- சபரி -
இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடுமா? கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 4 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிரடியான திருப்பங்களை கட்சி சந்திக்குமா?
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் எழுப்பப்படும் பிரதான கேள்வியாக இவைதான் உள்ளன. தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலிருந்து கொழும்புக்கான பாத யாத்திரையை மேற்கொண்ட பின்னணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்திருகின்றது. இந்த நிலையில்தான் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வி வருடாந்த மாநாட்டுக்கான தயார்படுத்தல்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது.
கடந்த வருடம் (2015) ஜனவரியில் இடம்பெற்ற அதிகார மாற்றத்தையடுத்தே கட்சி பிளவுபடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுத்தான் வந்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தனியதகச் சென்று புதிய கட்சியை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும், கடந்த ஆகஸ்ட் தேர்தலை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டுதான் மகிந்த எதிர்கொண்டார். தேர்தலில் தனியாகப் போவது தற்கொலைக்குச் சமனானதாகிவிடலாம் என அவர் அஞ்சினார்.
அதிரடி நீக்கம்
இப்போது மோதல்கள் தீவிமடைந்து, மகிந்த அணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய அமைப்பாளர்கள் தமது பதவிகளிலிருந்து கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ அணியினர் தடுமாறிப் போயிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. கூட்டு எதிர்க்கட்சி யில் செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் முக்கிய அமைப்பாளர்களே இவ்வாறு அதிரடியாக ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். 40 புதிய அமைப்பாளர்களும் சுதந்திரக்கட்சிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட அமைப்பாளர்களாக 24 பேரும் தொகுதி அமைப்பாளர்களாக 16 பேரையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
கூட்டு எதிர் கட்சியில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹேலிய ரம்புக்வெல்ல , பவித்ரா வன்னியாராச்சி ,ரோஹித அபேகுணவர்தன , சீ.பீ. ரத்நாயக்க , மஹிந்த யாபா அபேவர்தன, ஜகத் பாலசூரிய , காமினி லொக்குகே மற்றும் சரத் குமார உள்ளிட்டவர்களின் அமைப்பாளர் பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனம் குருநாகல் நகரில் இடம்பெறவுள்ளது. இதற்கான தயார் படுத்தல்களில் சுதந்திர கட்சியின் ஏற்பாட்டு குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்துவரும் 40 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கட்சியின் உயர் மட்டத்தில் மகிந்த ஆதரவாளர்கள் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருப்பதை இந்தச் சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலும், மகிந்த தரப்பினர் தனியாகப் பிரிந்து செல்வார்களா என்பது இந்தத் தருணம் வரையில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலையடுத்து கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிக்கொண்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்தவை ஓரங்கட்டும் வகையிலான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவந்திருக்கின்றார். இந்தச் செயற்பாடுகள் மகிந்த அணியினருக்குச் சீற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும், தனியான கட்சி ஒன்றை அமைத்துக்கொண்டு பிரிந்து செல்வதற்கான துணிச்சல் மகிந்த தரப்பினருக்கு ஏற்படவில்லை என்பது உண்மை. தற்போதும், மைத்திரியின் அதிரடி நடவடிக்கை மகிந்தவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ள போதிலும், தனியாகப் பிரிந்து செல்வதற்கான துணிச்சல் அவருக்கு ஏற்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.
தயங்கும் மகிந்த
"தனிக் கட்சி அமைத்துக்கொண்டு போய்விடுவேன்" என்பதை ஒரு அச்சுறுத்தலுக்காக மகிந்த சொல்லிக்கொண்டாலும், அதற்கு அவர் தயங்குகின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்கு இரண்டு மூன்று காரணங்கள் உள்ளன. கட்சியை பிளவுபடுத்தியவர் என்ற பெயரை எடுத்துக்கொள்ள அவர் விரும்பாமலிருக்கலாம். இரண்டாவாக, தனக்கான ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்பதிலுள்ள தயக்கம். தனிக் கட்சியை அமைத்துக்கொண்டு செல்லும் போது தன்னுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. இறுதியாக, தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம். இதனால்தான் மைத்திரியை வழிக்குக் கொண்டுவர அச்சுறுத்தல்களை அவர் விடுத்தாலும், தனியாகச் செல்வதற்குத் தயங்குகிறார் என கருத இடமுண்டு.
மைத்திரியின் அதிரடி நடவடிக்கையையடுத்து மகிந்த ராஜபக் ஷவிற்கும் பொது எதிர்க்கட்சி எம்.பி.க்க ளுக்கும் இடையே புதன்கிழமை இரவு அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிரிஹானையிலுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் மகிந்தவுக்கு ஆதரவான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியராச்சி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 16 பேர் ஜனாதிபதியினால் நீக்கப்பட்ட புதன்கிழமையன்றே மகிந்த ராஜபக் ஷவுடனான இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மைத்திரியின் அதிரடிச் செயற்பாடுகள் மகிந்த அணியினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதையும், இதற்கான பதிலடியாக என்ன செய்வது என்பதில் அவர்கள் குழம்பிப்போயிருப்பதையும், இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியது.
