Wednesday, March 1, 2017

இதற்காகத்தான் வாக்களித்தோமா?

வடமாகாண சபை செயற்படத் தொடங்குவதற்கு முன்னதாகவே சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளிடையேயான முரண்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. முலமைச்சரின் பதவியேற்புக்கு கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் பலரும் வரவில்லை. அதேபோல அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதிலும் கட்சித் தலைவர்கள் பலர் பங்குகொள்ளவில்லை. நிகழ்வை அவர்கள் புறக்கணித்தார்கள். கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் முன்பாக பதவியேற்க மறுத்து தனியாக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். இதன்மூலம் வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவுள்ள நிலையில் அதற்குள்ளேயே ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி போன்று செயற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்து அதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மக்கள் கடந்த இரண்டு வாரகாலமாக அங்கு இடம்பெறும் குத்துவெட்டுக்களால் அதிர்ந்துபோயுள்ளார்கள். இதற்காகத்தான் வாக்களித்தோமா என்ற கேள்வியை எழுப்பாத வாக்காளர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன.

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இருளுக்குள் இருக்கும் மக்களுக்குத் தொலைவில் தெரியும் ஒரு ஒளிக்கீற்றாகத்தான் மாகாண சபை உருவாகியது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட நிலை ஒருபுறம். மாகாண சபைகளுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற சிங்களத் தேசியவாதிகளின் கூக்குரல் மறுபுறம். இதற்கு மத்தியிலும் போரால் சிதைந்துபோயுள்ள வடக்கு மக்களின் பிரமாண்டமான தேவைகளை இந்த மாகாண சபை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்போகின்றது என்ற கேள்வி எழாமலில்லை. போரினால் அனைத்தையும் இழந்து மீள்குடியேற்த்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கள். காணாமல்போன உறவுகளைத் தேடியலையும் மக்களின் வேதனைகள். குடும்பத் தலைவரை இழந்து வாழ்வாதாரத்துக்காக தினசரி போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள். விதவைகள், அங்கவீனர்கள். இவர்களுடன் முன்னாள் போராளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என ஏராளமான பிரச்சினைகள் மாகாண சபையின் முன்பாக உள்ளன. இவை அனைத்துக்கும் நியாயமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வை மாகாண சபை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன்தான் தமிழர்கள் பாரியளவில் வாக்களித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பாகத்தான் வட மாகாண சபை அமையப்பெற்றிருக்கின்றது. உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள், நீண்டகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலையில் மாகாண சபை உள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பதவியேற்ற உடன் வெளியிட்ட அறிக்கையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையைத்தான் தமது வாக்குகளின் மூலம் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை விட மாகாண சபைத் தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் பங்குகொண்டு வாக்களித்தது இந்த நம்பிக்கையில்தான். தமக்கு உறுதியான - கௌரவமான ஒரு எதிர்காலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். நம்பிமானார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான ஒரு வெற்றியை மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள். மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப்போகின்றது?

இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்காக, அவர்கள் முன்னெடுத்த பிரசாரத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள். கூட்டமைப்பு என்பதற்காகத்தான் அந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. கூட்டமைப்பிலுள்ள தனிப்பட்ட கட்சிகளை அடையாளம்கண்டு அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் பொது வேட்பாளராக களமிறங்கிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் எவ்வாறு அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது? கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட அடையாளங்களை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்திருந்தார்கள். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் கூட, தனிப்பட்ட அடையாளங்களைக் கைவிட்டு கூட்டமைப்பு என்ற ஒரே அடையாளத்துக்குள் செயற்படுவதற்கு அதிலுள்ள கட்சிகள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தும் ஒற்றுமை தேர்தல் முடிவடைந்ததும் சிதைநதுபோய்விடும் நிலைதான் தொடர்கின்றது.

பொது நலன்களை முன்னிலைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட கட்சி நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் வாக்களித்த அனைவருக்கும் எழுகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வாரகாலமாக அமைச்சர் பதவிகள் தொடர்பில் இடம்பெற்ற இழுபறி இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. போரால் சிதைந்போயுள்ள ஒரு பிரதேச மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக கட்சி நலன்களை முன்னிலைப்படுத்துவதாகவே இந்த இழுபறிகள் அமைந்திருந்தன. கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருந்தாலும் அதில் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் தமது நலன்களைப் பாதிப்பதாக மற்றைய கட்சிகள் கருதுகின்றன. தம்மைப் பலவீனப்படுத்திவிட்டு கூட்டமைப்பு என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலையை உருவாக்க அந்த கட்சி முயல்வதாக ஏனைய கட்சிகளின் தலைலவர்கள் குமுறுகின்றார்கள். இதனால் மற்றைய கட்சிகள் ஒருவித தற்காப்பு நிலையிலேயே எப்போதும் உள்ளன. கூட்டமைப்புக்குள் ஒரு முறுகல் நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம். கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக ரீதியாகச் செயற்படுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளாதவரையில் இந்த நிலை தொடரத்தான் போகின்றது. இதற்காகத்தான் வாக்களித்தோமா என மக்கள் பெருமூச்சு விடும் நிலையை கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புவோம்!


(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்:2013-10-13)

No comments:

Post a Comment