Saturday, July 30, 2016

அதிகாரம் யாருக்கு?

வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்வதாக இருந்தால், வடமாகாண சபையின் அனுமதியுடனேயே அவற்றை மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் வடமாகாண சபையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இடம்பெறக்கூடிய திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இந்தத் தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபையும், மத்திய அரசும் மற்றொரு விடயத்தில் மோதல் போக்கில் செல்லத் தொடங்கியிருப்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது.

வடக்கில் மீள்குடியேற்றம் மேற்கொள்வதற்கான செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலணியில் வர்த்தக வாணிப அமைச்சர், ரிசாட் பதியூதீன் மற்றும் அமைச்சர் முஸ்தபா, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண சபையினதோ முலமைச்சரினதோ கருத்துக்கள் எதுவும் பெறப்படாமல் இவ்வாறான செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பது நிச்சயமாக வடமாகாண விவகாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மத்திய அரசாங்கத்தின் போக்கைத்தான் வெளிப்படுத்துகின்றது. அதேவேளையில், மீள்குடியேற்றம் என்ற பெயரில் வடக்கின் இன விகிதாசாரத்தைப் பாதிக்கும் வகையிலான குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் நியாயாகவே எழுகின்றது.

இந்த செயலணி உருவாக்கப்பட்டமை வடக்கு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என கருதி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தப் பிரேரணையினை சபையில் சமர்ப்பித்தார். அதன்போது உரையாற்றிய அவர், "வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களை வடமாகாண சபையுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு ஆளுநருடன் கலந்துரையாடி சில தீர்வுகளை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதிக்கு கூறியிருந்தேன். சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருந்தால், அவற்றினையும் எம்முடன் கலந்துரையாடியே உள்ளடக்க வேண்டும். தீர்மானங்களையும் கருத்துப் பரிமாற்றங்களை எடுக்கும் போதும், மக்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்து எமது ஆட்சேபனையினை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

அதிகார பரவலாக்கம் என்ற வகையில் மாகாண சபை உருவாக்கப்பட்டன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட அதற்கு வழங்கப்படாமல் முடக்கப்பட்ட நிலைதான் தொடர்கின்றது. அதனால்தான் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் கோரி மாகாண முதலமைச்சர்கள் குரல் கொடுத்துவருகின்றார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களுக்காக கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றார்கள். அரசியலமைப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக்கூட வழங்காமலிருப்பது மத்திய அரசின் மேலாதிக்கப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். இந்த நிலையில் இவ்வாறான செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாததாகவே இருக்கும்.

போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள போதிலும் மீள்குடியேற்றம் இன்னமும் முழுமையாகவில்லை. வலி வடக்கு உட்பட பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் இருப்பது இதற்குக் காரணமாக உள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் கூட ஒரு சிறு பகுதியினர்தான் மீளக்குடியேறியிருக்கின்றார்கள். போரினால் மூவின மக்களும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இதில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதை இலக்காகக்கொண்டுதான் இந்தச் செலயணி அமைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளவந்து குடியேற முடியும் என ஏற்கனவே வடமாகாண சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முஸ்லிம்கள் முழுமையாக மீள்குடியேறவில்லை என்பது உண்மைதான்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையானவர்கள் போர் ஆரம்பமாகமுன்னர் வசித்து வந்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்களல்ல. தொழில் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இவர்களில் ஒருபகுதியினர் வர்ததக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களில் கணிசமானவர்கள் வாடகை வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளார்கள். அவர்களுக்குச் சொந்தமான வீடுகளோ சொத்துக்களோ யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. ஆக, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களை மீளக்கொண்டுவந்து குடியேற்ற முற்படுவது திட்டமிட்ட குடியேற்றமாகவே இருக்கும். இவ்வாறான குடியேற்றங்களை முன்னின்று நடத்துவதற்காகத்தான் அமைச்சரவையின் உப குழு அமைக்கப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் நியாயமாகவே எழுகின்றது.

தமிழ் மக்களாக இருந்தால் என்ன முஸ்லிம் மக்களாக இருந்தால் என்ன மீள்குடியேற்றம் என வரும் போது வடமாகாண சபையினரே இதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும். அமைச்சரவை தீர்மானிக்க வேண்டிய விடயங்கள் அதிகாரங்களும் இருக்கின்றது. இது அவ்வாளான ஒரு அதிகாரம் அல்ல. அதிகாரங்களை வழங்குவது போன்று வழங்கி விட்டு மீண்டும் பறிப்பதாகவே இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு வடமாகாண சபை இடமளிக்கப்போவதில்லை என்பதால் இவ்வாறான உப குழு ஒன்றை அமைத்து வடமாகாண சபையின் செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? இவ்வாறான ஒரு நிலையில் கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று எப்படிச்சாத்தியமாகும்?

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை வடமாகாண அரசின் ஊடாக நிறைவேற்ற வேண்டும். அது எந்தத் திட்டமாக இருந்தாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையை ஓரங்கட்டிவிட்டு இவ்வாறான செயற்பாடுகளை தமது கைகளில் எடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் முயற்சிக்குமாயின், நல்லிணக்கம் என்று சொல்லக்கொள்வதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. அதனைத் தமிழ் மக்கள் நம்பப்போவதுமில்லை. வடமாகாண அரசுடன் கலந்துரையாடி குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே நல்லிணக்கத்தில் தமக்குள்ள அக்கறையை மத்திய அரசு வெளிப்படுத்த முடியும். அதனைச் செய்வார்களா?
(ஞாயிறு தினக்குரல்: 2016-07-24)

No comments:

Post a Comment