இக்கலந்துரையாடலின்போது காணாமல் போனோர் தொடர்பாக அலுவலகம் அமைக்கப்படுவது மற்றும் அது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம்போன்ற விடயங்களே ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் நீக்கப்பட்டது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துவெளியிடப்பட்டது. மைத்திரியின் அதிரடிக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பதில் மகிந்த தரப்பு தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாதவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. பாதயாத்திரை எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காத நிலையில் மீண்டும் களத்தில் இறங்குவதற்கும் அவர்கள் தயங்குகின்றார்கள். அதனால்தான், காணாமல்போனோர் அலுவலகம் குறித்த பிரச்சினையை முதன்மைப்படுத்துற்கு அவர்கள் வியூகம் வகுப்பதும் தெரிகின்றது.
அதேவேளையில், கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக மகிந்த ராஜபக்ஷ கடுமையாகச் சாடியிருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கொள்கைகளை உதாசீனம் செய்வதாக மைத்திரியின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக ராஜபக் ஷ குற்றம் சுமத்தியுள்ளார். மைத்திரியின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இவ்வாறான நடவடிக்கையினால் கட்சி யின் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார். மைத்திரி பால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற் றுக்கொண்ட போதிலும், பண்டாரநாயக்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் சீற்றம்
நல்லாட்சி அரசின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, இதற்குப் பதிலளிக்கும் வகையில் கடும் தொனியில் பேசியிருக்கின்றார். வழமையாக மென்மையாக தனது உரைகளை நிகழ்த்தும் மைத்திரி, அன்றைய தினம் கடும் தொனியில் உணர்ச்சிவசப்பட்டவராக தனது உரையை நிகழ்த்திருப்பது கவனிக்கத்தக்கது. "நாட்டை கொள்ளையடித்து மோசடி செய்தவர்களுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை" என இங்கு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவர்கள் புதிய கட்சி உருவாக்கினால் இதுவரை ரகசியமாக பேணிவந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி வீதி வீதியாக சுற்றும் நிலையை உருவாக்கப் போவதாகவும் கடுமையாக எச்சரித்தார். இதன்மூலம் மகிந்த தரப்பினரின் வாயை அடைப்பதற்கு அவர் முற்பட்டிருக்கின்றார். இரகசியங்களை வெளியிடுவேன் என எச்சரித்து மகிந்த தரப்பை 'பிளாக் மெயில்' பண்ண மைத்திரி முற்படுகின்றாரா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.
இதனைவிட, அரசாங்கத்துக்கு எதிராக ராஜபக்ஷ குழுவினர் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும் வகையில் மேலும் சில விடயங்களையும் அவர் எடுத்துவிட்டார்: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் உள்ள பாதகமான விடயங்களை தானும் பிரதமரும் இணைந்து நீக்கியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிலுள்ள விடயங்களை செயற்படுத்த பாராளுமன்றத்தினூடாக ஒழுங்கு விதிகள் கொண்டு வர புதிய சரத்தொன்றை அதில் இணைத்ததாகவும் கூறினார். சர்வதேச சக்திகளுக்கு தேவையானவாறு நாட்டை ஆளப் போவதில்லை. என்று கூறிய அவர் சர்வதேச சக்திகளுக்கு தலைசாய்க்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எம்மை தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்போர் என்று குற்றஞ் சுமத்தியவர்கள் முடிந்தால் மாற்று தீர்வு யோசனையை முன்வைக்குமாறும் ஜனாதிபதி இங்கு சவால் விட்டார்.
இவை அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் ராஜபக்ஷ தரப்பினர் இருக்கவில்லை என்பது தெளிவு. கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு மைத்திரி முயல்கின்றார் என ராஜபக்ஷ தரப்பு குற்றஞ்சாட்டிக்கொள்கின்ற போதிலும், பிரிந்து செல்வதற்கான துணிச்சல் அவர்களிடம் இல்லை என்பதும் தெரிகின்றது. தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உதய கம்பன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன போன்றவர்களின் வங்குரோந்து அரசியலைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவராக மகிந்த இருக்கமாட்டார். இவர்கள் அனைவரும் தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்றார்கள் என்பது மகிந்தவுக்குத் தெரியும். இவர்களை நம்பி தனிக் கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வது இருக்கும் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கிவிடும் எனவும் ராஜபக்ஷ கருதலாம். மைத்திரியின் எச்சரிக்கயும் அவ்வாறானதாகத்தான் அமைந்திருந்தது. புதிய கட்சி தோல்வியடைந்தால், தன்னுடைய நிலை இன்னும் பரிதாபமாகிவிடும் என்பதையும், தன்னை உசுப்பேத்துபவர்கள் தப்பித்துக்கொள்வார்கள் எனவும் மகிந்த கருதலாம். அதனால்தான் எச்சரிக்கை எடுவதற்கு அப்பால் அடுத்த நகர்வை முன்னெடுக்க அவர் தயங்குகின்றார்.
தினக்குரல் 2016/-08/21
No comments:
Post a Comment