Sunday, December 18, 2016

18 அகதிகள்

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளில் 18 பேர் வியாழக்கிழமை விமானம் மூலமாக இலங்கை திரும்பியிருக்கின்றார்கள். இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற 1990 களின் ஆரம்பத்தில் தமிழகத்துக்கு படகுகள் மூலமாகச் சென்று தஞ்சமடைந்தவர்களே இவ்வாறு திரும்பியிருக்கின்றார்கள். இவர்கள் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலுள்ள சுமார் 100 முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஈழத் தமிழ அகதிகளும், தனிப்பட்ட வீடுகளில் 40 ஆயிரம் வரையிலானவர்களும் இருக்கும் நிலையில் வெறுமனே '18' அகதிகள் நாடு திரும்புகின்றார்கள் என்பதிலுள்ள "செய்தி" முக்கியமானது. அதுவும் போர் முடிவுக்கு வந்து ஏழரை ஆண்டுகள் சென்றுள்ள நிலையில் இவ்வாறான நிலை காணப்படுவது, பெரும்பாலான அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என்பதைத்தான் உணர்த்துகின்றது. இந்த நிலைமை ஏன் என்பதையிட்டு ஆராயவேண்டிய கடப்பாடு சமூகநலன்கருதிச் சிந்திக்கும் அனைவருக்கும் உள்ளது.

தமிழகத்தில் கால் நூற்றாண்டாக வாழும் ஈழத் தமிழர்களை சட்டவிரோதக் குடிகளாகத்தான் இந்திய அரசு பார்க்கிறது. அதனால்தான் நெருக்கடிக்குள் அகதிகளை வாழ நிர்ப்பந்திக்கிறது. அகதி என்ற சொல்பதம் நடைமுறை நிர்வாகத்துக்காகவும் உலகத்துக்குக் காட்ட மட்டுமே பயன்படுகிறது. அகதிகள் என்று அழைக்கப்படுபவர்களை இந்திய அரசு நடத்தும்முறை சர்வதேச நியமங்களை மீறுவதாகவும், அடிப்படை மனித உரிமை மீறும் வகையில் இருப்பதாக நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றது. தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் தஞ்சமடைந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு உரிய முறையில் கவனிக்கப்பட்டார்கள். பராமரிக்கப்பட்டார்கள். ஆனால், பின்னர் அந்த நிலைமை மாற்றமடைந்தது. ஈழத் தமிழ் அகதிகள் "வேண்டப்படாதவர்களாகவே" பார்க்கப்பட்டார்கள். ராஜீவ் காந்தி தமிழகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டது உட்பட வேறு சில சம்பவங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், தமிழகத்திலேயே இருப்பது என இந்த அகதிகள் முடிவெடுத்திருப்பதற்குக் காரணங்கள் உள்ளன.

1983 முதல் தமிழகத்துக்கு நான்கு கட்டங்களில் 2,80,000 ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றிருக்கின்றார்கள். பல கட்டங்களாக நாடு திரும்பியவர்கள் போக, இன்று 25 மாவட்டங்களில், 107 முகாம்களில் 60 ஆயிரத்துச் சொச்சம் அகதிகள் வாழ்கிறார்கள். இதனைவிட வாடகை வீடுகள் அல்லது சொந்த வீடுகளில் 40 ஆயிரம் வரையிலான ஈழத் தமிழர்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் வருகை ஆரம்பித்த 33 ஆண்டுகளில் போர் குறித்து தமிழகத்தில் பேசப்பட்ட அளவு, போராட்டங்கள் நடந்த அளவு அகதிகள் குறித்து கொஞ்சம்கூட பேசப்படவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக போர் முடிந்தால் அகதிகள் பிரச்னை தானாகத் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதைச் சொல்லலாம். ஆனால், இன்று போர் முடிவுக்கு வந்து ஏழரை வருடங்கள் சென்றுவிட்டது. தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் பேரில் 18 பேர், 20 பேர் திரும்பிவருகின்றார்கள் என்ற செய்திகள் மட்டும்தான் மாதத்துக்கு ஒரு தடவை வருகின்றது. பாரியளவில் அகதிகள் திரும்பிவரும் நிலை காணப்படாமைக்கு காரணம் என்ன?

இந்தியாவில் தஞ்சமடையும் திபேத் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள் எதுவும் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. அதனைவிட ஈழத் தமிழ் அகதிகளுக்குக் கெடுபிடிகளும் அதிகம். அதனால்தான் அவர்கள் 'வேண்டப்படாதவர்களாக' பார்க்கப்படுகின்றார்கள் எனக் குறிப்பிட்டோம். ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது முன்வைக்கப்பட்டாலும், அதனை ஒருபோதும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும் ஒரு விடயத்தில் மட்டும் இந்தியா உறுதியாகவுள்ளது. தஞ்சமடைந்துள்ள அகதிகள் எவரையும் பலாத்காரமாகத் திருப்பி அனுப்புவதில்லை என்பதுதான் அது. அதேவேளையில் திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகாரியலத்தின் மூலமாக அவர்களுக்கு விமானப் பயணச் சீட்டு உட்பட பல வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் துதரகமும் தாயகம் திரும்ப விரும்புபவர்களின் பயண ஒழுங்குகளை இலகுவாக்குவதற்கான பல ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.

