Wednesday, November 9, 2016

புத்தர் சிலைகள்: ஆக்கிரமிப்பின் சின்னங்களாக..!

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அங்கு ஆரம்பமான பதற்ற நிலை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பாரம்பரியமாக அங்கு வசித்துவரும் தமிழ் மக்கள் தமது இருப்பு கேள்விக்குறியாகிடுவேமா என்ற அச்சத்துடன் உள்ளார்கள். பௌத்த மக்கள் எவரும் வசிக்காத அந்தப் பகுதியில் திடீரென புத்தர் சிலை கொண்டுவந்து வைக்கப்பட்டதன் உள்நோக்கம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் இவ்வாறு தமிழ், முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலை வைக்கப்படுவது இதுதான் முதல் தடவையுமல்ல. இனமுரண்பாட்டையும், நம்பிக்கையீனங்களையும் அதிகரிக்கும் இவ்வாறான சம்பவங்களை நல்லாட்சி அரசாங்கம் எதற்காக தொடர்ந்தும் அனுமதித்துக்கொண்டிருக்கின்றது?

புத்தரின் போதனைகளுக்கோ, அவரது சிந்தனைகளுக்கோ தமிழர்கள் எதிரானவர்களல்ல. அதேபோல புத்தரின் போதனைகளும் எந்த ஒரு இனத்தையோ மதப் பிரிவையோ இலக்காகக் கொண்டதுமல்ல. அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் புத்தரின் முதலாவது போதனை. ஆனால், புத்தர் சிலைகள் இலங்கையில் இப்போது சிங்கள - பௌத்த ஆக்கிரமிப்பின் சின்னங்களாகிவிட்டன. அதனால்தான் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. புத்தர் சிலைகள் முதலில் வைக்கப்படும், அதனையடுத்து அந்த இடத்தில் பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்படும். அதனைப் பாதுகாக்க பிக்குகள் வருவார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு படையினர் வருவார்கள். இறுதியில் அது சிங்களக் குடியேற்றப் பகுதியாகிவிடும். இதுதான் இலங்கையில் நடைபெறுவது. இப்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்துக்குக் காரணமும் அதுதான்.

கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க் கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது. இப்போது அந்தப் பகுதியில் தியான மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பிக்குகள் நிலம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இது வரையில் இப்பிரச்சிக்கு சுமூகமான முறையில் தீர்வு ஒன்று காணப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் ஆத்திமோட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்னர் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் அதனையடுத்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட பகுதி தமிழ் மக்கள் இதனால் அச்சமடைந்த நிலையில் இருக்கின்றர்கள். அதனையடுத்து கிளிநொச்சி மற்றும் வன்னியின் சில பகுதிகளிலும் இவ்வாறு புத்தர் சிலைகள் அவசரம் அவசரமாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இப்போது அம்பாறை, மாணிக்கமடு கிராமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. பௌத்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம். அந்த மக்களின் வழிபாட்டுக்கு அது அவசியமும் கூட. ஆனால், பௌத்த மக்கள் இல்லாத பகுதிகளில் இவ்வாறு கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் புத்தர் சிலைகளைக் கொண்டுவந்துவைப்பது நிச்சயமாக ஆக்கிரமிப்பு நோக்கத்துடன்தான் என தமிழ் முஸ்லிம் மக்கள் கருதுவதில் நியாயமுள்ளது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் சொல்கின்றது. புத்தர் சிலைகளை வைத்து மற்றைய இனங்களின் மீது ஆக்கிரமிப்பைச் செய்துகொண்டிருக்கும் நிலையில் நல்லிணக்கம் குறித்து எப்படிப் பேச முடியும். தமிழ்ப் பகுதிகளில் "புத்தர் சிலைகளை நிறுவுவது" கூட ஒருவகையான யுத்தம்தான். இந்த யுத்தத்தை அரசாங்கம் சேரடியாக நடத்தாமலிருக்கலாம். பாதுகாப்புத் தரப்பின் ஒரு பகுதியினரும், மகாசங்கத்தினரும் இந்தப் "போரை" முன்னெடுப்பவர்களாக இருக்கலாம். ஆனால், இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை தமக்கு இல்லை என அரசாங்கம் சொல்லிவிட முடியாது. இதனைத் தூண்டி விடுவதற்கோ அல்லது இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ வேண்டிய வல்லமை அரசாங்கத்துக்கு நிச்சயமாக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்த அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது என்பதுதான் இன்று எழும் கேள்வி!

இலங்கை பல்லின சமூகத்தைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருந்தாலும் கூட, அரசியலமைப்பில்  பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றைய மதங்கள் இரண்டாம் பட்சம்தான். அரசியலமைப்பின் 9 வது பிரிவில், "இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படல் வேண்டும் என்பதோடு, பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்" எனக்கூறப்பட்டிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பும் இதனையே பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் மாற்றங்களைக் கொண்டுவருவது தமக்கு ஆபத்தானதாகிவிடலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்குள்ளது. இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்கும் இந்தத் திட்டத்துக்கு அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முதன்மை இடமும் கூட ஒரு காரணம். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான துணிச்சல் அரசாங்கத்துக்கு வராத வரையில், புத்தர் சிலைகள் தமிழ்ப் பகுதிகளில் வைக்கப்படுவதையும், சிறுபான்மையினத்தவர்கள் அச்சத்துடன் வாழ்வதையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது!

-ஞாயிறு தினக்குரல்: 06-11-2016

No comments:

Post a Comment