Wednesday, August 24, 2016

ஒரு வருடம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிகு வந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தக் காலச் சாதனைகள் என்ன என்ற கேள்விக்குப் பதிலைக்காணவேண்டியது அவசியமாகின்றது. சாதிக்க முடியாமல்போன விடயங்கள் என்ன? தடைக்கற்களாக வந்தவை என்ன என்பவற்றைத் தெளிவாகப் பட்டியல் போட்டுக்கொள்வதன் மூலமாகவே அதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக வரப்போகும் காலங்களுக்கான செயற்றிட்டங்களை வகுத்துக்கொள்வதற்கு இது அவசியம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருப்பது இதுதான் முதன்முறையாகும். தேசிய அரசாங்கம் என்ற நடைமுறைக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் சென்றமைக்குப் பிரதான காரணமாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷதான். மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதற்கு இணைந்து செயற்பட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. மேற்கு நாடுகள் சிலவற்றின் நிகழ்ச்சி நிரலிலும், ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமையால், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு சர்வதேசமும் உதவியது.

மகிந்த ராஜபக்‌ஷ இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தாலும் கூட, இலங்கை அரசியலில் சக்திவாய்ந்த ஒருவராக அவர் வருவதற்குக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளுடனான போரில் அவர் பெற்றுக்கொண்ட வெற்றிதான். 30 வருடமாக இடம்பெற்ற போரில் வெற்றிபெற்ற அவர், பல வருடங்களின் பின்னர் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தார். இதன்மூலமாக, சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஒரு தலைவரும் பெற்றுக்கொள்ளாத ஆதரவை அவர் பெற்றுக்கொண்டிருந்தார். தன்னை யாராலும் அசைக்க முடியாது எனக் கணக்குப் போட்ட அவர், சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கும் முயன்றார்.

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வரக்கூடிய வகையில் அரசியலமைப்பைத் திருத்தினார். அவசரமாக இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். இந்த இடத்தில்தான் எதிர்க்கட்சிகள் மிகுந்த திட்டமிடலுடன் செயற்பட்டு பொது வேட்பாளராக மைத்திரியைக் களமிறக்கி ராஜபக்‌ஷவைத் தோற்கடித்தன. ராஜபக்‌ஷ யுகம் முடிக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இருந்தபோதிலும், இனவாத சக்திகளின் ஆதரவுடன் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் ஒருவராகவே ராஜபகஷ தொடர்ந்தும் இருக்கின்றார். மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அவர் துடித்துக்கொண்டிருக்கின்றார்.

தேர்தலில் ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதற்கு சிறுபான்மையினருடைய வாக்குகளே உதவியிருந்தன. ராஜபக்‌ஷ ஆட்சியில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தேர்தலின் போது சிறுபான்மையினர் பழிவாங்கினார்கள் எனச் சொல்லலாம். அதேவேளையில், நல்லிணக்க அரசாங்கத்தில் அதீத நம்பிக்கையையும் சிறுபான்மையின மக்கள் வைத்திருந்தர்கள். ராஜபக்‌ஷ யுகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வை அவர்கள் மைத்திரியிடமும் ரணிலிடமும் எதிர்பார்தார்கள். பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்துடன் இணக்க அரசியல் ஒன்றைத்தான் செய்துவருகின்றது. அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.

நீடித்து நிலைத்துநிற்ககக்கூடிய ஒரு அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால், உடனடியான பிரச்சினைகள் பவற்றுக்கும் தீர்வைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றச் செயற்பாடுகள், காணமல் போனவர்களின் பிரச்சினை என்பவற்றுடன் போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த கடந்த ஒருவருட காலத்தில் ஒரு சில விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், நியாயபூர்வமான இந்தப் பிரச்சினைகளுக்கு முழுஅளவிலான தீர்வைக் காண்பதற்கான கொள்கைத் திட்டம் ஒன்றைக் கூட அரசாங்கத்தினால் முன்வைக்க முடியவில்லை.

ஆணைக் குழுக்களை அமைத்தல் என்ற அளவிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றதே தவிர, வெளிப்படையாகத் தெரியக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்குக்கூட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முற்படுவது மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினரின் இனவாதப் பிரச்சாரங்களுக்கு வாய்பாகிவிடும் என அரச தரப்பில் சொல்லப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்க விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது. பாராளுமன்றத்தில் அவ்வப்போது அரசாங்கத்தை விமர்சித்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிகழ்த்தும் உரைகள் அவர்களுக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்தறக்கானதாக மட்டுமே உள்ளது. அதற்கு மேல் அவர்கள் எதனையும் செய்யப்போவதில்லை.

எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்தால் முதல் வருடத்திலேயே முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டுவிட வேண்டும். அல்லது அதற்கான முதல் அடியையாவது அழுத்தமாக எடுத்துவைத்திருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இரண்டையும் செய்யவில்லை. சில அடிகளை எடுத்துவைப்பது குறித்து ஆராயப்படுவதாகச் சொல்லப்படுகின்றதே தவிர, அதுகூட செய்யப்படவில்லை. 'நல்லாட்சி' அரசின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, சிங்களக் கடும்போக்களர்களை கவர்வதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது. ராஜபக்‌ஷ சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் பிடித்துள்ள இடத்தை உடைப்பதற்கு அவர் முற்படுகின்றார். கட்சி அரசியலைப் பொறுத்தவரையில் இன்று அதுதான் அவருக்கு முக்கியமாகனது.

இந்த நிலையில் சிறுபான்மையின மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எந்த நம்பிக்கையுடன் காத்திருப்பது? சர்வதேச சமூகமும் இன்று சல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதில்தான் அக்கறையாகவுள்ளது. இந்த ஒருவருடம் போலத்தான் அடுத்துவரப்போகும் ஐந்துவருடங்களும் சென்றுவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஞாயிறு தினக்குரல் 2016/08/21

No comments:

Post a Comment