Sunday, November 20, 2016

பிக்குககள் விடயத்தில் ஜனாதிபதி உத்தரவு செயலுருப் பெறுமா?

நாட்டுக்குள் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யமின்றி, இனமத பேதங்கள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கின்றார். சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மட்டக்களப்பு மங்களாராம சுமனரத்தின தேரர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் ஆராயப்பட்ட போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததார்.

மங்களாராம சுமனரத்தின தேரரின் செயற்பாடுகள் சிறுபான்மையின மக்களுக்கு பெருமளவுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்குவது இந்த நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கின்றது. இது தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் கடுமையாக உத்தரவிட்டிருக்கின்ற போதிலும், அரசாங்க இயந்திரங்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

இனவாதம் பேசி - வன்முறைகளுக்கு வித்திடும் சிங்கள - பௌத்த இனவாதிகளுக்கு எதிராகச் செயற்படுவதில் பாதுகாப்புத் தரப்பினர் எப்போதும் மெத்தனப் போக்கையே பின்பற்றிவருகின்றார்கள். ஒருவகையில் அரசின் கொள்கைகளில் ஒன்றாக இனவாதம் கருதப்படுவதும் அதற்கு ஒரு காரணம். அதனால், சிங்களத் தலைவர்களும், மதத் தலைவர்களும் இனவாதம் பேசுவதை வழமையான ஒன்றாகவே பாதுகாப்புத் தரப்பினர் எடுத்துக்கொள்கின்றார்கள். சுமனரத்தின தேரர் இனவாதம் பேசி, அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து ரசிக்க மட்டுமே பாதுகாப்புத் தரப்பினரால் முடிந்துள்ளது. அதனைத் தடுப்பதற்கோ இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தவோ அவர்கள் எதனையும் செய்யமுனையவில்லை.

இலங்கையின் அரசியல் இனவாத அரசியலாகத்தான் இருக்கின்றது. அரசாங்க இயந்திரங்கள் அனைத்தும் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டன. அதிலிருந்து விலகிச் செல்வதற்குத் தயங்கும் நிலை இன்னும் தொடரத்தான் செய்கின்றது. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் பொதுபல சேனா வளர்க்கப்பட்டது. அதன் தலைவர் ஞானசார தேரர் பௌத்த மக்கள் மத்தியில் கதாநாகனாக்கப்பட்டார். பௌத்த மதத்தின் காவலாகத் தன்னைக் காட்டிக்கொண்ட அவர், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்துச் செயற்பட்ட போது பாதுகாப்புத் தரப்பினர் மௌனமாகவே இருந்தார்கள். மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைச் சிதைப்பதற்கு எதிராக என பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டும் கூட எதுவும் நடந்துவிடவில்லை. அது வெறுமனே கண்காட்சிப் பிரிவாக மட்டுமே இருந்தது.

முன்னைய ஆட்சியின் நிலைதான் இப்போதும் எழுகிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாத வகையில் எழுகின்றது. இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையில் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் அப்போது விளக்கமளித்தார். புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

கைகளில் சட்டம் இருக்கின்றது. நீதி அமைச்சரே அதனை உறுதிப்படுத்தியுமிருக்கின்றார். இனவாதத்தைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கடுமையாக எச்சரித்தும் இருக்கின்றார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் - உத்தரவுகள் எழுத்திலும், பேச்சிலும் என்பதைத் தாண்டி செயலுருப் பெறுவதாகத் தெரியவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்பைக் கொண்டிருக்கும் இலங்கையில், மங்களாராம சுமனரத்தின தேரர் போன்றவர்கள் தம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனவும், அராங்கம் தன்னைப் பாதுகாக்கும் கடமைப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும் கருதுவதில் வியப்பில்லை. அதனால்தான் அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றார்கள்.

அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதில் ஆட்சேபனை இல்லை. அவர்களுடைய அந்த சுதந்திரம் சிறுபான்மையினரின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதாக இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். போர் முடிவுக்கு வந்து நல்லிணக்கம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்கின்றது. நல்லிணக்கம் என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் சிறுபான்மையினருக்கு எதிரான பாரிய மறைமுகத் தாக்குதல் ஒன்று இடம்பெறுவதைத்தான் அண்மைக்காலச் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. புத்தர் சிலைகளை வைப்பது, திட்டமிட்ட முறையிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமான ஆக்கிரமிப்பு! இவற்றின் தொடர்ச்சியாகத்தான் சுமனரத்தின தேரரின் விவகாரத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பாக அரசாங்கம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. இந்த இனவாதச் செயற்பாடுகளில் அரசும் ஒரு பங்காளி என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க முடியும்!

ஞாயிறு தினக்குரல்: 2016-11-20

No comments:

Post a Comment