Friday, November 1, 2019

தீர்வைச் சொல்லாத விஞ்ஞாபனங்கள்

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. பொதுவாக தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கும் நடைமுறை அரசியலுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. ஆனாலும், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் தமது கொள்கை என்ன? அணுகுமுறை என்ன? என்பதை வேட்பாளர்கள் இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள். விஞ்ஞாபனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது அதனால்தான்.

அந்த எதிர்பார்ப்புடன் பார்த்தபோது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை குறித்து கோத்தபாயவின் விஞ்ஞாபனத்தில் எதுவும் இல்லை. முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொடாத ஒரு விஞ்ஞாபனமாக வரலாற்றில் இதனைப் பார்க்க முடியும். அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வைத் தராமல், பிரச்சினையின் விளைவுகள் சிலவற்றுக்கு மட்டும் அந்த விஞ்ஞாபனத்தில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அதுவும் முழுமையான ஒரு தீர்வாக இல்லை.

தமிழ் மக்களுடைய அரசியல், அன்றாடப் பிரச்சினைகளை உள்ளடக்கிய 13 கோரிக்கைகள் கொண்ட ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு, ஐந்து தமிழ்க் கட்சிகள் அதில் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஆவணத்தைப் பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்து பேசுவது எனவும், அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்பதுதான் ஐந்து கட்சிகளின் தீர்மானம். இந்த ஆவணத்தைப் பார்ப்பதற்கு முன்னதாகவே அதனைத் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கோத்தாபய பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அது குறித்துப் பேசுவதற்குக் கூட தயாரில்லை என்பதுதான் அவரது நிலைப்பாடு.

கோத்தாபய இவ்வாறு அறிவித்துவிட்ட நிலையில், அவருடன் கடுமையான போட்டியில் இறங்கியுள்ள சஜித் பிரேமதாசவும், ”நிபந்தனைகள் எதனையும் ஏற்கப்போவதில்லை” என தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஐந்து கட்சிகளுக்கான கதவை கோத்தாபய மூடிவிட்ட நிலையில், தான் கதவைத் திறந்துவைத்திருப்பது சிங்கள கடும் போக்காளர்களின் வாக்குகளைப் பாதிக்கும் என்பது சஜித்தின் மதிப்பீடு. அதற்கேற்றவாறான பிரசாரங்களை முன்னெடுக்கத் தயாரான நிலையில்தான் சிங்கள ஊடகங்கள் சில உள்ளன என்பதும் உண்மை. 5 கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கை தொடர்பில் பேசுவதற்கே பிரதான வேட்பாளர்கள் தயாராகவில்லை என்பது இலங்கை அரசியலின் மோசமான ஒரு பக்கத்தைக் காட்டுகின்றது.

மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேசுவதற்கான நேர ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதாகச் சொல்லியிருந்த சுமந்திரனும் அதனைச் செய்யவில்லை. குறிப்பிட்ட வேட்பாளர்கள் இந்தச் சந்திப்பை விரும்பமாட்டார்கள் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். 13 கோரிக்கைகளுடன் வரப்போகும் 5 கட்சித் தலைவர்களுக்கும் சொல்வதற்கு வேட்பாளர்களிடம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில், ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? தமிழ் மக்களுக்கு என்னத்தைச் சொல்லப்போகின்றார்கள்? என்பதுதான் இப்போது எழும் கேள்விகள்.

பிரதான வேட்பாளர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், தமது நிலைப்பாட்டை எப்படி அறிவிப்பது என்பது தமிழ்க் கட்சிகளின் தற்போதைய பிரச்சினை. இரு தரப்பினரதும் விஞ்ஞாபனங்கள் வெளிவரட்டும் அதனை அடிப்படையாகக்கொண்டு எமது முடிவை எடுப்போம் என்பதுதான் தமிழரசுக் கட்சியின் முடிவு. இருவருமே பேசத் தயாராயில்லாத நிலையில், முடிவெடுப்பதற்கு 5 கட்சித் தலைவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அதனால்தான் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனமும் வெளிவந்த பின்னர் 30 ஆம் திகதி கூடி முடிவெடுப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.

ஆனால், 31 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதால், அதற்கு முன்னரே முடிவெடுக்க வேண்டும். எமது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி என்பன உறுதியாக இருந்தன. அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் 5 கட்சித் தலைவர்களும் நாளை கூடுகின்றார்கள். இதில் உறுதியான முடிவு ஒன்று வருமா என்பது தெரியவில்லை. ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் 30 ஆம் திகதிதான் வெளிவருகின்றது. அதுவரையில் தீர்மானம் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில், தமிழ்க் கட்சிகளில் ஒன்று இருப்பதாகத் தெரிகின்றது.

இனநெருக்கடி குறித்து கோத்தாபய தனது விஞ்ஞாபனத்தில் எதனையும் சொல்வதைத் தவிர்த்துக்கொண்டிருப்பதால், சஜித் பிரேமதாச துணிச்சலுடன் அது குறித்து தன்னுடைய விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகள் தொடர்பில் சஜித் எடுத்த நிலைப்பாடு உணர்த்துவது அதனைத்தான். இனநெருக்கடி குறித்து தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை தான் சொல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை சஜித்துக்கு இருக்கலாம். ஏனெனில் யார் வரவேண்டும் என்பதில் மட்டுமன்றி யார் வரக்கூடாது என்பதிலும் தமிழர்கள் அவதானமாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களிலும் அவ்வாறே இருந்துள்ளார்கள்.

ஆனால், நாட்டின் பிரதான பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகவும், உறுதியாகவும் சொல்ல முடியாத அல்லது சொல்லத் துணிவில்லாத வேட்பாளர்களில் ஒருவரைத்தான் நாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போகின்றோம். இது கொடுமையானதுதான். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் வரும். பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என ஜனநாயகத் திருவிழாக்கள் வந்துகொண்டேயிருக்கும். தேர்தலின்போது தீர்வைப் பகிரங்கமாகச் சொல்லி அதற்காக வாக்கு கேட்கும் தலைவர்கள் உருவாகும் வரை இந்தப் பிரச்சினை தொடர் கதையாகத்தான் இருக்கும்.

தினக்குரல்: 2019-10-27

No comments:

Post a Comment