Tuesday, November 29, 2016

'நம்ப' நடக்கும் கூட்டமைப்பு...


- சபரி-

"இணக்க" அரசியலின் உச்சத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு சென்றிருக்கின்றார் சம்பந்தன் ஐயா. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் விஷேட கவனம் செலுத்தப்படவில்லை என கடந்த ஆறு - ஏழு வருடங்களைப் போலவே இவ்வருடமும் கூட்டமைப்பு சபையில் முழங்கியது. ஆனால் வாக்கெடுப்பு வந்தபோது கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரது கைகளும் உயர்ந்தன.

பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தால் நாம் எப்படி ஊர் செல்ல முடியும்? மக்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? என தலைமையைப் பார்த்து கேள்வி எழுப்பியவர்களும் இறுதியில் ஆதரவாகக் கைகளை உயர்த்தியதைத்தான் காண முடிந்தது. வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கூட கூட்டமைப்பினரிடம் எடுபடவில்லை. ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் இறுதியில் உடன்பட்டார்கள்.

கூட்டமைப்பு பிரமுகர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "நாம் உண்மையில் பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கவே வாக்களித்தோம்" என உண்மையைப் போட்டுடைத்தார். "பட்ஜெட்டுக்கு என்றால் நாம் ஆதரவாக வாக்களித்திருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இதில் எந்த நிவாரணமும் இல்லை. ஆனால், அரசுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது" என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தற்போது நடபெற்றுவருகின்றது. ஆறு உப குழுக்களின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. பிரதான குழுவான வழிநடத்தல் குழுவின் அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வை இந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமை எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், அரச தரப்புக்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காகவே கூட்டமைப்பினர் பட்ஜெட்டுக்கு கைகளைத் தூக்கி ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

"நம்பி நட" என்பதை விட, "நம்ப நடப்போம்" என்ற நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை இப்போது காய்களை நகர்த்தியிருக்கின்றது. அரச தரப்புக்கும் இது பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்தப் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை ஒன்று அரசாங்கத்துக்கு அப்போது இருந்ததுள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தமக்கு உள்ளது என்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்தப் பலம் உள்ள நிலையிலேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் மறுநாள் காலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிலிருக்கக்கூடிய அரசியல் முக்கியமானது. பலவீனமான நிலையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது.

இதன் அடுத்த காட்சி டிசெம்பர் 10 ஆம் திகதி காலை அரங்கேறவுள்ளது. அன்றுதான் வழிநடத்தல் குழுவின் (இடைக்கால) அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இதில்தான் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான அரசியல் ஒன்றுள்ளது. அன்று மாலைதான் பட்ஜெட் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

முதலாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது, 'நம்ப நடக்க வேண்டும்' என கூட்டமைப்பு முற்பட்டது.  அதற்கான பிரதியபகாரமாக டிசெம்பர் 10 ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் "அரசாங்கமும் நம்ப நடக்கிறதா?" என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

டிசெம்பர் 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இடைக்கால அறிக்கை வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமை இந்த அறிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அன்று மாலை நடைபெறப்போகும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் பிரதிபலிக்கும்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதியை சம்பந்தன் ஐயா தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். "நாங்கள் நம்ப நடக்கிறோம். நீங்களும் நம்பி நடவுங்கள்" என்பதுதான் இதில் வெளிப்படுத்தப்பட்ட செய்தி!

"2016 இல் தீர்வு" என ஐயா சொல்லிவந்தது உண்மையாகப்போகின்றதா அல்லது அது வெறும் ஊகம்தானா என்பதை டிசெம்பர் 10 இல் உலகம் அறிந்துகொள்ளும். கூட்டமைப்பின் எதிர்காலமும் இந்த அறிக்கையில்தான் தங்கியுள்ளது.

No comments:

Post a Comment