Wednesday, March 1, 2017

அதுவும் இல்லை; இதுவும் இல்லை

ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதற்கான காய்நகர்த்தல்களை அரசாங்கம் மிகுந்த இராஜதந்திரத்துடன் முன்னெடுத்துவருகின்றது. "தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்கதற்கான முயற்சிகளை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் முன்னெடுத்துவருகின்றோம். அதுதான் இப்போது முக்கியமானது. இந்த நிலையில் பொறுப்புக் கூறல் என்பதை நிர்ப்பந்தித்து அரசியலமைப்பாக்க முயற்சிகளைக் குழப்பிட வேண்டாம்" என்பதுதான் சர்வதேசத்துக்கு  அரசாங்கம் இப்போது கொடுக்கும் செய்தி. ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர்  ஆகியோர் இந்த உபாயத்துடன் தமது இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இப்போது இதே இலக்குடன் களம் இறங்கியிருக்கின்றார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை புதன்கிழமை சந்தித்து சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கும் தகவல்கள் இதனைத்தான் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது.

சந்திரிகா குமாரதுங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட பதவிகள் எதிலும் இல்லாத போதிலும், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ளார். மைத்திரி - ரணில்  அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதில் முக்கிய பங்கை வகித்தவர். அதனால், அரசாங்கத்தின் முக்கியமான ஒருவராகவே கருதப்படுகின்றார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பில் இவருக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே தெரிகின்றது. அதனால், இவரது கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகவே கருதப்பட வேண்டும். அந்த நிலைல் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது பல விடயங்களை அவர் தெரிவித்திருந்தாலும், பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட விடயங்களையிட்டு அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தரத்தக்கதாக அவை அமைந்திருக்கின்றன.

"போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மீறல்களுக்கு யாரோ சிலர் பொறுப்பேற்க வேண்டும். மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நல்லிணக்க விவகாரங்களுடன் தொடர்புபடவில்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள், தமது எதிர்காலம் குறித்தே அதிகம் கரிசனை கொள்கின்றனர். தேசிய நல்லிணக்கத்துக்கான கொள்கையும், புதிய அரசியலமைப்புமே தற்போது அவசியமானவை. இதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதனை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு அங்கம் தான் பொறுப்புக்கூறல். எமது நீதித்துறையால்  சரியாக செய்ய முடியுமானால், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு தேவையிருக்காது" என்று சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சந்திரிகாவின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் தொடர்புபடுத்தி அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அரசாங்கம் செல்லப்போகும் பாதை எது என்பதை வெளிப்படுத்தக்கூடியவை.

அது குறித்து சந்திரிகா இவ்வாறு கூறுகின்றார்: "புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கு மகிந்த அணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொது பல சேனா ஆகியன பாரிய சவாலாக உள்ளன. இதன் காரணமாக கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்துவிடக்கூடும் என்ற ஐயம் முன்வைக்கப்படுகின்றது. இருந்தாலும், அதில் வெற்றிபெற முடியும். போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும்." இதுதான் சந்திரிகாவின் கருத்து. சர்வதேசத்துக்கும் இதனைத்தான் அவர்கள் சொல்லிவருகின்றார்கள். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேலும் இரு வருடகால அவகாசத்தைக் கேட்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக் கூறல் என்பவற்றை ஆரம்பித்தால் இப்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பாக்க முயற்சிகள் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுதான் சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் கொடுக்கும் செய்தி. அதாவது, கால அவகாசம் கோருவதை நியாயப்படுத்த அரசியலமைப்பாக்க முயற்சியை துரும்புச் சீட்டடாக அரசாங்கம் பயன்படுத்தப்போகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

நல்லிணக்கம் முக்கியமானது. அதற்காக பொறுப்புக் கூறலை வலியுறுத்தக்கூடாது என்பதுதான் அரசாங்கம் இப்போது எடுக்கும் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் மக்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஏதே ஒருவகையில் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனால்தான் பொறுப்புக் கூறலை அதிகளவுக்கு வலியுறுத்தாமல், புதிய அரசியலமைப்பில் நம்பிக்கையை அவர்கள் வெளியிட்டுவருகின்றார்கள். அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே அதுவும் உள்ளது. கால அவகாசம் என்பது இலங்கை அரசாங்கத்துக்குப் புதிதல்ல. அதனை அவர்கள் கேட்கப்போது இதுதான் முதன்முறையும் அல்ல. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கால அவகாசம் கேட்பது பொறுப்புக்கூறலைச் செயற்படுத்துவதற்காகவாக இருக்கப்போவதில்லை என மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையாக எச்சரிக்கின்றது. இந்த விவகாரத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்காக கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அவகாசம் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது. சந்திரிகா குமாரதுங்க கால அவகாசத்தை நேரடியாகக் கேட்கவில்லை. பொறுப்புக் கூறலை வலியுறுத்தினால், அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற எச்சரிக்கையைத்தான் அவர் விடுக்கின்றார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை துரும்புச் சீடாகப் பயன்படுத்தி காலஅவகாசத்தைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்துக்கு கடினமானதாக இருக்கப்போவதில்லை. மைத்திரி - ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை சர்வதேச சமூகத்துக்கு உள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு உள்ளது. 2015 இல் ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியது. அனுசரணையை வழங்கியதன் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்பாக தன்னை ஒரு படி உயர்திக்கொண்டது. இதிலும் ஒரு இராஜதந்திரம் இருந்தது. தாமும் அனுசரணை வழங்குவதற்குத் தயாராகவிருப்பதைக் காட்டி பிரேரணையின் காரத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு பெருமளவுக்கு வெற்றியும் பெற்றது. இப்போது மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது பிரேரணயின் உள்ளடக்கத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவும். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கையாளும் இராஜதந்திரம் மேற்கு நாடுகளை மயக்கிவிடுகின்றது. ஆக, பொறுப்புக் கூறல் என்பது காணாமல் போகப் போகின்றதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது.

நிரந்தரத் தீர்வு என்பது பொறுப்புக் கூறலிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். மீள நிகழாமைக்கு அடிப்படையாக இருக்கப்போவது பொறுப்புக்கூறல்தான். மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதன் மூலமாகவே நிரந்தமான தீர்வை உருவாக்க முடியும். அதற்கான கள நிலை மட்டுமல்ல, மன நிலையும் இங்கு இல்லை. அதேவேளை சந்திரிகா குமாரதுங்க சொல்லிக்கொள்வது போல அரசியலமைப்பாக்க முயற்சிகள் மூலமாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் நிலை உள்ளதா? 13 ஆவது திருத்தத்துக்கு மேலே செல்ல இரு பிரதான கட்சிகளும் தயாராகவில்லை. அதிலுள்ள பொலிஸ், காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும் அவர்கள் பின்நிற்கின்றார்கள். ஏற்கனவே உள்ள பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற விடயங்களை மாற்றிக்கொள்ளவும் அவர்கள் தயாராகவில்லை. இனநெருக்கடிக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பில் எதுவும் வரப்போவதில்லை என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆக, எதுவுமே இல்லாத அரசியலமைப்பாக்க முயற்சியைக் காட்டி பொறுப்புக்கூறலலிருந்து தப்பித்துக்கொள்ள அரசு முற்படுகின்றது. "அதுவும் இல்லை; இதுவும் இல்லை" என்ற நிலைக்கு தமிழர்களை அரசாங்கம் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்பதைத்தான் சந்திரிகாவின் கருத்துக்கள் உணர்த்துகின்றன!

(19-02-2017தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)

No comments:

Post a Comment