காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் அரசாங்கத்துக்கும்
இடையில் வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு எதுவுமின்றி
முடிவடைந்திருக்கின்றது. தோல்வியில் பேச்சுக்கள் முடிவடைந்திருப்பது அடுத்த கட்டம்
என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின்
மீதான நம்பிக்கையை முற்றாக இழந்திருக்கின்றார்கள். இது வெளிப்படையாத் தெரிகின்றது.
அதனால்தான் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் வவுனியாவில் ஆரம்பித்தார்கள்.
அலரி மாளிகைப் பேச்சுக்களில் ஓரளவுக்காவது நம்பிக்கை வைத்தார்கள். உண்ணாவிரதத்தை இடைநிறுத்தி
கொழும்புக்கு அவர்கள் வந்தது அந்த நம்பிக்கையில்தான். அலரி மாளிகை பேச்சுக்களும் இப்போது
தோல்வியில் முடிந்திருக்கின்றது.
போர்க்காலத்தில் உருவான இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை,
போரின் முடிவுடன் தீவிரமடைந்தது. 30 ஆயிரம்
பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சொல்கின்றது. இதில் பெரும்பாலானவர்கள்
படையினரிடம் சரணடைந்தவர்கள், அல்லது கைதானவர்கள். மேலும் சிலர் கடத்தப்பட்டு காணாமல்
போகச்செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர்
பட்டியலில் உள்ள சிலர் ஆயுதப் படையினரால்தான் கடத்தப்பட்டிருந்தார்கள். இதனை நீதிமன்ற
விசாரணைகள் கூட வெளிப்படுத்திவருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் படையினரே
பின்னணியில் இருந்துள்ளார்கள் எனக் கூறுவதற்கு இதனைவிட மேலும் பல ஆதாரங்கள் உள்ளன.
இந்த நிலையில், படையினரைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற
கேள்வியைத்தான் அலரிமாளிகைப் பேச்சுக்களும் எழுப்புகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை விசாரணை செய்வதற்கு பல
குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும் அலரி
மாளிகைப் பேச்சுக்களின் போது அரசாங்கத் தரப்பால் சொல்லப்பட்டது. இது தொடர்பில் ஏற்கனவே
விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைகள் நடைபெற்றன. அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த அறிக்கைகளும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டன. இவ்வளவுக்குப் பின்னரும் "குழுக்கள்
அமைக்கப்பட வேண்டும். கால அவகாசம் தேவை" என அவராங்கம் சொல்லிக்கொள்கின்றது. இது
வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் காலங்கடத்தும்
அரசாங்கத்தின் உபாயங்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்கனவே விரக்தியடைந்திருக்கின்றார்கள்.
மீண்டும் கால அவகாசத்தை அரசாங்கம் கேட்டபோதே அவர்கள் சீற்றமடைந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் படையினர் சம்பந்தப்பட்டுள்ளார்கள்
என்பது அரசாங்கத்துக்குத் தெரியாததல்ல. அது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கச் சென்றால்,
"போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோரை அரசாங்கம் காட்டிக்கொடுக்கின்றது" என்ற
குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். அதனைத்தான் ராஜபக்ஷ அணியினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
உள்நாட்டு அரசியலுக்கு அது அவர்களுக்குத் தேவையாகவுள்ளது. மைத்திரியை வீழ்த்துவதற்கு
அவர்களிடம் இருக்கின்ற ஒரு துரும்புச் சீட்டு அது. அதனால் என்ன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும்,
இந்த விவகாரத்தில் அரசாங்கம் இறங்கிவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. காலத்தைக்
கடத்துவதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய
தகவல் எதுவும் தெரியவரவில்லை என இந்தக் குழுக்கள் கையை விரிப்பதற்கு அப்பால் எதுவும்
நடைபெறப்போவதில்லை.
அதனால்தான், சர்வதேச விசாரணையைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக
உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்
தொடர் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனைக் கவரும் வகையில் இந்தப்
போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவர்களின் திட்டம் எனத் தெரிகின்றது. ஜெனீவாவில் கொடுத்த
வாக்குறுதிகள் எதுவுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து
மேலும் அழுத்தங்கள் வரும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லை. மைத்திரி - ரணில்
அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகள் தயாராக இல்லை என்பதும் தெரிகின்றது.
இதனைப்பயன்படுத்தி மேலும் இரு வருடகால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கம்
எனவும் சொல்லப்படுகின்றது.
இவற்றைப் பார்க்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின்
ஆதங்கம் எந்தளவுக்குக் கவனத்தைப் பெறும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். போரில்
இடம்பெற்ற மிகப்பெரிய மனிதாபிமானப் பிரச்சினை காணாமல் ஆக்கப்படுதல்தான். அவர்களின்
உறவினர்களின் துயரம் அளவிட முடியாதது. புறக்கணிக்க முடியாததது. தமது உறவுகளுக்கு என்ன
நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது. அது அவர்களுக்குத்
தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், யாரால், எப்போது எதற்காகக்
கொல்லப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கான நீதி விசாரணை வேண்டும்.
அதற்குரிய நட்டவீடு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு விசாரணை ஒன்றின் மூலம் அவை நடக்கும்
என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால்தான் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை
உறவினர்கள் சொல்கின்றார்கள். அலரி மாளிகைப் பேச்சுக்களின் முடிவும் இதனைத்தான் உணர்த்துகின்றது.
(ஞாயிறு தினக்குரல் 2017-02-12)
No comments:
Post a Comment