Sunday, August 7, 2016

பாத யாத்திரை: ஜே.ஆர். முதல் மகிந்த வரை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொது எதிரணியின் "ஜன சட்டன" என்ற பாத யாத்திரை கண்டியிருந்து ஆரம்பமாகி கொழும்பை நோக்கி புறப்பட்டிருப்பதுதான் இந்த வாரத்தின் பிரதான செய்தி. நீதிமன்றம் விதித்த தடைகளையும் தாண்டி பாத யாத்திரை புறப்பட்டிருக்கும் நிலையில் அதனுடைய அரசியல் முக்கியத்துவம் என்ன ? அது இந்த நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. மகிந்த ராஜபக்‌ஷ தரப்பைப் பொறுத்தவரையில், இந்த பாத யாத்திரை தமக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றி என்று சொல்லிக்கொள்கின்றார்கள். அரச தரப்பைப் பொறுத்தவரையில், இவ்வாறான யாத்திரைகள் மூலமாக அரசாங்கத்துக்குச் சவால்விட முடியாது எனச் சொல்லிக்கொள்கின்றது.

மைத்திரிபால - ரணில் ஆட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, அரசாங்கத்துக்கு சவால் விடுவதற்குக் காத்திருந்த பொது எதிரணி, முக்கியமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பாதயாத்திரையை ஆரம்பித்திருக்கின்றது. போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்டுவந்து நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் முற்படுகின்றது என்பது இவர்களுடைய முதலாவது குற்றச்சாட்டு. புதிய அரசியலமைப்பின் மூலம் சமஷ்டியை வழங்கி நாட்டின் பிரிவினைக்கு அரசாங்கம் வழிவகுக்கின்றது என்பது இவர்களுடைய இரண்டாவது குற்றச்சாட்டு. வற் வரி அதிகரிப்பின் மூலம் மக்களுக்கு வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. இந்த மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் பாதயாத்திரைகள் என்பது புதிதல்ல. 1958 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் தலைமைப் பதவியில் கண்வைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொழும்பிலிருந்து கண்டிக்கு மேற்கொண்ட பாதயாத்திரை இலங்கையின் வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வுக்கு அடித்தளமிட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும் எனக் கோரியே இந்தப் பாதயாத்திரையை ஜெயவர்த்தன ஆரம்பித்தார். பண்டா - செல்வா ஒப்பந்தம் தனிநாட்டுக்கான முதல் அடி எனக்கூறி சிங்கள மக்களை ஜெயவர்த்தன உசுப்பிவிட்டார்.இதன் இறுதி விளைவாகத்தான் 300 பௌத்த பிக்குகள் முன்னிலையில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிளித்தெறிந்தார். இல்லையெனில் அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடி அன்றே சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டிருக்கும்.

அன்று ஜெயவர்த்தன என்னத்தைச் செய்தாரோ அதனையே இன்று ராஜபக்‌ஷ செய்கின்றார். ஜெயவர்த்தன கொழும்பில் பாத யாத்திரையை ஆமம்பித்து கண்டியை நோக்கிப் புறப்பட்டார். ராஜபக்‌ஷ கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றார் என்பதைவிட இருவரது அரசியல் இலக்குகளும் ஒன்றாகத்தான் இருந்தது. அரசியலில் ஓரங்கட்டப்பட்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகு வழியாக இனவாதம்தான் இருக்கின்றது. பண்டாரநாயக்கவும் அதனைக் கையாண்டார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் அவர் தனிச்சிங்களச் சட்டத்தை 24 மணி நேரத்தில் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியுடன் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலைச் சந்தித்தார். ஜெயவர்த்தனவும் அதற்குச் சளைத்தவரல்ல. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிளித்தெறியச் செய்தார். அந்த வரலாறு இப்போதும் தொடர்கிறது என்பதைத்தான் ராஜபக்‌ஷ தரப்பினர் ஆரம்பித்துள்ள பாத யாத்திரை உணர்த்துகின்றது.

ராஜபக்‌ஷக்களின் பாத யாத்திரையில் 'வற்' என்பது ஒரு கோஷமாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் கூட, கவர்ச்சிகரமாக முன்வைக்கப்படுவது இனவாதம்தான். அதாவது, இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பது, புதிய அரசியலமைப்பு தனிநாட்டுக்கான முதற்படி என்பனதான் பிரதான கோஷங்களாக உள்ளன. சிங்கள மக்கள் இனவாதமயப்பட்டவர்களாக இருக்கின்றார்களோ இல்லையோ இனவாதத்தை 'சந்தைப்படுத்தி' அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வது இலகுவானது என்பதை சிங்களத் தலைவர்கள் படித்துள்ளார்கள். சிங்கள அரசியல் தலைவர்கள் வரலாற்றிலிருந்து படித்துக்கொண்டது இது ஒன்றைத்தான். அதுதான் அவர்களுக்குத் தேவையானதாகவும் இருந்துள்ளது. ஜெயவர்த்தன - பண்டாரநாயக்க காலம் முதல் ரணில் - ராஜபக்‌ஷ காலம் வரையில் இதனை நாம் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராதகவிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு பேச்சுக்களை  நடத்தியபோது, புலிகள் கேட்பதையெல்லாம் ரணில் கொடுக்கிறார் எனக் குற்றஞ்சாட்டி அவரது ஆட்சியை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா கவிழ்த்தார். பின்னர் சந்திரிகா தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தபோது, பாராளுமன்றத்திலேயே அதனைக் கிளித்தெறிந்து தீவைத்தார் ரணில். இவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதற்கான இலகு வழியாகவும், சிங்கள மக்களின் ஆதரவுத் தளத்தை வெற்றிகொள்வதற்கான மார்க்கமாகவும் இனவாதத்தையே சிங்களத் தலைவர்கள் பயன்படுத்தினார்கள். இப்போது அதிகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு, வழக்கு விசாரணைகளை தினசரி எதிர்கொள்ளும் ராஜபக்‌ஷக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் மத்தியில் தம்மை கதாநாயகர்களாக வெளிப்படுத்தி இழந்த செல்வாக்கை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் கைகளில் இன்றுள்ள ஒரேயொரு ஆயுதம் இனவாதம்தான்.

பண்டா - செல்வா உடன்படிக்கை கிளித்தெறியப்படாதிருந்திருந்தால், பல இனக்கலவரங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். போரால் ஏற்பட்ட இழப்புக்களையும் தவிர்த்திருக்க முடியும். அதற்குப் பின்னர் கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டோம். இரு தரப்பிலும் காணப்பட்ட தீவிரவாதப் போக்கு அழிவுக்கே காரணமாகியது. சரித்திரத்திலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான். ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் இனவாதத்தைப் பயன்படுத்துவதன் மூலமே எதிராளிகளைப் பலவீனப்படுத்த முடியும் என்பதையும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதையும்தான் சரித்திரத்திலிருந்து படித்திருக்கின்றார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவிருப்பதுடன், முற்போக்கு சக்திகள் இந்த நிலைமையை பகிரங்கப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்.

ஞாயிறு தினக்குரல் 2016/07/31

No comments:

Post a Comment