Sunday, August 7, 2016

மர்ம மரணங்கள்

போர் முடிவுக்கு வந்து ஏழுவருடங்கள் கடந்திருக்கும் நிலையில், முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைவதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னாள் போராளிகளான தமிழினி உட்பட பலர் புற்றுநோய் உட்பட பல்வேறு இனந்தெரியாத நோய்களால் மரணமடைந்திருக்கின்றார்கள். 103 போராளிகள் இவ்விதம் மரணமடைந்திருப்பதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலல்ல. முன்னாள் போராளி ஒருவர் கடந்த வாரம் வழங்கியுள்ள சாட்சியம் இந்த அச்சநிலையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. தடுப்பு முகாம்களில் போராளிகளுக்கு ஒருவித ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதனால்தான் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார். போர்க் குற்றங்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தத் தகவல்கள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியது. அதனால் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் முன்னெடுத்த போரை 'மக்களை விடுவிப்பதற்கான போர்' என்றுதான் இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. உண்மையில் அந்தப் போரின்போது என்ன நடைபெற்றது என்பது இரகசியமானதல்ல. அதனால்தான் அது குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடபகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். போராளிகளுக்கு ஊசி ஏற்றப்பட்டதாக இப்போது வெளிவரும் செய்திகள் மக்களின் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை என்ற கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும் இது அமையலாம். இந்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது.

முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஒருவர் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. "இறுதி யுத்­தத்­தின்­ போது சர­ண­டந்த மற்றும் கைது செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் புனர்­வாழ்­வ­ளக்­கப்­பட்டு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 107 போரா­ளிகள் இது­வரை மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­துள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மட்­டக்­க­ளப்பு வைத்­தி­யா­ச­லையில் சில தினங்களுக்கு முன்னர் மர­ண­ம­டைந்­தி­ருக்­கின்றார். இவ்­வா­றான மர­ணங்கள் திடீ­ரென ஏன் ஏற்­ப­டு­கின்­றது என்­பதை அறிந்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதற்­காக முன்னாள் போரா­ளி­களை வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென நாம் கோரி­யி­ருந்தோம். இது­வரை 800 முன்னாள் போரா­ளிகள் மருத்­து­வ­ப­ரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்கு தயார் என்று எமக்கு அறி­வித்­துள்­ளனர்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் போரா­ளிகள் கோரிக்கை விடுத்தால் உள்­நாட்டில் வைத்­திய பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு தயார் என்று அரசாங்கம் அறி­வித்­துள்­ளது. அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரான ராஜித சேனா­ரத்ன இதனை தெரி­வித்­தி­ருக்­கின்றார். "எனவே முன்னாள் போரா­ளி­களை வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் ஜனநாயக போராளிகள் அமைப்பின் பிரமுகர் முன்வைத்திருக்கின்றார். இவ்விவகாரத்தை ஒரு அரசியல் பிரச்சினையாக்காமல், ஒரு மனிதாபிமான உயிர்ப்பிரச்சினையாகக் கணித்து உடனடியாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனைக்குத் தாம் தயார் எனவும், அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண குறிப்பிட்டிருக்கின்றார். ஏற்கனவே பல்வேறு மட்டங்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஏழு வருடங்கள் ஏற்கனவே கடந்துவிட்டது. அதனால் மேலும், கால தாமதம் செய்யாமல் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் இரண்டு விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று - முன்னாள் போராளிகள். இரண்டு- போர்ப் பகுதிகளிலேயே நீண்டகாலமாக வாழ்ந்த மக்கள். "போரின்போது ஏற்படும் கந்தகக் காற்றை பல மாதகாலமாக சுவாசித்தவர்களுக்கு, குண்டுச் சன்னங்களைச் சுமந்த உடலோடு உலா வருபவர்களுக்கு, நச்சு வாயுக்களின் நடுவே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு இன்றுவரை முழுமையான மருத்துவம் சார் மதிப்பீடு (Common Medical Assessment) செய்யப்படவில்லை. நடைபெற்று முடிந்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் மிக மோசமான தாக்கங்களைக் கொண்டிருக்கும் மக்களுக்கோ அதன் ஒரு பகுதியான போராளிகளுக்கோ இது வரை எந்த விதமான மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள் வழங்கப்படவோ அல்லது அது சார்ந்த ஆய்வோ மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு மேலாக  நஞ்சூட்டப்பட்ட சுற்றாடலைச் சுவாசித்து வந்த மக்களது மற்றும் போராளிகளது நிலைமை மிக மோசமானது" மற்றொரு முன்னாள் போராளி சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மர்ம மரணங்களுக்கு இந்த மோசமான நிலைமைகளும் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இதனை ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனைகளின்றி நிரூபிக்க முடியாது. ஒருவர் இருவரல்ல சுமார் 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தாக்கங்களிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ரீதியான பரிசோதனை அவசியம் என்பதை இதுவரை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. 103 மரணங்கள் என ஊடகங்களில் செய்தி வரும் வரை தமிழ் அரசியல்வாதிகளின் பக்கத்திலிருந்து எந்தவகையான அழுத்தங்களும் வெளிவரவில்லை. இதற்கான முழுமையான திட்டம் ஒன்றை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசைக் கோருவதற்கு தமிழ்த் தலைவர்கள் எவரும் இது வரை முன்வரவில்லை. மருத்துவப் பரிசோதனைக்கான பொதுவான திட்டம் ஒன்று உருவாக்கப்படுவது அவசியம். போர்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக மாணவர்கள் குண்டுச் சன்னங்களைத் தாங்கியவர்களாகவே இன்று வாழ்ந்துவருகின்றார்கள். இவர்கள் தொடர்பாகக் கூட முழுமையான மருத்துவப் பரிசோதனையோ சிகிச்சையோ முன்னெடுக்கப்படவில்லை.

சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கோ, இயற்கை அனர்த்தமோ இடம்பெற்றால் கூட பாதிக்கப்பட்ட மக்கள் முழு அளவிலான மருத்துவ பரிசோதனைக்கும் உளவியல் சீகிச்சைக்கும் உட்படுத்தப்படும் வழமை சர்வதேச ரீதியாக மட்டுமன்றி இலங்கையிலும் உள்ளது. கொடூரமான போருக்குள் பல மாதகாலமாக வாழ்ந்த மூன்றரை இலட்சம் மக்களையும், 12,000 போராளிகளையும் இவ்வாறு முழு அளவிலான மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு அரசாங்கம் உட்படுத்தாவது ஏன்? அதனைச் செய்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உருவாகுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது காலங்கடந்த நிலையிலாவது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்வது அவசியம்.

ஞாயிறு தினக்குரல் 2016/-8/07

No comments:

Post a Comment