இறுதிக்கட்டப் போரின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்ற தகவல் வெளிவருவது இதுதான் முதன்முறையல்ல. போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியிலேயே தமிழர் தரப்பினராலும், மனித உரிமை அமைப்புக்கள் சிலவற்றினாலும், இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. நிபுணர் ஒருவரும் 2012 இல் இது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்தார். வெடிக்காத நிலையில் கொத்துக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவலை அவர் அப்போது முன்வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் ஆரம்பம் முதல் இதனை மறுதலித்தே வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இப்போது வெளிப்படுத்தப்படும் தகவல்கள் அரசாங்கத்துக்கு அதிகளவுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற ஊடகமான லண்டன் கார்டியன் இது குறித்த செய்தியை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றது. இதனையடுத்தே இந்த விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பியிருக்கின்றது. இலங்கை அரசுக்கு உள்ள பிரச்சினைகளுக்குள் இது புதிய நெருக்கடி ஒன்றைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இது அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த பின்னணியிலேயே இந்தச் செய்திகள் வெளியாகியிருந்தமையும் கவனிக்கத்தக்கது. அதனால் ஐ.நா.வின் கவனத்தையும் இது ஈர்ந்திருக்கின்றது. கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கை இராணுவத்தை நியாயப்படுத்தும் வகையில் உள்ளக விசாரணையை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமான செயல் அல்ல என்று அவர் நியாயப்படுத்தியிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டில்தான் கைச்சாதிடப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் அவர், இலங்கையின் இறுதிப்போர் 2009 இல் இடம்பெற்றிருப்பதால் அதில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தவறானதல்ல என நியாயப்படுத்த முற்பட்டிருக்கின்றார்.
எனினும், பரணகமவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருந்தார். பரணகம அதிமேதாவித் தனமாகப் பேசுகின்றார் என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருக்கின்றார். அத்துடன், கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இறுதிக்கட்டப்போரை வழி நடத்திய அமைச்சர் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கும்போது, "இலங்கை இராணுவம் இறுதி போரின் போது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. அவற்றை வாங்குவதற்குரிய பணபலமும் இருக்கவில்லை. எனவே, இது பற்றி எங்கு வேண்டுமானாலும் சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டார். கொத்துக்குண்டு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தனியான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தலைவர்களும் முன்வைக்கின்றார்கள். கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பது இவர்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.
இரண்டாவது உலகப்போரின்போது பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்ட கொத்துக் குண்டுகள், வியட்நாம் யுத்தம் உட்பட பல்வேறு களமுனைகளில் பாரியளவில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. விமானத் தாக்குதல்களுக்கு மட்டுமன்றி, ஆட்டிலறி தாக்குதல்களின் போதும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்த முடியும். போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்துமே ஆபத்தானவைதான். ஆனால், கொத்துக்குண்டுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் மிக மோசமானதாக இருக்கும். இரண்டு காரணங்களால் இவை பொது மக்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று: இந்த வகைக் குண்டுகள் பாரிய பிரதேசத்தில் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. அதாவது ஒரு குறிப்பிட்ட எல்லையையும் தாண்டி இது வெடித்துச் சிதறுவதால் பாரியளவிலான மரணங்களை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டு: இவ்வாறு போடப்படும் குண்டுகளில் சில உடனடியாக வெடித்துச் சிதறினாலும், மேலும் சில குண்டுகள் உடனடியாக வெடிக்காமலிருந்து பின்னர் பொதுமக்களுக்குப் பாரிய உயிராபத்தை அல்லது உடல் அங்க இழப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை.
பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் அபயகரமான ஒரு ஆயுதமாக கொத்துக்குண்டுகள் உள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. உட்பட பல்வேறு அமைப்புக்கள் கொத்துக்குண்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. போர்க்களங்களில் பணிபுரியும் அமைப்பு என்ற முறையில் செஞ்சிலுவைச் சங்கம் இது குறித்த தகவல்களைச் சேகரித்திருந்தது. கொத்துக்குண்டுத் தாக்குதல்களின் போது பாதிக்கப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் பொதுமக்களாகவே இருக்கின்றார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இதில் 27 வீதமானவர்கள் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. 2005 ஆம் ஆண்டிலிருந்தே கொத்துக்குண்டுகள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அமைப்புக்கள் பலவும் கையெழுத்து வேட்டைகளை ஆரம்பித்திருந்தன. இது குறித்த சர்வதேச உடன்படிக்கைகளும் அன்றிலிருந்தே தயாராகத் தொடங்கிவிட்டது. இலங்கையிலும், இறுதிப்போரின்போது ஏற்பட்ட பாரியளவிலான பொதுமக்கள் இழப்புக்கள் கொத்துக்குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டை மனித நேய அமைப்புக்கள் ஏற்கனவே முன்வைத்திருந்தன.
"2010 இல்தான் கொத்துக்குண்டுகளைத் தடைசெய்யும் உடன்படிக்கை கைச்சாத்தானது. எனவே இலங்கை இராணுவம் அதனைப் பயன்படுத்தியிருந்தாலும், அது தவறல்ல" என்ற விதமாக மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருப்பது மிகவும் மோசமான ஒரு கருத்தாகும். கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரபூர்வமான தகவல்களை லண்டன் கார்டியன் இப்போது வெளியிட்டிருக்கின்றது. வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரி ஒருவர் கூட இதனை ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார். எதிராளிகளைக் கொல்வதற்குப் பதிலாக பொதுமக்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தும் வகையில் அந்த நோக்கத்துடனேயே கொத்துக்குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது வெளிப்படையானது. எனவே, இது தொடர்பில் முறையான - நம்பகத்தன்மையான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதன்மூலமாகவே, உண்மையை வெளிப்படுத்த முடியும். இலங்கை அரசாங்கம் அதற்கு முன்வருமா?
ஞாயிறு தினக்குரல்: 2016-07-10
No comments:
Post a Comment