Wednesday, July 6, 2016

அடுத்து என்ன?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்திருக்கின்றது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹ+ஸைன் வெளியிட்ட வாய்மூல அறிக்கைதான் ஜெனீவா நோக்கி இலங்கையர்களின் கவனத்தைத் திருப்பியிருந்தது. இது வெறுமனே காலங்கடத்தலாக முடிந்துவிடப் போகின்றதா அல்லது பயனுள்ள விளைவுகளைத் தரப்போகின்றதா என்பதுதான் இப்போது எம்முன்பாக எழும்கேள்வி. ஆணையாளரின் வாய்மூலமான அறிக்கையும், அதற்குப் பதிலளித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்திய உரையும்தான் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதை மதிப்பிடுவதற்கு உதவக்கூடியவை.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக அக்கறைகாட்டி வருவதை ஆணையாளரின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றாமை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் தொடர்ச்சியாக கண்கானிப்புக்கு உட்படுத்தப்படல் போன்ற விடயங்களை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் காணப்படும் தாமதம், அவர்களுக்கு வீடுகள், வாழ்வாதார வழிமுறைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பவற்றினைப் பெற்றுக்கொடுத்து அவர்களது அன்றாட வாழ்க்கையினை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிலே தொடர்ந்தும் காட்டப்பட்டுவருகின்ற அசமந்தப் போக்கு காரணமாக நல்லிணக்கச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்கின்ற போது நல்லிணக்க ஆணைக்குழுக்களை அமைத்துச் செயற்படுவது எந்தளவுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அது வெறுமனே சர்வதேசத்தை சமாதானப்படுத்துவதற்கும், காலத்தைக் கடத்துவதற்குமான உபாயமாகத்தான் இருக்க முடியும்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேசம் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்பதை தன்னுடைய வாய்மூலமான அறிக்கையிலும் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார். இலங்கையும் அனுசரணை வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகள் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இதனை ஏற்றுக்கொண்டு இணை அநுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத் தரப்பினர் கொழும்பு வந்து இதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. இது சிங்களக் கடும் போக்காளர்களைச் சீற்றமடையச் செய்யும் என்பதும், மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு தமது அரசியலுக்கு இதனைப் பயன்படுத்திக்கொண்டுவிடும் என்பதும்தான் இலங்கை அரசாங்கத்தின் தடுமாற்றத்துக்குக் காரணம்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசம் சம்பந்தப்பட வேண்டும் என்பதை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தடுமாற்றம்தான் பிரதான காரணம். ஜெனீவா கூட்டத் தொடரிலும், பக்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், தமிழர் தரப்பினரும் இந்த விடயத்தை முக்கியமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதனை வலியுறுத்தியிருந்தார்கள். ஆணையாளர் இவ்விடயத்தை தமது கவனத்தை மீண்டும் குவித்திருப்பதற்கு இந்த அழுத்தங்களும் காரணமாக இருந்திருக்கலாம். ஆணையாளரின் அறிவிப்பு, மனித உரிமை அமைப்புக்களின் அழுதம் என்பன இலஙகை அரசாங்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், சர்வதேச சம்பந்தத்தை தாம் ஒரேயடியாக நிராகரிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது பதிலுரையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் மீது ஆணையாளர் விமசனங்களை முன்வைத்திருந்தாலும், இவை கடுமையானவையாக இருக்கவில்லை. இடையிடையே இலங்கை அரசாங்கம் செய்த நல்ல விடயங்களைப் பாராட்டியும் இருக்கின்றார். மைத்திரி - ரணில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளுக்கு வேண்டப்பட்ட ஒரு அரசாகவே அது இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சர்வதேசம் விரும்பப்போவதில்லை. இந்த நிலையில், இலங்கையில் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் நடைபெறாமையால் அதனை மனித உரிமைகள் ஆணையாளர் விமர்சித்திருந்தாலும், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க அவர் விரும்பியிருக்கமாட்டார்.  அதேவேளையில், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழர் தரப்பின் அழுத்தம் காரணமாக சில விடயங்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக மனித உரிமை பேரவையின் நம்பவகத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் இருந்துள்ளது.

எது எப்படியிருந்தாலும், பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்குசர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பது தமிழ்த் தரப்பினரால் வரவேற்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், பொறுப்புக்கூறல் செயன்முறைகள்  உள்ளக ரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயன் முறைகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட  தீர்மானமானது, ஒரு உள்ளகப் பொறிமுறையினையே ஏற்படுத்தி அதில் வெளிநாட்டு  மற்றும் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது. இதற்கு அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், சர்வதேசப்பங்களிப்பை நாம் முற்றாக நிராகரிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் இப்போது றியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தல் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கமையை சர்வதேச சம்பந்தத்துடனான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். சர்வதேச சமூகமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இவ்விடயத்தில் அதிகளவு அழுத்தங்களை இலங்கை மீது கொடுப்பது அவசியம். அதன்மூலமாகவே நம்பகத்தன்மையான ஒரு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும்.
2016-07-03 தினக்குரல்

No comments:

Post a Comment