இரு தசாப்தங்களுக்கு மேலாக வசதிகளற்ற அகதி முகாம்களில் இருக்கும் கொடுமைக்கு மேலாக, கெடுபிடிகளுக்கு மத்தியில் அந்திய மண்ணில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள், இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தாயகம் திரும்புவதில் அக்கறையற்றவர்களாக இருப்பது ஏன் என்பது ஆராயப்பட வேண்டும். அகதிகளாகவுள்ளவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் கனவுடன் அல்லது திட்டங்களுடன் காத்திருக்கின்றார்கள். வேறு சிலர் ஐரோப்பாவிலுள்ள தமது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மேலும் சிலர் தமது பிள்ளைகளைக் தமிழகக் கல்லுரிகளில் சேர்த்திருப்பதால் அதனைக் குழப்ப விரும்பாமல் இருக்கின்றார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பொறுத்தவரையில் அன்றாட சீவியத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியவர்களாகவே உள்ளார்கள். அதாவது, நிரந்தர வருமானத்தைத் தரக்கூடிய வேலையில் இருப்பவர்கள் மிகவும் குறைவு. இவ்வாறானவர்களில் பெரும்பாலானவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்த அவல-  அகதி வாழ்வு எனச் சலித்துப்போனவர்களாக இவர்கள் இருக்கின்றர்கள்.

தாயகம் திரும்புவதற்கான ஊக்குவிப்புக்கள் இவ்வாறானவர்களில் சிலரைத்தான் கவர்கின்றது. இருந்த போதிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தாயகம் திரும்புவதிலும் தயக்கத்தையே காட்டுகின்றார்கள். தாயகம் திரும்பிய பின்னர் தமது வாழ்க்கை எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இவர்களுடைய தயக்கத்துக்கு அல்லது அச்சத்துக்குக் காரணம். வலிகாமம் வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை இராணுவம் முற்றாக விடுவிக்கவில்லை. வீடமைப்புத் திட்டங்கள் இழுபறியிலேயே உள்ளன. இதனைவிட வாழ்வாதாரத்துக்கான தொழில்வாய்ப்புக்கான உத்தரவாதமற்ற நிலை. பிள்ளைகள் எவ்வாறு கல்வியைத் தொடர்வது என்ற கேள்வி. வலி வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் பலர் யாழ்ப்பாணத்தில் இன்னும் முகாம்களில்தான் உள்ளார்கள். இந்த நிலையில் எந்த நம்பிக்கையுடன் தாம் தாயகம் திரும்புவது என்பதுதான் இவர்கள் மனதை அரிக்கும் கேள்வி. அதாவது, தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பக்கூடிய கள நிலை இன்னும் முற்றாக ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் இந்த நிலைக்கு அடிப்படை. 

ஒரு லட்சம் அகதிகளைப் பராமரிப்பது என்பது இந்தியாவுக்குப் பெரிய விடயமல்ல. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு லட்சம் என்பது பெரிய விடயம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குறைவடைந்து செல்லும் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்குக்கூட இது அவசியம். அதனால், இலங்கை அரசாங்கத்தை விட இதில் அதிகளவு அக்கறை எடுக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளே. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் இதற்காகச் செய்வது என்ன? ஏழரை வருடமாக அரசியல் செய்யும் கூட்டமைப்பினர் தமக்கு இருக்கக்கூடிய சமூகப் பொறுப்பை மறந்து சொந்த அரசியல் நோக்கங்களுடன் மட்டும்தான் செயற்படுகின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். தமிழகத்திலுள்ள அகதிகளைத் தாயகம் கொண்டுவர வேண்டும், அவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்பதில் திட்டமிட்ட செயற்பாடு எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை. அதேவேளையில் மீள்குடியேற்ற அமைச்சும் இந்தவிடயத்தில் தோல்வியடைந்திருப்பதையே காணமுடிகின்றது. ஒரு லட்சம் அகதிகள் உள்ள இடத்திலிருந்து 18 பேர் தாயகம் திரும்பினார்கள் என்ற செய்தி வெளிவருவதே மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்களிலுள்ள தோல்வியைத்தான் காட்டுகின்றது.

(ஞாயிறு தினக்குரல் 2016/12/18)

No comments:

Post a Comment