டிருந்தது. லைற் எரிந்துகொண்டிருந்தது. முன்பக்கக் கதவு அகலத் திறந்திருந்தது. ஆனால், கணவன் மட்டும் இருக்கவில்லை. அருகில் தேடிப்பார்த்தும் கணவரைக் காணவில்லை என்றவுடன், "ஏதோ நடந்துவிட்டது" என்பது மனைவிக்கு உறைத்தது.

உடனடியாகவே நேஷன் ஆசிரியர் லலித் அழகக்கோன் உட்பட முக்கியமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட அனைவருமே தெஹிவளைக்கு விரைந்தார்கள். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ, முன்னார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நொயரை விடுவிக்க உதவுமாறு  அவர்களிடம் கோரப்பட்டது. "நொயார் காணாமல் போனமைக்கு இராணுவம் காரணமல்ல" என உடனடியாகவே கோதாபாய மறுத்திருக்கின்றார். ஊடகவியலாளர்கள் பலர் உடனடியாகவே தெஹிவளை பொலிஸ் நிலையம் முன்பாகக் கூடி நொயாரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்தார்கள். பொலிஸாரோ எதனையும் செய்யக் கூடிய நிலையில் இருக்கவில்லை.

கைப்பேசி 'சிக்னல்'

நொயாரின் கடத்தல் தொடர்பில் உடனடியாகவே கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஊடக அமைப்புக்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவற்றின் மூலமாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நொயாரின் கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிலிருந்து ஏதாவது சமிஞ்ஞை வருகிறதா என அவதானிக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நள்ளிரவுக்கு மேலாக தொம்பே பகுதியிலிருந்து சமிஞ்ஞை ஒன்று கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்தது. கடத்தல்காரர்கள்  ஏதோ தேவைக்காக அப்போது தொலைபேசியை செயற்படுத்தியிருக்க வேண்டும். கடத்தப்பட்ட பத்திரிகையாளர் தொம்மே பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது உணர்த்தியது.

பொலிஸ் விசாரணையில் கொஞ்சம் கூட நம்பிக்கை வைக்காத நொயாரின் சகாக்கள் உடனடியாகவே அந்தப் பகுதியை நோக்கி விரையத் தொடங்கினார்கள்.  விடுதலைப் புலிகளுடனான போரின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொம்மேயில் தமது இரகசிய பாதுகாப்பு முகாம்கள் பலவற்றை வைத்திருந்தார்கள். தொம்பேயிலிருந்து வந்த 'சிக்னல்' இந்தக் கடத்தலின் பின்னணியில் இராணுவப் புலனாய்வாளர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. தொம்பே பகுதியில் விடிய விடிய பத்திரிகையாளர்கள் தேடுதல் நடத்தியபோதிலும், எதனையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், மறுநாள் அதிகாலை தெஹிவளையிலுள்ள தனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் குற்றுயிராகப் போடப்பட்டிருந்த நிலையில் நொயார் காணப்பட்டார். உடைகள் கிழிக்கப்பட்டு. உடலில் கடும் காயங்களுடன் மயக்க நிலையில் அவர் இருந்தார். கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதை இது உணர்த்தியது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இரவோடிரவாக அரசுக்குக்கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், பத்திரிகையாளர்கள் தொம்பேயில் தேடுதல் நடத்தியதும் அவரது உடனடியான விடுதலைக்கு காரணமாக இருந்திருக்கலாம். முன்னைய அரசின் உயர் மட்டம் இதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் இது உணர்த்தியது. நேஷன் பத்திரிகையில் தொடர்ச்சியாக சென்பதி (Senpathi) என்ற பெயரில் அவர் எழுதி வந்த பாதுகாப்பு விவகாரம் தொடர்பான பத்திதான் அவரது கடத்தலுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது எனத் நேஷன் பத்திரிகை நிர்வாகம், இதற்காக அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருந்துவந்தமையையும் உறுதிப்படுத்தியது. ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களை மௌனிக்கச் செய்யும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தக் கடத்தலும் இடம்பெற்றது. பாதுகாப்புப் பத்தியை எழுதுவதற்கான தகவல்களை நொயார் யாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக நொயார் பின்னர் தெரிவித்தார். வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய சில தினங்களிலேயே அவுஸ்திரேலியா சென்ற, நொயார் இன்றுவரையில் தாயகம் திருப்பவே இல்லை. அன்று இரவு நடந்த அச்சம்பவம் அவரையும் குடும்பத்தையும் அந்தளவுக்குப் பாதித்தது.

8 வருடங்களின் பின்னர் இப்போது விசாரணை ஆரம்பமாகியிருக்கின்றது. இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஐவர் கைதாகியுள்ளார்கள். மேலும் சிலர் பைதாகலாம் எனச் சொல்லப்படுகின்றது. இத்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களே லசந்த, உபாலி விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டிருக்கின்றது. அதனால், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போதும் எழும் கேள்வி இதுதான். இந்த விவகாரத்திலாவது நீதி நிலைநிறுத்தப்படுமா? குற்றவாழிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா?

(26-02-2017 ஞாயிறு தினக்குரல்)

No comments:

Post a Comment